Published : 15 Aug 2015 10:01 AM
Last Updated : 15 Aug 2015 10:01 AM

முத்துக் குளிக்க வாரீகளா 5: தமிழினமே ஆதியினம்!

பூமியின் நிலப் பரப்பு தொடக்கத்தில் நாம் இப்போது காண்பது போல் இருக்கவில்லை.

ஏறத்தாழ 60 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியின் தெற்கிலும் வடக்கிலும் இரண்டு மிகப் பெரிய நிலப் பரப்புகள் இருந்தன. எடுவர்ட் சூயஸ் என்பவர் தெற்கில் இருந்த பெரிய நிலப்பரப்புக்குக் ‘கோண்டுவானா’ என்று பெயரிட்டார். இப் பெரிய நிலப் பரப்பில் இன்றைய தென்னமெரிக்கா, ஆப்பிரிக்கா, தென் னிந்தியா அண்டார்டிகா ஆகிய கண்டங்கள் அடங்கியிருந்தன.

அலெக்ஸாண்டர் டு டாயிட் என்ற தென்னாப்பிரிக்க நிலநூல் அறிஞர் வடக்கில் இருந்த பெரிய நிலப் பரப்புக்கு ‘லாரேஷியா’ என்று பெயரிட்டார். இந்நிலப் பரப்பில் இன்றைய வட அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா தவிர்ந்த ஆசியா ஆகிய கண்டங்கள் அடங்கியிருந்தன. கோண்டுவானாவில் ‘லெமூர்’ என்ற ஓர் உயிரினம் வாழ்ந்தது. அதனால் உயிர் நூலார் கோண்டுவானாவை ‘லெமூரியா’ என்று அழைத்தனர்.

‘லெமூர்’ என்பது விலங்கினத்துக்கும் மனித இனத்துக்கும் இடைப்பட்ட ஓர் உயிரினம் என்று உயிர்நூலார் கருதுகின்றனர். இந்த ‘லெமூர்’ இனமே பரிணாமம் அடைந்து மனித இனமாயிற்று என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ‘லெமூரி’யாவில்தான் மனித இனம் தோன்றியது என்று ஏனஸ்ட் ஹெக்கல் போன்ற விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

லெமூரியா 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் முதல் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வரை இருந்தது என்றும், 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு பெருங் கடற்கோளால் (சுனாமி) அழிந்தது என்றும், அதில் தப்பிய பகுதி இன்றைய தமிழ்நாட்டுடன் ஒட்டிக் கிடந்த குமரி நாடாக இருக்கவேண்டும் என்றும் கா. அப்பாத்துரையார் கருதுகிறார். (குமரிக் கண்டம், பக். 56-57).

‘குமரி’ என்ற பெயர் எப்படி வந்தது?

‘லெமூரியாவில்’ ஒரு காலத்தில் அரசன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ‘இளை’ என்று மகளொருத்தியும் ‘யமன்’ என்று மகனொருவனும் இருந்தனர். அரசன் தன் நாட்டை இரண்டாகப் பிரித்துத் தென் பகுதியை யமனுக்கும் வட பகுதியை இளைக்கும் கொடுத்தான்.

இளை மணம் புரிந்துகொள்ளாமல் குமரியாகவே இருந்து நாட்டை ஆண்டாள். அதனால் அவள் ஆண்ட பகுதி ‘குமரி நாடு’ என வழங்கப்பட்டது என்று தொன்மங்கள் (புராணங்கள்) கூறுகின்றன. (Tamil Antiquary no.1) இக்குமரி நாட்டில் ‘பஃறுளி’ என்ற நீண்டநெடிய ஆறும், குமரிக் கோடு என்ற மலையும் இருந்தன. இப்பகுதியை மற்றுமொரு பெருங் கடற்கோள் அழித்தது. இதனை இளங்கோவடிகள் ‘சிலப்பதிகார’த்தில் குறிப்பிடுகிறார்.

(பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக் கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள – சிலப்பதிகாரம், 2.11. 19, 20)

‘தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை’ - (குறள் 43)

என்ற திருக்குறளில் வரும் ‘தென்புலத் தார்’ என்பதற்குப் பொருள் கூற வந்த பரிமேலழகர் அதற்குப் ‘பிதிரர்’ என்று பொருளுரைத்து, பிதிரராவார் படைப்புக் காலத்து அயனால் (பிரம்மன்) படைக்கப்பட்டதோர் கடவுட் சாதி, அவர்க்கிடம் தென் திசையாதலின் ‘தென்புலத்தா’ரென்றார் என்று விரித்துரைக்கிறார்.

கடற்கோளால் குமரிக் கண்டத்தின் பெரும் பகுதி அழிந்தபோது தப்பித்தவர் கள் வடதிசையில் புலம்பெயர்ந்து வாழ்ந்தனர். அவர்கள் தென்திசையில் அழிந்து போன தங்கள் முன்னோர்களை நினைவு கூர்ந்து வழிபாடு செய்து வந்தனர். இதையே பரிமேலழகர் பதிவு செய்திருக்கிறார்.

