Published : 16 May 2015 09:53 AM
Last Updated : 16 May 2015 09:53 AM

மெச்னிகோவ் 10

ரஷ்ய நாட்டு நுண்ணுயிரியல் விஞ்ஞானி, நோய் எதிர்ப்பு சக்தி குறித்த ஆராய்ச்சிகளின் முன்னோடி இல்யா இல்யிச் மெச்னிகோவ் (Ilya Ilyich Mechnikov) பிறந்த தினம் இன்று (மே 16). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l ரஷ்யாவின் பானாசோவ்கா என்ற ஊரில் (தற்போது உக்ரைனில் உள்ளது) 1845-ல் பிறந்தார். தந்தை ரஷ்ய பாதுகாப்புப் படையில் அதிகாரியாகப் பணியாற்றினார். தாயும் நன்கு படித்தவர் என்பதால், இவரும் கல்வியில் சிறந்து விளங்கினார். பள்ளிப் படிப்பை முடித்ததும் உயிரியலில் நாட்டம் பிறந்தது.

l இவரை மருத்துவம் படிக்கவைப்பது அம்மாவின் ஆசை. ஆனால், உயிரி அறிவியல் கற்க விரும்பிய இவர், கார்கிவ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு 4 ஆண்டுக் கல்வியை இரண்டே ஆண்டுகளில் முடித்தார்.

l வடகடலில் உள்ள ஹெலிகோலேண்ட் தீவில் கடல் உயிரினங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக 1864-ல் ஜெர்மனி சென்றார். அங்கு உயிரியல் ஆராய்ச்சியாளர் ருடால்ஃப் லுகார்ட்டுடன் இணைந்து கீஸன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். நூல்புழுக்களில் காணப்படும் தலைமுறை மாற்றங்கள் குறித்த தனது முதல் அறிவியல் ஆய்வை லுகார்ட்டின் ஆய்வுக்கூடத்தில் மேற்கொண்டார்.

l பிறகு, மூனிச் அகாடமியில் ஆய்வுகளைத் தொடர்ந்தார். தட்டைப் புழுக்களில் காணப்படும் செல்லகச் செரிமானம் குறித்து கண்டறிந்தார். தொடர்ந்து பல ஆய்வுகளில் ஈடுபட்டார். 1867-ல் ரஷ்யா திரும்பிய இவர், ஒடீஸா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

l செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் பணிபுரிந்தார். 1870-ல் மீண்டும் ஒடீஸா பல்கலைக்கழகத்தில் விலங்கியல் மற்றும் ஒப்பீட்டு உடற்கூறியல் துறை பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.

l அடுத்தடுத்து நோய்கள் தாக்கியதால், 1882-ல் வேலையை ராஜினாமா செய்துவிட்டு மெஸினா (இத்தாலி) என்ற இடத்துக்கு சென்று தனிப்பட்ட முறையில் சோதனைக் கூடம் ஒன்றை நிறுவி நோய்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார்.

l சிதைந்த உயிரணுக்கள், தொற்றுநோய்க் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்ட பேகோசைட்கள், கேடு விளைவிக்கும் நுண்ணுயிரிகள், நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும் ரத்த வெள்ளை அணுக்களில் காணப்படும் மேக்ரோஃபேகஸ் ஆகியவற்றைக் கண்டறிந்தார்.

l இவை அனைத்தும் உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு அமைப்பின் முக்கிய அம்சங்கள். நோய் எதிர்ப்பு ஆற்றலில் முக்கிய பங்காற்றுகின்றன. அனைத்து உயிரினங்களிலும் காணப்பட்டாலும் முதுகெலும்பு உள்ள உயிரினங்களில் மட்டுமே இவை விருத்தியடைந்த நிலையில் உள்ளன என்பதையும் கண்டறிந்தார். தனது ஆராய்ச்சிகள் குறித்து பல கட்டுரைகள், புத்தகங்கள் எழுதியுள்ளார்.

l முதுமையியல் என்று பொருள்படும் ‘ஜெரன்டாலஜி’ (Gerontology) என்ற சொல்லை 1903-ல் முதன்முதலாகப் பயன்படுத்தியவர். முதுமை அடைவது மற்றும் வாழ்நாளை அதிகரிக்கச் செய்வது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார்.

l உயிரினங்களில் காணப்படும் உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பைக் கண்டறிந்ததற்காக 1908-ல் மருத்துவத்துக்கான நோபல் பரிசை பால் எர்லிச் என்பவருடன் இணைந்து பெற்றார். நோய் எதிர்ப்பு சக்தி மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் மெச்னிகோவ், 71 வயதில் (1916) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x