Published : 02 May 2016 11:03 AM
Last Updated : 02 May 2016 11:03 AM

எலைஜா மெக்காய் 10

கனடா பொறியாளர், கண்டுபிடிப்பாளர்

இன்ஜின் லூப்ரிகேட்டிங் தொடர்பாக பல்வேறு சாதனங்களைக் கண்டுபிடித்த கனடா பொறியாளர் எலைஜா ஜே.மெக்காய் (Elijah J. McCoy) பிறந்த தினம் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l கனடாவின் ஆன்டாரியோ மாகாணம் கோல்செஸ்டர் நகரில் (1844) பிறந்தார். பெற்றோர் அமெரிக்காவில் இருந்து தப்பி வந்த அடிமைகள். 1847-ல் குடும்பம் மீண்டும் அமெரிக்கா சென்று மிச்சிகனில் குடியேறியது.

l சிறு வயது முதலே இயந்திரங்கள் மீது மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார் எலைஜா. அமெரிக்காவில் கறுப்பினத்தவர் படிப்பது சிரமம் என்பதால், 15 வயது மகனை ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகருக்கு அனுப்பினர் பெற்றோர். அங்கு படித்து இயந்திரவியல் பொறியாளராக தகுதி பெற்று, ஊர் திரும்பினார்.

l திறன்மிக்கவராக இருந்தும், கறுப்பினத்தவர் என்பதால் வேலை கிடைக்கவில்லை. மிச்சிகன் மத்திய ரயில்வே துறையில் தீயணைப்பு வீரராகவும், இன்ஜினுக்கு ஆயில் போடும் பணியாளராகவும் வேலை செய்தார்.

l தன் வேலையை மட்டுமே பார்த்துக்கொண்டு இருக்காமல், இன்ஜின் இயங்கும் அமைப்பை ஆராய்ந்தார். நீராவி இன்ஜின்களுக்கு ஆயில் போடுவதற்கான ‘ஆயில்-ட்ரிப் கப்’ என்ற தானியங்கி லூப்ரிகேட்டிங் கப் ஒன்றை கண்டறிந்தார். அது இன்ஜினின் ஓடும் பாகங்களில் சமமாக ஆயில் பரவுமாறு செய்தது. இன்ஜின் சூடாகாமல், தடையின்றி ரயில் நீண்டநேரம் ஓட இது வழிவகுத்தது. 1872-ல் இதற்கு காப்புரிமை பெற்றார்.

l இவரது கண்டுபிடிப்பு சாதாரணமானது என்றாலும், இது ரயில்களை வேகமாக ஓடச் செய்து, தபால், பார்சல் சேவைகளை துரிதமாக்கி, அத்தொழிலையே லாபகரமாக மாற்றியது. தன் பொறியியல் திறனைப் பயன்படுத்தி இயந்திரங்களில் பல மேம்பாடுகளைச் செய்தார். தொடர்ந்து தான் கண்டறிந்த கருவிகளை மேம்படுத்தினார்.

l பொதுமக்களுக்கு பயன்படும் அயர்னிங் போர்டு, நீர்பீய்ச்சும் ஸ்பிரிங்ளர், காலணிகளுக்கான ரப்பர் ஹீல்கள் என பலவற்றைக் கண்டறிந்து, அனைத்துக்கும் காப்புரிமை பெற்றார். இவர் கண்டறிந்த சாதனங்களில் 50-க்கும் மேற்பட்டவை லூப்ரிகேட்டிங் தொடர்பானவை.

l கறுப்பினத்தவரில் மிக அதிகமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, அவற்றுக்கான காப்புரிமை பெற்றவர் என்று போற்றப்பட்டார். ‘ஸ்டோரி ஆஃப் தி நீக்ரோ’ என்ற புகழ்பெற்ற நூலில் இவரைப் பற்றிய குறிப்பு உள்ளது. அதேநேரம், கறுப்பினத்தை சேர்ந்தவர் என்பதாலேயே, பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதைப் பற்றி இவர் கவலைப்படவும் இல்லை.

l ஏறக்குறைய 60 சாதனங்களுக்கு காப்புரிமை பெற்றார். தான் கண்டறிந்த லூப்ரிகேட்டிங் சாதனங்களை உற்பத்தி செய்ய முதலீடு இல்லாததால், தனது முதலாளிகள், முதலீட்டாளர்களிடம் இவற்றுக்கான உரிமங்களை விற்றுவிட்டார். இதனால், இவர் கண்டறிந்த பல சாதனங்கள் பற்றிய குறிப்புகளில் கண்டுபிடிப்பாளராக இவரது பெயர் இடம்பெறவில்லை.

l இறுதியாக, தான் கண்டறிந்தவற்றை உற்பத்தி செய்வதற்காக 1920-ல் தன் பெயரில் ஒரு தொழிற்சாலை தொடங்கினார். அங்கு இவரது பெயர் தாங்கிய லூப்ரிகேட்டிங் சாதனங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

l வாழ்நாள் முழுவதும் எதையாவது கண்டுபிடித்துக்கொண்டே இருந்தவரும், லூப்ரிகேட்டிங் நுட்பத்தில் மகத்தான பங்களிப்பை வழங்கியவருமான எலைஜா ஜே.மெக்காய் ஒரு கார் விபத்தில் காயம் அடைந்தார். அதில் இருந்து முழுமையாக குணமடையாமலே 85-வது வயதில் (1929) மறைந்தார்.

- ராஜலட்சுமி சிவலிங்கம்



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x