Published : 02 Aug 2015 09:03 AM
Last Updated : 02 Aug 2015 09:03 AM

யூடியூப் பகிர்வு: கொடைக்கானல் கலக்கத்தை பரப்பும் பெண்!

"அரசியல், அதிகார மட்டத்திலான செல்வாக்குகளின் துணையுடன், அப்பாவி மக்களுக்கு இழைத்த துரோகத்துக்கு 'பதில்' சொல்வதில் இருந்து சிலர் போக்குக் காட்டலாம்... ஆனால், இணையத்தில் வெறும் 2 நிமிட வீடியோ பதிவால் உருவான போக்கு (ட்ரெண்டிங்), அந்தச் சிலரை உலுக்குவது சாத்தியம் என்று நிரூபித்திருக்கிறது, அட்டகாசமான ஒற்றைப் பாடல் வீடியோ" | அந்த வீடியோ இணைப்பு கீழே |

இந்த முயற்சியெல்லாம் நமக்கு மிகவும் நெருக்கமான கொடைக்கானலுக்காக என்கிறபோது, நம் கவனம் அனிச்சையாக அதிகரிக்கிறது. அந்த வீடியோ பதிவைப் பார்க்கும் முன் அவலம் மிகு ஃப்ளாஷ்பேக் - சுருக்கமாக:

"என் பொண்ணு இவாஞ்சலினுக்கு வயசு 26. ஆனா பார்த்தா பெரிய பொண்ணாட்டம் தெரியாது. அவளுக்கு உடல் வளர்ச்சியும் இல்ல. மன வளர்ச்சியும் இல்ல. அவ இன்னும் வயசுக்கு வரல" - ஜூலி போன்ற எந்த ஒரு தாயும் இந்த வார்த்தைகளை உணர்ச்சி கலக்காமல் சொல்ல முடியாது.

"என் பேரு லட்சுமி (38). கல்யாணமாகி 16 வருசம் ஆச்சு. ஆனா, இன்னும் குழந்தைங்க இல்ல. இரண்டு தடவை கரு கலைஞ்சுடுச்சு. என்கிட்ட எந்தப் பிரச்சினையும் இல்ல. என் கணவருக்குத்தான் போதிய விந்தணுக்கள் இல்லைன்னு சொல்றாங்க" - எதிர்காலத்தில் தனக்கு யார் இருப்பார்கள் என்ற கேள்வியைத் தவிர்த்துவிட்டு லட்சுமி யோசிக்க முடியாது.

"என் பேரு உமா மகேஸ்வரி (22). காலேஜ்ல படிக்கிறேன். வாழ்க்கையில நல்ல ஸ்டேஜுக்கு வரணும்னு நினைக்கிறேன். ஆனா, நான் இன்னும் ஏஜ் அட்டெய்ன் பண்ணலை" - காரணம் புரியாமல் குழம்புகிறார் உமா மகேஸ்வரி.

இவையெல்லாம் 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்'தான். கொடைக்கானலில் இறங்கியவுடன் நாலா திசைகளிலும் இருந்து, இது போன்ற பிரச்சினைகளைப் பேசும் குரல்கள் நம்மைச் சூழ்கின்றன. இவை அனைத்துக்கும் ஒரே காரணம் பாதரசம்!

1983-ம் ஆண்டு கொடைக்கானலில் 'பாண்ட்ஸ் இந்தியா' (பின்னாளில் அது ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனத்துடன் இணைந்தது) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட தெர்மாமீட்டர் உற்பத்தி நிறுவனத்தில், அதிக அளவு பாதரசம் பயன்படுத்தப்பட்டது. முறையான பாதுகாப்புடன் அது கையாளப்படாததால், கடந்த 30 ஆண்டுகளாக அங்கிருக்கும் மக்களை உருக்குலைத்துவருகிறது.

இப்படி வெளியான பாதரசம், அங்குள்ள மக்களுக்கு இரண்டு வகைகளில் தீங்கிழைத்துவருகிறது. மேற்கண்ட நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டனர், அவர்களுடைய குடும்பத்தினர் மறைமுகமாகப் பாதிக்கப்பட்டனர்.

கொடைக்கானலில் இன்றைக்கு 25 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்தக் கிராமங்களில் உள்ள முன்னாள் பாதரசப் பணியாளர்களின் குடும்பங்களில் 120 பெண்களுக்கு மகப்பேறு தொடர்பான பிரச்சினைகள் உள்ளன. சுமார் 60 குடும்பங்கள் குழந்தை இல்லாமல் இருக்கின்றன.

