Last Updated : 09 Sep, 2016 10:09 AM

 

Published : 09 Sep 2016 10:09 AM
Last Updated : 09 Sep 2016 10:09 AM

மெட்றாஸ் அந்த மெட்ராஸ் 6: புலம் பெயர்ந்தோர் இடையே இன்னொரு காந்தி!

இந்திய குடியரசுத் தலைவரின் செயலாளராக இருந்த கோபால கிருஷ்ண காந்தி, தென்ஆப்பிரிக் காவில் உள்ள நேடால் பல்கலைக்கழகத் தால் சட்டத்தில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டார். காந்திஜி, ராஜாஜி ஆகியோரின் பேரனான கோபால கிருஷ்ண காந்தி அந்த அங்கீகாரத்தை மகாத்மா காந்தி, அவரை தென்ஆப் பிரிக்காவில் வழக்கு நடத்த அழைத்து வந்த தாதா அப்துல்லா சேத் மற்றும் 1860 நவம்பர் 16-ல் அந் நாட்டில் பிரிட்டிஷ் அரசால் கட்டாயப்படுத்தி குடியேற்றப் பட்ட இந்தியத் தொழிலாளர்கள் ஆகி யோர் சார்பில் பெற்றுக்கொண்டார்.

இந்தியத் தொழிலாளர்கள் கோபால கிருஷ்ண காந்திக்கு வெறும் வரலாற்று நினைவு மட்டுமல்ல; டாக்டர் பட்டம் பெற்ற போது அவரைப் பற்றி அளித்த வாழ்க் கைக் குறிப்பில் தென்ஆப்பிரிக்காவில் அவர் சில ஆண்டுகள் இந்திய ஹை-கமிஷனராக (தூதர்) பதவி வகித்ததைக் குறிப்பிட்டிருந்தனர். அதைத் தவிர புலம்பெயர்ந்த இந்தியத் தொழிலாளர்களுடன் அவருக்குத் தொடர்பு இருந்ததாக வேறு குறிப்பு ஏதும் அதில் இல்லை. தமிழ்நாடு அரசுப் பணியில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக அவர் பணியாற்றியபோது அந்தத் தொடர்பு அவருக்கு ஏற்பட்டிருந்தது. அந்த அந்தஸ் தில் இலங்கையின் கண்டி நகரில் இருக்கும் இந்தியத் துணைத் தூதரக அலுவலகத்தில் பணியாற்ற அவர் நியமிக்கப்பட்டிருந்தார். அங்கிருந்த இந்திய வம்சாவளி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் விரும்பியோ அல்லது உள்ளூர் நிலைமையின் நிர்பந்தத்தாலோ தாயகமான தமிழ்நாடு திரும்ப வேண்டியிருந்தது. அதற்கு அவர் அரசு நிர்வாகம் மூலம் அனைத்து உதவிகளையும் செய்தார். அந்தத் தலைமுறைத் தொழிலாளர்களுக்குத் தாயகமாக தமிழகம் இருந்தாலும் அது குறித்து ஏதும் தெரியாமல் இருந்தனர்.

கண்டியில் இருந்த மூன்று ஆண்டு பணி அனுபவத்தையொட்டி ‘சரணம்’ என்ற தலைப்பில், உணர்ச்சிவயப்பட வைக்கும் ஒரு புத்தகத்தை எழுதினார் கோபால கிருஷ்ண காந்தி. சென்னை யைச் சேர்ந்த ‘அஃபிலியேடட் ஈஸ்ட் வெஸ்ட் (ஏ.இ.டபிள்யு.) பிரஸ்’ பதிப்பு நிறுவனம் அதை வெளியிட்டது. இலங்கையில் வாழ்ந்த இந்தியத் தமிழ் தோட்டத் தொழிலாளர் வாழ்க்கையின் அவலங்களையும் அவர்களுடைய புலம்பெயர்வையும் உள்ளத்தை உருக் கும் வகையில் அந்த நாவல் விவரிக்கிறது. பதிப்புத்துறை கண்டிராத ஒரு வரலாறும் இந்தப் புத்தக வெளியீடு தொடர்பாக அரங்கேறியது.