இதில் இருந்து குமரிக் கண்டத்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்களின் முன்னோர்கள் என்று தெரிகிறது.

‘வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பில் தலைப்பிரிதல் இன்று’

- என்ற திருக்குறளின் உரையில் பரிமேலழகர் ‘பழங்குடி தொன்றுதொட்டு வருகின்ற குடி; தொன்றுதொட்டு வருதல் சேர, சோழ, பாண்டியர் என்றாற்போலப் படைப்புக் காலம் தொட்டு மேம்பட்டு வருதல்’ என்று பொருள் கூறுகிறார்.

இதில் இருந்து சேர, சோழ, பாண்டியர் படைப்புக் காலத்தில் இருந்தே இருந்து வரும் பழங்குடியினர் என்று தெரிகிறது. இதற்கு அவர்களுடைய குலமரபுச் சின்னங்களே (Totem) சான்றாகத் திகழ்கின்றன. பழங்குடியினர் தொடக்கத்தில் வேட்டையாடி வாழ்ந்தனர். அதற்காக அவர்கள் வில்லைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தி வந்தனர் என்று மனித இன (Anthropology) நூலார் கூறுகின்றனர்.

சேரர்களுடைய குலமரபுச் சின்னம் வில். இந்தச் சின்னமே அவர்கள் வேட்டையாடி வாழ்ந்த பழங்குடியினரின் வழி வந்தவர்கள் என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது. தொடக்கத்தில் மலையில் - குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மனித இனம் வேட்டையாடி வாழும் வாழ்க்கையின் சிரமங் களை உணர்ந்து, காட்டுக்கு முல்லை நிலத்துக்குக் குடிபெயர்ந்து வாழ்ந்தது.

சோழர்களுடைய குலமரபுச் சின்னம் புலி. புலி காட்டு விலங்கு. இதில் இருந்து சோழர்கள் முல்லை நிலத்தில் வாழ்ந்த பழங்குடியினரின் வழிவந்தவர்கள் என்பது தெரிகிறது. தொடக்க காலத்தில் இருந்தே கடற்கரையில் - நெய்தல் நிலத்தில் வாழ்ந்து வந்தவர்கள் மீன் பிடித்து வாழ்ந்து வந்தனர். பாண்டியர்களுடைய குலமரபுச் சின்னம் மீன். எனவே பாண்டியர்கள் மீன் பிடித்து வாழ்ந்த மீனவப் பழங்குடியினரின் வழி வந்தவர்கள் என்று தெரிகிறது.

குமரிக் கண்டத்தில்தான் பாண்டியர் கள் ‘முச்சங்கம்’வைத்துத் தமிழ் வளர்த்த னர் என்று அடியார்க்கு நல்லார் தனது சிலப்பதிகார உரையில் கூறுகிறார்.

குமரிக் கண்டத்தில் முதலில் மதுரை யில் பாண்டியர்கள் தமிழ்ச் சங்கம் வைத்தனர். அப்பகுதி கடற்கோளால் அழியவே, அவர்கள் வடக்கே குடிபெயர்ந்து கபாடபுரத்தில் இரண்டாம் சங்கம் வைத்தனர். அப்பகுதியும் கடற்கோளால் அழியவே வடக்கே குடிபெயர்ந்து இரண்டாம் மதுரையில் சங்கம் வைத்தனர் என்று ‘களவியல்’ உரையில் நக்கீரனார் கூறுகிறார்.

சங்கம், மதுரை, கபாடபுரம் என்ற சொற்கள் சமஸ்கிருதச் சொற்களாக இருக்கின்றன. மறைக்காடு என்பது வேதாரண்யம் என்று மொழிபெயர்க்கப்பட்டது போல் இச்சொல் பிற்கால மொழி பெயர்ப்பு களாக இருக்கலாம். இக்கால மதுரைக்குக் ‘கூடல்’ என்று ஒரு பெயர் உள்ளது. இது சங்கத்தைக் குறிக்கும் தூய தமிழ்ச் சொல். இப்பெயரே முற்கால மதுரைகளுக்கும் இருந்திருக்க வேண்டும்.

அதுபோலவே ‘கபாடபுரம்’ என்ற பெயர் ‘வாயில்’ என்றோ ‘வாயிலூர்’ என்றோ இருந்திருக்கலாம். இது பின்னர் சமஸ்கிருதத்தில் ‘கபாடபுரம்’ ஆகியிருக்கலாம். இவையெல்லாம் குமரிக் கண்டத்தில் தோன்றிய மனித இனம் பேசிய முதல் மொழி தமிழின் மூல மொழியாக இருக்கலாம் என்பதற்கான சான்றுகள்.

-இன்னும் முத்துக் குளிக்கலாம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: kaviko2003@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x