Published : 27 Jul 2016 04:28 PM
Last Updated : 27 Jul 2016 04:28 PM

யூடியூப் பகிர்வு: கொசுக்களுக்கு எதிராக ஒரு பசுமைப் போர்!

மழைக்காலம் எப்போதும் மகிழ்ச்சியையும் குளிர்ச்சியையும் தர வல்லது. ஆனால் அக்காலங்களில் மகிழ்ச்சி நீடித்துக்கொண்டே இருக்கிறதா? மழைக்காலத்தில் அதிகமாகப் பெருகும் கொசுக்கள் உருவாக்கும் ஆட்கொல்லி நோய்களைப் பற்றித்தான் சொல்கிறேன்.

புகையை செலுத்துவது, பூச்சிக்கொல்லிகளைத் தெளிப்பது உள்ளிட்ட கொசுக்களுக்கு எதிரான வழக்கமான நடைமுறைகளாக இருக்கின்றன. அவற்றைத் தாண்டி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் சில வழிமுறைகளைப் பின்பற்றி வருகிறது டெல்லி மாநகராட்சி.

நகரத்தை ஒட்டிய யமுனை நதியில் வளர்ந்து வரும் தாவரங்கள் அனைத்தும், கொசுக்களின் விளை நிலமாக இருக்கின்றன. அதனால் தண்ணீரில் உருவாகும் லார்வாக்களை (கொசுக்களின் ஆரம்பநிலை) வலைகளைக் கொண்டு பிரித்தெடுக்கின்றனர். பின்னர் அவற்றை ஒரு மூடப்பட்ட கலனில் சேகரிக்கின்றனர்.

அதற்குப் பிறகு கொசுக்கள் கொல்லப்பட்டு விடுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த முயற்சியால் மாசுக்களில் இருந்து யமுனை நதியைப் பாதுகாக்கவும் முடிகிறது.

யமுனையில் இருந்து எடுக்கப்பட்ட லார்வாக்களில் பெரும்பாலானவை க்யூலெக்ஸ் வகையைச் சேர்ந்ததாக இருக்கின்றன. அவை நோய்களை அதிகளவில் பரப்புபவையாக இல்லாவிட்டாலும், தொல்லைகள் தரக்கூடியவைதான். அதே நேரத்தில் டெங்கு மற்றும் மலேரியாவை உண்டாக்கும் கொசுக்கள், அருகிலிருக்கும் தூய்மையான நீரிலும் பரவுகின்றன.

இதனால் இந்த முறை, பெரிய அளவில் நாள்பட்ட தாக்கத்தை உண்டாக்குவதில்லை என்றாலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் கொசுக்களைப் போக்க உதவும் இந்த முறை நல்ல ஆரம்பம்.

காணொளியைக் காண