Last Updated : 12 Aug, 2016 10:37 AM

 

Published : 12 Aug 2016 10:37 AM
Last Updated : 12 Aug 2016 10:37 AM

மெட்றாஸ் அந்த மெட்ராஸ் 2: அர்பத்நாட் குடும்பத்தின் இரு கிளைகள்!

மெட்ராஸ் நகரில் தொழிற் சாலைகளை நிறுவிய அர்பத் நாட் குடும்பத்தில் இரண்டு கிளைகள் இருந்தன. அர்பத்நாட் (வங்கி), பின்னி, பாரி என்ற மூன்றும் முன்னோடித் தொழில்நிறுவனங்கள். பின்னி நிறுவனங்களுக்குப் பிறகு, பாரி தொடங்கப்பட்டாலும் அர்பத்நாட் வங்கி என்ற தனியார் நிதி நிறுவனம் தென்னிந்தியா முழுக்க கிளை பரப்பி வேகமாக வளர்ந்தது. தவறான நிர்வாகம், தொழிலதிபர்களின் ஊதாரித் தனமான செலவுகள், சில இயக்குநர்கள் லட்சக்கணக்கில் செய்த கையாடல்கள், பொதுப் பணத்தில் சொந்தப் பெயர் களில் திருட்டுத்தனமாக சொத்துகள் வாங்கியது என்று பல்வேறு காரணங் களால் அர்பத்நாட் நிறுவனம் நொடித்தது அல்லது நொடித்ததாக 1906-ல் அறிவிக்கப்பட்டது.

இயக்குநர்களில் ஒருவர் நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு சிறைவாசம் அனுபவித்தார். இன்னொருவர் தற்கொலை செய்து கொண்டார்.தென்னிந்தியாவைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான சிறு முதலீட்டாளர்கள் தங்களுடைய வாழ்நாள் சேமிப்பை யெல்லாம் அந் நிறுவனம் மீது வைத்த நல்ல நம்பிக்கையால் முதலீடு செய்திருந்தார்கள். அந்த நிறுவனத்தின் வீழ்ச்சி தவறான நிர்வாகத்தால் அல்ல; திட்டமிட்ட சதி, மோசடி, நம்பிக்கைத் துரோகம் ஆகியவற்றின் கூட்டுக் கலவை என்று ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் தொடர் செய்திகள், கட்டுரைகள் மூலம் தோலுரித்துக் காட்டியது.

அந்தத் தொழில் குடும்பத்தின் இன்னொரு கிளை மக்களுடைய நினைவில் இருந்தே நீங்கிவிட்டது. அது தென்னிந்திய வளர்ச்சிக்கு ராணுவத் துறையிலும் சிவில் துறை யிலும் நிரந்தரமான வளத்தைச் சேர்த்தது. அக்கிளையைச் சேர்ந்த அலெக்சாந்தர் அர்பத்நாட் அந்நாளைய மதராஸ் மாகாண அரசின் தலை மைச் செயலாளராகவும் தற்காலிக கவர்னராகவும் (ஆளுநர்) பணியாற்றி னார். 1857-ல் சென்னைப் பல்கலைக் கழகம் ஏற்பட முக்கிய காரணகர்த்தராக விளங்கினார். இப்பல்கலைக்கழகத்தின் தந்தையாகவும் பிறகு துணை வேந்தராகவும் பணியாற்றிய அவருடைய பெயர், பழைய நிர்வாகி கள் பட்டியலில் ஒரு வரியில் நினைவு கூரப்பட்டதைத் தவிர, பெரிதாக அவர் போற்றவோ, பாராட்டப்படவோ இல்லை. 1858-ல் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு உரையை அவர் நிகழ்த்தினார்.

பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 1868-ல் பட்டமளிப்பு விழா உரையாற்ற அழைத்திருந்தனர். 19-வது நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர்களி லேயே மிகச் சிறந்தவர் டாக்டர் அர்நால்ட் என்று ஒருவரைப் புகழ்ந்துரைத்தார் அர்பத்நாட். நேர்மையும் பக்தியும் நிரம் பியவர், எளிமையானவர், செய்யும் செயலில் விசுவாசம் மிக்கவர், தாராள சிந்தை உள்ளவர், புலமையில் ஆழங்கால்பட்டவர், மேன்மையான வற்றிலும் நல்லனவற்றிலும் மதிப்புள் ளவர், அற்பத்தனங்களை வெறுத்தவர், பேராண்மைக்கு எடுத்துக்காட்டான உதாரண புருஷர் என்று டாக்டர் அர்னால்டை அந்த உரையில் அவர் வாயாரப் புகழ்ந்திருக்கிறார். இத்தகைய பண்புகள் இப்போது தென்னிந்தியாவில் பல்கலைக்கழகங்களில் பணியாற்று கிறவர்களில் எத்தனை பேரிடம் காணப்படுகின்றன என்ற வியப்பு எனக்கு ஏற்படுகிறது.

‘அர்பத்நாட் அண்ட் கோ’ நிறுவன அலுவலகம் இருந்த இடத்தில் இந்தி யன் வங்கியின் தலைமை அலு வலகம் இப்போது இருக்கிறது. அர்பத் நாட் பெயரில் தெரு ஒன்றும் அங்கே இருக்கிறது.

சென்னை பல்கலைக் கழகத்தை நிறுவியவரும் தென்னிந்தி யாவுக்கு கிரிக்கெட், ரக்பி விளை யாட்டுகளை அறிமுகப்படுத்திய முன் னோடியுமான அலெக்சாந்தர் அர்பத் நாட் பெயர் எங்குமே, எதற்குமே சூட்டப்படவில்லை.

அவர்தான் நினை வில் வைத்திருக்கப்பட வேண்டி யவர். பெல்ஸ் சாலை அருகிலோ, பல்கலைக்கழகத்துக்கு அருகிலோ அலெக்சாந்தர் அர்பத்நாட் பெயர் ஏதாவதொரு சாலைக்கு சூட்டப்படுமா?

- சரித்திரம் தொடரும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x