Published : 12 Apr 2016 11:17 AM
Last Updated : 12 Apr 2016 11:17 AM

யூடியூப் பகிர்வு: தி ஜங்கிள் புக் - 4 வயது சிறுமியின் விமர்சனம்

திரைக்கு முன்னால் தோன்றி விமர்சனம் செய்பவர்கள், திருத்தமாக அழகுடன் இருக்க வேண்டும். பெண்ணாக இருந்தால் இன்னும் நல்லது; அப்போதுதான் அதை அதிகம்பேர் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையை பொய்யாக்கியவர் இணைய திரை விமர்சகர் ஜாக்கி சேகர். திறமையை மட்டுமே நம்பி, தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். வெள்ளிக்கிழமை ஒரு படம் வெளியானால், முதல் ஆளாய் ஜாக்கி சேகரின் விமர்சனமும் நிச்சயம் வெளியாகி இருக்கும்.

இந்த முறை அவரின் 4 வயது மகள் யாழினி, ''தி ஜங்கிள் புக்'' படத்துக்கு விமர்சனம் தந்திருக்கிறார். இது குறித்து, ஜாக்கிசேகர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருக்கிறார்.

ஐங்கிள் புக் திரைப்படத்தின் வீடியோ விமர்சனம் செய்ய லைட்டிங் செய்துக் கொண்டு இருந்தேன்.. அப்போது யாழினி கூப்பிட்டாள்.

"அப்பா?"

"என்னம்மா..?"

"ஜங்கிள் புக் விமர்சனம் நான் செய்யறேன்..."

"அட ஆமாம்ல.. குழந்தைகளுக்கான படம்! அவள் செய்தால்தான் சரியாக இருக்கும்...!"

தொடர்ந்து நான் பேசி வருவதை பார்த்து வருகின்றாள். அவளுக்கும் ஆசை இருக்கத்தானே செய்யும். ஆனால் எந்த அளவுக்கு பேசுவாள் என்று எனக்கு தெரியாது.. எவ்வளவு நேரம் ஆகும்..? தெரியாது. யாழினிக்கு விடுமுறை வேறு. சரி செய்து பார்க்கலாம் என்று முயற்சி செய்தேன். பத்து நிமிடங்கள்தான் எடுத்தாள். அவளோட பெஸ்ட்டை கொடுத்து இருக்கான்னுதான் சொல்லுவேன்.

நான்கு வயது யாழினியின் முதல் சினிமா வீடியோ விமர்சனம் உங்களுக்காக...