Published : 06 Feb 2016 06:06 PM
Last Updated : 06 Feb 2016 06:06 PM

1990-களில் பிறந்தவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்... ஏன்?

1990-களின் குழந்தையா நீங்கள்? அப்படியென்றால் நிச்சயம் நீங்களும், நானும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நாம்தான் பாரம்பரியம் வாய்ந்த பழமைக்குக் கடைசித் தலைமுறையாக இருந்திருக்கிறோம். வண்ணங்கள் சூழ்ந்த தொழில்நுட்பத்தை வரவேற்பவர்களாக இருந்திருக்கிறோம். நாம்தான், களிமண் பொம்மைகளை வைத்தும் விளையாடி இருக்கிறோம்; கணிப்பொறியை வைத்தும் விளையாடியிருக்கிறோம்.

நிகழ்காலத்தை நிர்ணயித்துக் கொண்டிருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சிகளை வரவேற்றது நாம்தான். இப்போது பிறக்கும் பெரும்பாலான குழந்தைகள், ஸ்மார்ட் போனைத்தான் முதலில் பார்க்கின்றன. மொபைல் போன்தான் அவர்களின் மூன்றாவது கையாக இருக்கிறது. நமக்கு முன்னால் பிறந்தவர்கள், இப்போதுதான் மெல்ல மெல்ல இணைய உலகில் காலடி எடுத்து வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆக நாம்தான், இனிய ஞாபகங்களோடும், இணைய உலகோடும் வாழும் தலைமுறை.

நாம்தான் கீறல் விழும் வரைக்கும், கேசட்டுகளைத் திரும்பத்திரும்பப் போட்டு, பிடித்த பாட்டைக் கேட்ட கடைசித் தலைமுறை. ஐடியூனில் ப்ளேலிஸ்ட் தயாரித்து, ஹெட்போனில் கேட்கும் முதல் தலைமுறை. கொடுக்கா புளியங்காய், இலந்தப்பழம், பனங்கிழங்கு, தேன் மிட்டாய் சாப்பிட்ட கடைசி தலைமுறை. பீட்சா, பர்கர் போன்ற உணவுகளை சாப்பிட்ட முதல் தலைமுறை. தீபாவளி, பொங்கல் நாட்களில் தூர்ஷனில் ஒளிபரப்பாகும் பட்டிமன்றத்துக்காகக் காத்திருந்த கடைசி தலைமுறை. பண்டிகை நாட்களை இணையத்தில் கழிக்கும் முதல் தலைமுறை.

ஒளிஞ்சுகண்டு, தாச்சாங்கல்லு, கோலிக்குண்டு, பம்பரம், ட்ரம் கார்ட், கல்லாங்கா, பாண்டி, கில்லி, பம்பரம், கோலி, நொண்டி, திருடன் போலீஸ், மரமேறி, பச்சைக்குதிரைகளை விளையாடினோம். வயலும் வாழ்வும் போட்டால் சிணுங்கினோம். மகாபாரதம், சந்திரகாந்தா, ஓம் நமஷிவாய, ஜெய்ஹனுமான், அமுதசுரபி, சாந்தி, வாஷிங்டனில் திருமணம், காஸ்ட்லி மாப்ள நாடகங்கள் பார்த்தோம்.

நாடகத்தில் வரும் 'ஷக்கலக்க பூம்பூம்' பென்சில்தான் வேண்டும் என்று அடம்பிடித்தோம். பிரச்சனைகளின் போது கூப்பிட்டால், காப்பாற்ற 'சக்திமான்' வருவார் என்று நம்பினோம்.

ஸ்கூபி டூ, மிக்கி மவுஸ், பாப்பாய் ஷோ, டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன்கள் பார்த்தோம். மாயாவி காமிக்ஸ் படித்தோம்.

