Published : 27 Jun 2016 04:03 PM
Last Updated : 27 Jun 2016 04:03 PM

யூடியூப் பகிர்வு: முதல் பெண் போர் விமானிகள்!

அனைத்துத் துறைகளிலும் பெண்களால் சாதிக்க முடியும் என்பதற்கான உதாரணம் விமானிகள் பாவனா காந்த், மோகனா சிங் மற்றும் அவானி சதுர்வேதி ஆகியோர்.

இந்திய விமானப்படையில் ஏராளமான பெண் வீராங்கனைகள் பணியாற்றி வருகின்றனர். இருந்தாலும் பெண்களை போர் விமானத்தில் பணியாற்றுவதற்கு கடந்த ஆண்டுதான் மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதற்கான ஆரம்பகட்டத் தேர்வில் ஆறு பெண்கள் இந்தப் பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். விமானப்படையின் கடினமான, சவால்மிக்க பயிற்சிகளை மேற்கொண்டு பாவனா காந்த், மோகனா சிங் மற்றும் அவானி சதுர்வேதி என்ற மூவரும் போர் விமானிகளாகத் தேர்வாகியுள்ளனர். இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக இவர்கள்தான் போர்ப்படைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பெண்கள்.

கடந்த ஜூன் 18-ம் தேதி போர் விமானத்தில் சேர்க்கப்பட்ட இவர்களுக்கு ஓராண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து சுகோய், தேஜாஸ் உள்ளிட்ட ஜெட் போர் விமானங்களை இவர்கள் இயக்க உள்ளனர். ஐந்து ஆண்டுகள் பயிற்சி மற்றும் சோதனைகளுக்குப் பிறகே, பெண் போர் விமானிகள் அனைவரும் பணியாற்ற உள்ளனர்.