புத்தகங்கள் முதலில் கெட்டி அட்டையுடன் சற்றே விலை அதிகமாக புகைப்படங்களுடன் நல்ல தாளில் அச்சிடப்பட்டு வெளியிடப்படும். சில காலம் கழித்து சாதாரண தாளில் அதிக படங்கள் இல்லாமல் மலிவுப் பதிப்பாக பிரசுரிக்கப்படும். ‘சரணம்’ புத்தகத்திலோ இது நேர்மாறாக நடந்தது. ஏ.இ.டபிள்யு. நிறுவனம் இதை முதலில் மலிவுப் பதிப்பாகக் கொண்டுவந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியைச் சேர்ந்த ரவி தயாள் இதை கெட்டி அட்டை யில் விலை அதிகமுள்ள பதிப்பாகக் கொண்டுவந்தார். ஆக்ஸ்போர்டு யுனிவர்சிடி பிரஸ் நிறுவனத்தின் இந்தியத் தலைவராகப் பதவி வகித்த ரவி தயாள், கல்லூரி பாடப் புத்தக வெளியீட்டையும் தாண்டி எதையாவது சாதிக்க வேண்டும் என்று விரும்பினார். ஆக்ஸ்போர்டு யுனிவர்சிடி பிரஸ் நிறுவனத்தில் தான் பார்த்த வேலையில் இருந்து விலகினார். ‘சரணம்’ என்று புத்தகத்துக்கு இருந்த தலைப்பை ஆங்கில நாவல் வாசிக்கும் வாசகர்களுக்கு எளிதில் பிடிக்கும் வகையில் ‘ரெஃப்யூஜ்’ (Refuge) என்று மாற்றினார். தன்னுடைய புதிய நிறுவனம் மூலம் வெளியிட்டார்.

இலங்கை தோட்டத் தொழி லாளர்களின் வாழ்க்கையை அப் படியே எதிரொலிக்கும் இவ்விரு வகை நூல்களுமே வாசகர்களால் ஆதரிக்கப்பட வேண்டியவை. இலங்கைக்குச் சென்ற இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் நிலை குறித்து இந்திய அரசு - அதிலும் குறிப்பாக தமிழகம் - 150 ஆண்டுகளுக்கும் மேல் கவலைப்படாமல் கண்ணை மூடிக் கொண்டிருந்தது என்பதே உண்மை. இந்தப் புத்ததகத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். அப்படி எடுத்தால் அது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுவதுடன் தோட்டத் தொழிலாளர்களுடைய துயர வாழ்க்கையை லட்சக்கணக்கானோர் முழுதாக அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பும் ஏற்படும்.

ஐ.ஏ.எஸ்.அதிகாரியான கோபால கிருஷ்ண காந்தி லண்டனில் அமைக்கப்பட்ட ‘நேரு நினைவு மைய’த்தின் முதல் இயக்குநராகப் பொறுப்பேற்றார். நகரின் முக்கியமான கலாச்சார மையமாக அதை மாற்றினார். அவருக்குப் பிறகு அந்த மையத்தின் புதிய இயக்குநராகப் பொறுப்பேற்றவர் மெட்றாஸுடன் வலுவான தொடர்புகள் உள்ள கிரீஷ் கர்நாட்.

கன்னடத் திரையுலகின் முன்னணித் தயாரிப்பாளராகவும் நாடகாசிரிய ராகவும் தான் பல பேருக்குத் தெரியும். ஞானபீட விருது வாங்கிய முதல் நாடகாசிரியர் அவர். ஆனால், மெட்றாஸ் இப்போதும் அவரை 1960-களின் பிற்பகுதியிலும் 1970-களின் முற்பகுதியிலும் ‘மெட்றாஸ் பிளேயர்ஸ்’ என்ற ‘அமெச்சூர்’ நாடகக் குழுவுக்காக எழுதிக் கொடுத்த நாடகங்களுக்காக நினைவில் வைத்துள்ளது. (50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தில் ‘மெட்றாஸ் பிளேயர்ஸ்’ நாடக மன்றம் 240-க்கும் மேற்பட்ட நாடகங்களை அளித்துள்ளது.) அப்போது அவர் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிடி பிரஸ் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். பி.பி.சி. வானொலி நிறுவனத்துக்காக எழுதிக் கொடுத்த ‘தி ட்ரீம்ஸ் ஆஃப் திப்புசுல்தான்’ என்ற நாடகத்தை மேடையில் நடிப்பதற்கேற்ப மாற்றிக் கொடுத்தார். மெட்றாஸ் பிளேயர்ஸ் நாடக மன்றம் அதை முதன்முறையாக ஆங்கிலத்தில் அரங்கேற்றியது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. கல்லூரி அரங்கில் திறந்தவெளியில் அரங்கேற்றியது அவர்களுக்குப் புது அனுபவம்.

‘மேஜிக் லேன்டர்ன்’ என்ற நாடகக் குழு பொன்னியின் செல்வனை வெற்றிகரமாக அரங்கேற்றியதும் வாசகர்களுக்கு நினைவுக்கு வரும்.

- சரித்திரம் பேசும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x