தொலைக்காட்சித் துறையில் தூர்தர்ஷன் மட்டுமே கோலோச்சிய காலத்தில், டீனேஜ் பெண்கள், 'அலைகள்', 'விழுதுகள்' நாடகங்களை விழுந்து விழுந்து பார்க்க, சிறுவர்கள் டிடெக்ட்டிவ் விஜய்யையும், எழுமாத்தூர் கெஸ்ட் ஹவுஸையும் எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தோம். ஒலியும், ஒளியும் பார்க்க ஒரு வாரம் காத்திருந்தோம்.

குச்சி ஐஸ் வாங்க, ஐஸ்காரனின் பீப் ஒலிக்காய் வீட்டு வாசலிலேயே உட்கார்ந்திருந்தோம். ஹீரோ பேனாவில் எழுதுவதைக் கவுரவமாகக் கருதினோம். பென்சிலின் முனை தீர்ந்து உடையும் வரை பிளேடால் சீவிச்சீவி எழுதினோம்.

பள்ளியில் கடலை மிட்டாய் சாப்பிட்டோம், காத்தாடி செய்து விளையாடினோம். நுங்கைத் தின்று, அதில் வண்டி செய்து ஓட்டினோம். ஐந்து பைசாவுக்கு ஆரஞ்சு மிட்டாயும், ஆசை சாக்லேட்டும் வாங்கி ஆனந்தமாய் சாப்பிட்டோம். உள்ளங்கையில் பம்பரம் விட்டு, உவகை பெற்றோம். பூவரசன் இலையில் பீப்பி செய்து ஊதினோம். தென்னை ஓலையில் வாட்ச் செய்து கட்டினோம். கண்ணாடி செய்து போட்டோம்.

கேலண்டர் அட்டையை வைத்து தேர்வு எழுதினோம். மயிலிறகை நோட்டுக்குள் வைத்து மூடினால் குட்டி போடும் என்று நம்பினோம். தீப்பெட்டியில் பொன்வண்டை அடைத்து வைத்தோம். சுடுகாயைத் தேய்த்து, சூடு போட்டோம். தேங்காய்த் தொட்டியில் மண்ணை நிரப்பி இட்லி சுட்டோம். சொப்புப் பாத்திரங்களை வைத்து, கூட்டாஞ்சோறு ஆக்கினோம்.

வகுப்பறையில் காமிக் கதைகளை, பாடப் புத்தகங்களுக்குள் வைத்துப் படித்ததும் நாம்தான். கல்லூரியில் ஸ்மார்ட் போனில் படம் பார்ப்பதும் நாம்தான். தெருவில் புழுதி பறக்க கிரிக்கெட் விளையாடியதும் நாம்தான். இப்போது செல்லும் இடமெல்லாம் செல்போனில், கிரிக்கெட் விளையாடுவதும் நாம்தான். பள்ளி விடுமுறைகளில், பண்டிகைகளில் அப்பா, அம்மா சொல்லச் சொல்ல கை வலிக்கக் கடிதம் எழுதியதும் நாம்தான். இப்போது வாட்ஸப் க்ரூப்பில், கண நேரத்தில் கலந்துகட்டி அடிப்பதும் நாம்தான்.

வீடு தேடி வரும் மணிஆர்டரை மறைத்து வைத்ததும் நாம்தான். ஆன்லைனில் வீட்டுக்குத் தெரியாமல் ரகசியமாய் பொருட்கள் வாங்குவதும் நாம்தான்.

திண்ணைப்பேச்சுக்காக ஊர் கூடி நிற்கும் முனைக்கு ஓடியதும் நாம்தான். இப்போது விடிந்தும், விடியாத பொழுதில் ஃபேஸ்புக்கில் இருப்பதும் நாம்தான். இரண்டு காலங்களையும் ஒரு சேர அனுபவித்து மகிழ்வது நாம்தான். இதைப் படித்து முடித்து ரகசியமாய்க் கண்களை துடைத்துக் கொள்வதும் நாம்தான்.

ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x