கணவருக்குப் பாதரசத்தால் ஏற்பட்ட பாதிப்புகளின் காரணமாக, பெண்கள் குடும்பத்தைப் பிரிந்துபோன நிலையும் இங்கே ஏராளம். பெற்றோரை இழந்து அநாதரவாக விடப்பட்ட குழந்தைகள் மற்றொரு பக்கம். பாதரச நிறுவனத்துக்குத் தங்கள் பிள்ளைகளைப் பலிகொடுத்து, தற்போது தனிமரமாய் நிற்கும் மனிதர்கள் இன்னொரு பரிதாபம். இப்படி ஒரு தலைமுறை பெண்கள் பாதிக்கப்பட்டிருக்க, அடுத்த தலைமுறை அங்கே தழைக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.

"இந்தப் பிரச்சினைகளை எல்லாம் எடுத்துக் கூறி மேற்கண்ட நிறுவனத்திடமிருந்து இழப்பீடு பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், 'இங்கே எந்தப் பிரச்சினையும் இல்லை' என்று அந்த நிறுவனம் தனது பொறுப்பைத் தட்டிக்கழித்து வருகிறது.

இங்கு பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை நிரூபிக்க நோய் காரணவியல் (எபிடெமாலஜி) ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கடந்த 15 ஆண்டுகளாக இப்பகுதி மக்களும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், யாருடைய காதுகளில் விழ வேண்டுமோ அவர்களுடைய காதுகளில் அது விழவில்லை... நீதிமன்றம் உட்பட!" என்றார் டெல்லியைச் சேர்ந்த சட்ட ஆய்வாளர் உஷா ராமநாதன்.

உடல் வெப்பத்தை அறிந்துகொள்ளப் பாதரசத் தெர்மாமீட்டரை உற்பத்தி செய்த நிறுவனம் கொடைக்கானலில் உருவாக்கியுள்ள வெப்பம், இன்னும் கொதிநிலையிலேயே இருக்கிறது என்பதுதான் இன்றைய நிதர்சனம்.

சரி, இப்போது வீடியோ முயற்சிக்கு வருவோம். கொடைக்கானல் அவலத்தையே லிரிக்ஸில் பரப்பி, வசீகரமான குரலில் கவனம் ஈர்க்க வழிவகுத்துள்ளார் சோபியா அஷ்ரஃப். 2 நிமிடம் காண்போரின் நெஞ்சைக் குத்திக் கிழிக்கும் வகையில், பாடலை உக்கிரமாக காட்சிப்படுத்தியிருகிறார் சினிமா படைப்பாளியும், சுற்றுச்சூழல் போராளியுமான ரதீந்திரன் ஆர்.பிரசாத் மற்றும் அவரது குழுவினர்.

இணையவாசிகளால் ஈர்க்கப்பட்ட இந்த வீடியோ பதிவு வைரலாக பகிரப்பட்டதால், ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் ட்ரெண்டிங் இடம்பெற்றது. இதன் பலானாக, பதிவேற்றம் செய்யப்பட்ட இரண்டே நாளில் 5 லட்சம் பார்வைகளைக் கடந்திருக்கிறது

Kodaikanal Won't பாடல் வீடியோ.

"சில நிமிடங்களைச் செலவிடுவதன் மூலம் நீங்கள் காட்டும் அக்கறை, ஆயிரக்கணக்கான ஏழை மக்களின் கண்ணீரைத் துடைப்பது நிச்சயம். அதற்காக, >jhatkaa.org/unilever என்ற இணைப்பின் பக்கத்தின் வலப்புறம் உள்ள ஆன்லைன் மனுவை நிரப்பி, மக்களின் இழந்த வாழ்க்கையை மீட்டுத் தாருங்கள். நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தைப் பரிந்துரைத்து, நம் உறவுகளைக் காத்திடும் கரங்களை வலுப்படுத்துங்கள்!" என்று கோருகின்றனர், கொடைக்கானலைக் காக்க இணையக் களத்தைப் பயன்படுத்தும் இந்தச் சுற்றுச்சூழல் ஆர்வலர் படை.

| இந்தச் செய்திக்கு உறுதுணையாக இருந்த ந.வினோத் குமார் எழுதிய முக்கியக் கட்டுரை - >கொடைக்கானல்: கலக்கத்தில் மெர்க்குரிப் பூக்கள் |

Kodaikanal Won't பாடல் வீடியோ: