Last Updated : 05 Aug, 2016 10:25 AM

 

Published : 05 Aug 2016 10:25 AM
Last Updated : 05 Aug 2016 10:25 AM

மெட்ராஸ் அந்த மெட்றாஸ் 1: தொழிலதிபரின் இன்னொரு பக்கம்!

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை, முன்னர் மெட்றாஸ் என்று அழைக்கப்பட்டது. அந்த மெட்றாஸ் பல வரலாற்று நிகழ்ச்சிகளுக்கும் திருப்புமுனைகளுக்கும் சாட்சியாகத் தொடர்கிறது. டச்சுக்காரர்கள், போர்ச்சுக்கீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என்று பல்வேறு வெளிநாட்டவர்கள் தென்னிந்தியாவில் முதன்முதல் காலூன்றிய இடம் மெட்றாஸ். மாகாணத்தின் தலைநகரமாக இருந்த மதறாஸ் தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளிகள், முஸ்லிம்கள், ஆங்கிலேயர், குஜராத்தியர், மராட்டியர் என்று பல்வேறு பிரிவினருக்கும் உற்ற உறைவிடமாக இருந்தது. அரசியல், சமூகம், ஆன்மிகம், தொழில், வர்த்தகம், கல்வி என்று எல்லா துறைகளுக்கும் மூல விசையாக இருந்த நகரம்.

சென்னை மாநகருக்கு என்று தொகுக்கப்பட்ட, முழுமையான வரலாறு இல்லை. ஆவணங்களும் கிடையாது. இந்தக் குறையை நீக்கும் வகையில் அறிஞர் எஸ்.முத்தையா ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் ‘மெட்ரோ பிளஸ்’ இணைப்பில் 1999 நவம்பர் 15 முதல் சிறு சிறு துணுக்குகளை எழுதிவந்தார். அவர் மூலம் சென்னை நகரின் பிரமுகர்கள், இடங்கள், சம்பவங்கள் பற்றிய தகவல்கள் மீட்கப்பட்டன. ஏராளமான வாசகர்கள் அவரைத் தொலைபேசி மூலமும் கடிதம் வாயிலாகவும் தொடர்புகொண்டு தகவல்களுக்கு மேலும் பல விவரங்களைத் தெரிவித்து சுவை கூட்டினர்.

அதை ‘தி இந்து’ தமிழ் வாசகர்களுக்கும் தர வேண்டும் என்ற முயற்சியில் இத்தொடர் தொடங்கப்படுகிறது. மெட்றாஸில் இருந்தவர்கள் மட்டும் அல்ல; மெட்றாஸுக்கு வந்தவர்களும் தமிழ் நாட்டிலும் பிற மாநிலங்களிலும் இப்போதும் வாழ்கிறார்கள். வாழ வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய நெஞ்சில் நிழலாடும் நினைவுகளுக்கு இத்தொடர் புத்துயிர் ஊட்டும் என்று நம்புகிறோம். வரலாற்றைப் பாலாடையில் சிறுகச் சிறுகப் புகட்டும் முயற்சி இது.

நாடு சுதந்திரமடைந்த உடன் கடைப் பிடிக்கப்பட்ட பல பொரு ளாதாரக் கொள்கைகளை உருவாக்கியவர் செயலூக்கம் மிகுந்த டி.டி.கிருஷ்ணமாசாரி (டி.டி.கே.), ‘திருவள்ளூர் தட்டை கிருஷ்ணமாசாரி’ என்பதுதான் சுருங்கி டி.டி.கிருஷ்ண மாசாரியாகவும் பிறகு டி.டி.கே ஆகவும் மாறியது. பிறந்த நாள் நூற்றாண்டைக் கொண்டாடும் தரு ணத்தில் அவர் அமைச்சராக இருந்ததை மட்டும் நினைவுகூர்ந்த நாம் வாழும் காலம் எப்படிப்பட்டது என்பதைச் சுட்டுகிறது. நவம்பர் 26-ல் அவரை நினைவுகூர்ந்தவர்கள் அவ ருடைய பன்முகத் தன்மையையோ ரசனையுள்ள அவருடைய பிற குணங்களையோ அறிந்திருக்கவில்லை.

