Last Updated : 28 Nov, 2013 10:13 PM

 

Published : 28 Nov 2013 10:13 PM
Last Updated : 28 Nov 2013 10:13 PM

ரெண்டாவது மரணம்!

அவர்கள்... பிரியத்துக்குரிய நெருக்கமான நட்பு வட்டத்திலோ, உறவாகவோ அல்லது வெறும் வியாபார, பணியிடத் தொடர்பாகவோகூட இருக்கலாம். சட்டென மரணம் அவர்களைத் தின்று செரிக்கையில், நமக்கும் அவர்களுக்கும் இருக்கும் உறவின் அடர்த்திக்கேற்ப ஏற்படும் அதிர்வுகளை முடிந்தாலும் முடியாவிட்டாலும் எதிர்கொண்டு சமாளிக்க முயல்கிறோம்.

வழமைபோல் காலம் அந்தக் காயத்திற்கும் மருந்து போடுகிறது. பல மரணங்களிலிருந்து சட்டென வெளியேறி விடுகிறோம். சிலவற்றில் மெல்ல மெல்லவே வெளியேற முடிகிறது அல்லது வெளியேற தொடர்ந்து முயற்சிக்கிறோம்.

முன்பெல்லாம் இத்தனை அகால மரணங்களைச் சந்தித்தோமா? முன்பு இத்தனை பேர் நட்பு அல்லது உறவு வட்டத்தில் இல்லையோ? எல்லாவித சமாதானங்களையும் மீறி ஒப்புக்கொள்ளவேண்டிய உண்மை விபத்துகளால், உணவு முறையால் வரும் நோய்களால் இளம் வயது மரணங்களைக் கூடுதலாகச் சந்தித்துக் கொண்டிருக்கின்றோம்.

இப்படி எதிர்கொள்ளும் மரணங்களில், அவர்களோடு நமக்கிருக்கும் நெருக்கத்திற்குக்கேற்ப வெளியேறிவிடுகிறோம் அல்லது வெளியேற சிரமப்படுகிறோம். யாரும் அதே இடத்தில் தேங்கிவிடுவதில்லை. ஆனால் அப்படிக் கரையேறும் நம்மைச் சட்டென உள்ளே இழுத்துப்பிடித்து அமுக்குவதில் பெரும் பங்காற்றுவது நம் அலைபேசியில் எஞ்சியிருக்கும் அவர்களின் தொடர்பு எண்கள்தான்.

எண்கள் கிடைத்தவுடன் பெயர் போட்டு பதிந்து கொள்வதுபோல், இறந்துபோன ஒருவரின் எண்ணை, எழவுக்குப் போய்வந்தவுடனேயே அழித்துவிட முடிவதில்லை. அழிக்கவும் தோன்றுவதில்லை. அழிக்கலாமா வேண்டாமா என ஒரு பட்டிமன்றம் நிகழ்ந்து விடுகிறது.

எப்போதாவது அலைபேசித் தொடர்புகளை உருட்டும்போதோ, வேறு எண்கள் தேடுகையிலோ இறந்து போனவர்களின் எண் கண்களில் சிக்குவதுண்டு. சிக்குவது என்பதைவிட அது அப்படியே கண்ணில் தைத்து நேரடியாக உயிரை சுருக்கென குத்திவிட்டுத்தான் மறுவேலை பார்க்கும்.

இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தித்தாளில் கண்ட ஒரு முதலாமாண்டு நினைவஞ்சலி அறிவிப்புக் கட்டத்திற்குள் இருந்த இளைஞர் முன்பொரு காலத்தில் தொழில் ரீதியாக என்னோடு தொடர்பிலிருந்தவர். உண்மையில் அவர் இறந்துபோனதே எனக்கு தெரிந்திருக்கவில்லை. அவரின் கைபேசி எண் அந்த நொடி வரைக்கும், என் கைபேசிப் பெயர் பட்டியலில் உயிரோடு இருந்து கொண்டிருந்தது. கைபேசியில் இருந்த அவரின் பெயர் மற்றும் எண்ணையும், நினைவஞ்சலி விளம்பரத்தில் இருந்த பெயரையும் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன். கீழே வரிசையாய்க் கிடந்த குடும்பப் பெயர்களுக்குக் கீழே அந்தக் கைபேசி எண் தென்படுகிறதா எனத் தேடினேன். தென்படவில்லை. சில நினைவுக்கிளறலுக்குப் பின், சற்றே நீண்ட யோசனைக்குப் பின், அழித்துவிடுவதென முடிவெடுத்த அந்தக் கணத்தில் மூடிய இமைக்குள் எப்போதும் கண்டிராத ஒரு காரிருளையும், கொதிப்பையும் உணர்ந்தேன்.

ஒவ்வொரு முறையும் கைபேசியில் எஞ்சி நிற்கும் செத்துப்போனவர்களின் எண் கண்ணில் தைக்கும் கணத்தில் மனதில் படரும் இருள் அந்த எண்ணை என்ன செய்வது என்ற குழப்பத்தையே உருவாக்குகிறது. அப்படியே வைத்திருப்பதா? அந்த எண் என்னவாகியிருக்கும். அவர்கள் வீட்டில் யாரேனும் பயன்படுத்துவார்களா? அப்படி எவரேனும் பயன்படுத்தி அதிலிருந்து அழைப்பு செல்லும்போது, இறந்தவரின் பெயரை அழிக்காமல் வைத்திருப்பவர் அதிரமாட்டாரா? எனப் பல கேள்விகள் துளைப்பதுண்டு.

எப்போதாவது ஓரிரு வார்த்தைகள் பேசி அல்லது பேசாமலேயே இருந்தோ, நேரில் சந்தித்து உரையாடியோ என ஃபேஸ்புக் நட்பிலிருந்து திடிரென மரணத்தை எதிர்கொள்ளும் நண்பர்களை அன்ஃப்ரெண்ட் செய்யவும் மிகப்பெரிய வலிமை தேவைப்படுகிறது. அவர்களின் மரணச் செய்தி கேட்டபிறகு ஏனோ அவர்களின் நிழற்படங்கள் கூடுதல் அழகாகவும், அவர்கள் எழுதியவை மனதிற்கு கூடுதல் நெருக்கமாகவும் புலப்படுகின்றன. நிதர்சனங்களைக் கடப்பதொன்றும் அவ்வளவு எளிதானதல்ல.

கட்டுரையாளரின் வலைப்பதிவுத் தளம்>http://www.maaruthal.blogspot.in

| தி இந்து வலைத்தளத்தின் 'வலைஞர் பக்கம்' பகுதிக்காக கட்டுரைகளை அனுப்ப விரும்புவோர் webadmin@kslmedia.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு படைப்புகளை அனுப்பலாம். உங்களின் முழுப் பெயர், தொடர்பு எண், வலைப்பதிவுத் தள முகவரி அவசியம். ஏற்கெனவே வெளியிடப்படாத கட்டுரைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் |

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x