Published : 13 Jul 2017 10:19 AM
Last Updated : 13 Jul 2017 10:19 AM

வைரமுத்து 10

பிரபல தமிழ்த் திரைப்பாடலாசிரியரும் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலாசிரியருமான வைரமுத்து (Vairamuthu) பிறந்தநாள் இன்று. (ஜூலை 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து.

* தேனி மாவட்டம், மெட்டூர் என்ற குக்கிராமத்தில் பிறந்தவர் (1953). தந்தை, விவசாயி. 1957-ல் இவரது குடும்பம் பக்கத்து கிராமமான வடுகப்பட்டிக்கு இடம் பெயர்ந்தது. வடுகப்பட்டி உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். 11 வயதில் கவிதை எழுதத் தொடங்கினார்.

* 14 வயதில் வெண்பா என்னும் கடினமான யாப்பு வடிவத்தில் தேர்ச்சியடைந்தவர். பள்ளி இறுதித் தேர்வில் தமிழில் முதல் மதிப்பெண் பெற்று, வெள்ளிக் கோப்பையை வென்றார். 1972-ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு பயின்றபோது, இவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘வைகறை மேகங்கள்’ வெளிவந்தது.

* சென்னைப் பல்கலைக்கழகத்தில், எம்.ஏ. தமிழ் இலக்கியத்தில் முதல் மாணவனாகத் தேர்ச்சியடைந்து, தங்கப்பதக்கம் வென்றவர். 1978-ல் ‘நிழல்கள்’ திரைப்படத்தில் இளையராஜா இசையில் இவர் எழுதிய ‘இது ஒரு பொன்மாலைப் பொழுது...’ பாடல், இவரது முதல் திரைப்படப் பாடல்.

* இதுவரை 7,500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி, வெற்றிகரமான பாடலாசிரியராக இயங்கி வந்தாலும், தமிழ் மீது கொண்ட நேசத்தால் நாவல்கள், கவிதைத் தொகுப்புகள் என நிறைய எழுதியுள்ளார்.

* இதுவரை 37 நூல்கள் எழுதியிருக்கிற இவரது சில படைப்புகள் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, கொங்கணி, வங்காளம், ரஷ்யன், நார்வேஜியன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ 23 இந்திய மொழிகளில் சாகித்ய அகாடமியால் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.

* சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை 7 முறையும், சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை 6 முறையும் வென்றுள்ளார். ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவலுக்காக 2003-ல் சாகித்ய அகாடமி விருது இவருக்கு வழங்கப்பட்டது. பத்ம, பத்மபூஷண் விருதுகள் மட்டுமல்லாமல், இலக்கியத்துக்கான உயர்ந்த விருதாகக் கருதப்படும் ‘சாதனா சம்மான்’ விருதையும் பெற்ற பெருமைக்குரியவர்.

* இவரது இலக்கியப் பணிகளைப் பாராட்டி, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியவை இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின. வாஜ்பாய் இவரைக் ‘கவி சாம்ராட்’ என்றும், அப்துல்கலாம் ‘காப்பியக் கவிஞர்’ என்றும் அழைத்தனர்.

* முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி இவருக்கு ‘கவிப்பேரரசு’ என்ற பட்டம் வழங்கினார். லண்டன் முன்னாள் கல்வியமைச்சர் ஸ்டீபன் டிம்ஸ், ‘உணர்ச்சியும் அறிவும் சரியாக இணைந்த கலவைகள் வைரமுத்து கவிதைகள்’ என்று இவரைப் பாராட்டினார்.

* ‘அமெரிக்கன் லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்’ இவரது கவிதைகளை இவர் குரலில் ஒலிப்பதிவு செய்து அழியாத ஆவணமாய்ப் பாதுகாக்கிறது. புவிவெப்பமாதல் குறித்து இவர் எழுதிய ‘மூன்றாம் உலகப்போர்’ மலேசியா டான் சோமா அறக்கட்டளையால் உலகத்தமிழில் வெளியான சிறந்த நாவலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 10,000 அமெரிக்க டாலர் பரிசு வழங்கியது.

* அண்மையில் எம்.டி.வாசுதேவன் நாயர் வெளியிட்ட இவரது மலையாளச் சிறுகதைகள் நூல் இரண்டே வாரங்களில் இரண்டாம் பதிப்பு கண்டிருக்கிறது. ‘இயற்கை மறைப்பதை மனிதன் கண்டடை கிறான்; மனிதன் மறைப்பதை இலக்கியம் கண்டறிகிறது’ என்ற படைப்புக் கொள்கையோடு எப்போதும் இயங்கிக் கொண்டேயிருக்கும் வைரமுத்து இன்று 64-ம் வயதில் அடியெடுத்து வைக்கிறார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x