Published : 07 Feb 2017 03:48 PM
Last Updated : 07 Feb 2017 03:48 PM

யூடியூப் பகிர்வு: வெறும் எண்ணெய்க் கசிவல்ல, பேராபத்து- குமுறும் மீனவர்

எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே இரு கப்பல்கள் நேருக்கு நேர் மோதியதில் கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது அனைவருக்குமே தெரியும். இதைத்தொடர்ந்து கச்சா எண்ணெய் கடலில் கலந்து படலமாகப் பரவியது. இதனால் ஏராளமான மீன்கள், ஆமைகள், கடல்வாழ் உயிரினங்கள் சுவாசிக்க முடியாமல் மரணித்தன.

அதிகாரிகளின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்டது கடல் வாழ் உயிரினங்கள் மட்டுமா? இல்லை. பிளாஸ்டிக், புகை, குப்பை என இயற்கையைத் துன்புறுத்துபவர்கள் நாமாக இருக்க, கடல் அன்னையின் புதல்வர்களே எப்போதும் பாதிக்கப்படுகின்றனர்.

மீனவர்கள் கைது, வார்தா புயல், ஜல்லிக்கட்டு போராட்டம் என மீனவர்கள் அடி வாங்கிக்கொண்டே இருக்கின்றனர். இயற்கை சீற்றங்கள் தவிர்த்து, செயற்கையாகவும் அவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து நசுக்கப்படுகிறது. கச்சா எண்ணெய் அகற்றுதலில் அதிகாரிகளின் அலட்சியத்தால் மீனவ மக்களின் தொழில் முடங்கிக்கிடக்கிறது.

இதுகுறித்த தன் கருத்தை ஆணித்தரமாக முன்வைக்கிறார் ஊரூர் குப்ப செயலாளர் சரவணன்.

'நடுக்கடலில் பிடிக்கப்படும் வஞ்சிரம் வகைகளை வறுத்து உண்டு காண்பிக்கும் மீன்வளத்துறை அமைச்சர், கடலோரத்தில் செத்து ஒதுங்கும் மீன்களுக்கு என்ன பதில் சொல்வார்?' என்று கேட்கிறார் சரவணன். அரசு கச்சா எண்ணெயை பக்கெட்டுகளில் அள்ளி அகற்றும் முறையை விடுத்து, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறும் அவர், அணுக்கழிவுகளை அரசு என்ன செய்யும் என்றும் கேள்விக்கணைகளைத் தொடுக்கிறார்.

சூழலியல் மற்றும் அமைதிக்கான புகைப்படக்காரர்கள் குழு இதனை ஆவணப்படுத்தியுள்ளது.

அவரின் விரிவான பேச்சு அடங்கிய காணொலி இணைப்பு