‘புத்தகங்களை அப்படியே விழுங்கி விடுவார்’ என்று அவரைப் பற்றி வேடிக்கையாகச் சொல்வார்கள். கிரைம் நாவல்களாக இருந்தாலும், அரசியல் சட்டம் பற்றிய மண்டைக் குடைச்சல் புத்தகமானாலும் அவைதான் அவருக்கு சாப்பாடு, காபியெல்லாம். வீட்டில், தான் படித்த புத்தகங்களைக் கொண்டு பெரிய நூலகமே வைத்திருந்தார். காலை நேரத்தில், மவுண்ட்ரோடு ஆக்ஸ்போர்டு யுனிவர்சிடி பிரஸ் புத்தகக் காட்சி நிலையத்தில் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருப்பார். அவர் எதைப் படித்து சீரணித்தாரோ அது அச்சிலும் அவர் கட்டுரைகளில் வெளிப்படும்.

1878 செப்டம்பர் 20-ல் உணர்ச்சிமிக்க 6 இளைஞர்கள் ஒரு ரூபாய் 12 அணா கடன் வாங்கி ‘தி இந்து’ என்ற ஆங்கிலப் பத்திரிகையைக் கொண்டு வந்தார்கள். அந்த திருவல்லிக்கேணி அறுவரில் ஒருவர்தான் டி.டி.ரங்காசாரியார். பத்திரிகைப் பணியை விட்ட அவர், சட்டப்படிப்பு முடித்து வழக்குரைஞராகி பின்னாளில் மாவட்ட நீதிபதியுமானார். அவருடைய மகன்தான் டி.டி.கே.

இந்து பத்திரிகையுடன் குடும்பத் தொடர்பு விட்டுவிடாமல் ‘அரிஸ்டைட்ஸ்’ என்ற பெயரில் கடிதங்கள் எழுதிவந்தார் டி.டி.கே. 1970-ல் ஜி.ஏ. நடேசன் நடத்தி வந்த ‘இன்டியன் ரெவ்யூ’ பத்திரிகைக்கு உயிர் கொடுத்தார். 1974-ல் நோய்வாய்ப்படும் வரையில் அதில் தலையங்கம் எழுதிக் கொண்டிருந்தார்.

மதராஸின் கடந்த காலத் தலை வர்கள் பற்றி ‘அரிஸ்டைட்ஸ்’ அதில் சுவைபட எழுதிவந்தார். அவருடைய கட்டுரைகளை அவரே தட்டச்சு செய் வார். “டைப்ரைட்டரைத் தொட்டு 30 ஆண்டுகள் ஆகிவிட்டன, எனவே பழக்கம் விட்டுப்போயிற்று; அத்துடன் முன்னாள் அமைச்சர்கள் நல்ல தட்டச்சர்கள் இல்லையே” என்று நண்பரிடம் வேடிக்கையாக சுய விமர்சனம் செய்துகொள்வார்.

படிப்பது, எழுதுவது தவிர அவ ருக்கு மிகவும் பிடித்த இன்னொரு பொழுதுபோக்கு அரட்டை அடிப்பது. பேச்சுத்திறமை உள்ளவர் அல்ல என்றாலும் பொதுமேடைகளில் விரிவா கப் பேசுவார். நண்பர்களுடன் பேசும் போது - அதுவும் சீட்டு விளையாட் டுக்கு இடையில் - பழைய விஷயங் களையெல்லாம் கொட்டி அளந்து அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துவார். நண்பர்களுடன் வீட்டில் சீட்டு விளையாடுவதையும், கிண்டியில் குதிரைப் பந்தயத்தில் குதிரைகள் ஓடுவதைப் பார்ப்பதையும் மிகவும் விரும்புவார். இரண்டு சந்தர்ப்பங்களிலும் பந்தயம் கட்டுவார். எனவே அவருடைய பேச்சும் பந்தயமும் பின்னிப் பிணைந்து சுவை கூட்டும். அவருக்கு நெருக்கமான நண்பர்கள் அவரை இந்நாளைய இளைஞர்கள் அழைத்துக் கொள்வதைப் போல செல்லமாக ‘மாமா’ என்று அழைப்பார்கள். அவருக்கு இசை என்றால் கொள்ளைப் பிரியம். அவருடன் சீட்டு விளையாடும் இளம் நண்பர்களில் ஒருவர் செம்மங்குடி சீனிவாச ஐயர். எங்கேயாக இருந்தாலும் டி.டி.கே. கேட்டுக்கொண்டால் செம்மங்குடி பாடத் தயங்க மாட்டார்.

- சரித்திரம் தொடரும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x