Published : 08 Aug 2015 10:40 AM
Last Updated : 08 Aug 2015 10:40 AM

முத்துக் குளிக்க வாரீகளா 4: பூக்களைப் பறியுங்கள்!

மறைந்த மாமனிதர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது அவரு டைய மாளிகையில் அவரைச் சந்தித்துப் பேசும் அரிய வாய்ப்புக் கிடைத்தது.

நான் அவரைப் பாராட்ட வாய் திறக்குமுன் ‘‘ஒரு பெரிய கவிஞரைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்’’ என்றார்.

நான் வாயடைத்துப் போனேன். எவ்வளவு பெரிய மனிதர்! பேசிக்கொண்டேயிருந்தோம். திடீரென்று ‘‘நீங்கர் கவிஞர். உங்களுக்கு முகல் பூந்தோட்டம் பார்க்கப் பிடிக்கும். வாருங்கள், காட்டுகிறேன்’’ என்று கூறி எழுந்தார்.

தோட்டத்துக்குப் போகும் பெரிய வாசற் கதவை அவரே தள்ளித் திறந்தார்.

நிலா ஒளியில் அந்த வண்ண மலர்த் தோட்டம் மண அலங்காரத்தோடு சாந்தி முகூர்த்த அறையில் படுத்திருக்கும் மணப்பெண் போல் இருந்தது. பேசிக்கொண்டே நடந்தோம். ஓரிடம் வந்ததும் நின்றார்.

‘‘இந்த இடத்தில் ஒரு மல்லிகைச் செடி நட்டு வளர்த்தேன். ஒருநாள் நடைப் பயிற்சி செய்துகொண்டிருந்தபோது இந்த இடத்துக்கு வந்தேன். மல்லிகைச் செடி சாய்ந்து தரையில் கிடந்தது. நல்லவேளை மிதிக்கத் தெரிந்தேன். மனம் உடைந்துபோனது. வேறு பாதையில் நடைப் பயிற்சி மேற்கொண்டேன்’’ என்றார்.

‘‘முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி இந்தக் குடியரசுத் தலைவர் மாளிகையில் மீண்டும் பிறந்திருக்கிறான்’’ என்றேன்.

‘‘நான் பூக்களைப் பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்’’ என்றார்.

‘‘கேட்க ஆவலாக இருக்கிறேன்’’ என்றேன்.

அவர் கூறினார்:

பிள்ளைப் பூ அம்மாப் பூவிடம் கேட்டது:

‘அம்மா! நாம் ஏன் மலர்கிறோம்?’

அம்மாப் பூ சொன்னது:

‘அதோ பார், மான் துள்ளுகிறது, மயில் ஆடுகிறது

அதுபோலவே நாம் மலர்கிறோம்.

பிரபஞ்ச இயக்கத்திற்கு இவை தேவை.

மனிதர்கள் நம்மைப் பார்த்து

மென்மையடைய வேண்டும் என்பதற்காகவே

நாம் மலர்கிறோம்’

அடடா! எத்தனை அற்புதமான கவிதை!

ஒரு விஞ்ஞானிக்குள் ஒரு மெய்ஞ்ஞானக் கவிஞனும் ஒளிந்திருக்கிறான்.

இயற்கைப் படைப்பு ஒவ்வொன்றும் மனிதனுக்குப் பாடம் போதிக்கும் புத்தகங்கள்.

பூக்களோ வேதங்கள். இறைவன் ஆன்மாக் களுக்கு எழுதி அனுப்பும் காதல் கடிதங்கள்.

மலர் மங்கலமானது; மகத்துவம் மிக்கது; தெய்வீகமானது. அதனால்தான் எல்லாச் சமயங்களிலும் அதற்கு முக்கியமான இடம் தரப்பட்டிருக்கிறது. குறிப்பாக, ஹிந்து மதத்தில் அதற்கு மிகச் சிறப்பான இடம் உண்டு.

‘பூசை’ என்பதே ‘பூவால் செய்யப்படுவது’ என்ற பொருளுடையது. இது தமிழர் வழிபாட்டு முறை.

ஹிந்து மதம் தாமரையைத் தலையில் வைத்துக் கொண்டாடுகிறது. அதைப் புனித மலர் என்கிறது.

தாமரை அழகு, வளம், விளைச்சல், நிரந்தரம், தூய்மை, தெய்வீகம் ஆகியவற்றுக்குக் குறியீடா கத் திகழ்கிறது.

சேற்றில் பிறந்த செந்தாமரை, அஞ்ஞானச் சேற்றில் புரளும் ஆன்மா உயர்ந்து கறையிலா தெய்வீக அழகை அடைவதற்கான ஆன்மிக உருவகமாகவே கருதப்படுகிறது.

‘எவன் அனைத்துக் கர்மங்களையும் பரமாத்மா விடம் அர்ப்பணம் செய்து, உலகியல் பற்றைத் துறந்து, கர்மங்களைச் செய்கிறானோ, அவன் தண்ணீரில் தாமரை இலை ஒட்டாமல் இருப்பது போல், பாவத்தினால் பாதிக்கப்படுவதில்லை. (5.10)’ - என்கிறது பகவத் கீதை.

தன்னுணர்வில் உயர்ந்த நிலையை அடைய முயல்பவர்கள் ஹடயோகத்தில் பத்மாசனத்தில் அமர்கிறார்கள். (பத்மம்: தாமரை)

மனிதனுடைய நுண்ணுடம்பில் அமைந்திருக் கும் ஏழு சக்கரங்களில் உச்சியில் இருக்கும் சஹஸ்ரஹாரம் தாமரைப் பூ வடிவில் காட்டப்படுகிறது.

தாமரையைப் பிரபஞ்ச மையத்தின் குறியீடாகச் காண்கிறது ஹிந்து மதம்.

விஷ்ணுவின் உந்தியில் ஒரு கமலம் மலர்ந்தது. அதன் நடுவே பிரம்மன் வீற்றிருக்கிறார் என்ற தொன்மம், தாமரையைப் படைப்புக் குறியீடாகச் சித்திரிக்கிறது.

ஒரு பொற்றாமரையில் உலகம் பிறந்ததாகப் பத்ம புராணம் கூறுகிறது. கமலயுகம் (பத்ம கல்பம்) என்ற பெயரில் ஒரு யுகமே இருந்தது என்றும் அது குறிப்பிடுகிறது.

பிரஜாபதி (மனித உற்பத்தியின் ஆதிமூலம்) பிரபஞ்சத்தைப் படைக்க விரும்பினார். அப்போது அது நீர்ம நிலையில் இருந்தது. ஜீவசத்து பிரபஞ்சத்தை வெளிப்படுத்தும் நேரத்தில் பிரபஞ்ச நீர் ஓர் ஆயிரம் இதழ்த் தங்கத் தாமரையை உண்டாக்கியது. இத்தாமரை பிரபஞ்சத்தின் கர்ப்ப வாசலாகக் கருதப்படுகிறது.

ஹிந்து மத நூல்கள் அந்த நீர்மம் ஆதி மெய்ம் மையையும் (பரம் பொருள்) பிரபஞ்ச கமலம் உற்பத்தியையும் குறிப்பதாகக் கூறுகின்றன.

ஹிந்து மதத் தெய்வங்களில் திருமகள், செந் தாமரை மலரில் வீற்றிருப்பதாகவும், கலைமகள் வெண்டாமரை மலரில் வீற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிரம்மன், விஷ்ணு, சிவன், பார்வதி, துர்கா, அக்கினி, கணேசர், ராமர், சூரியன் ஆகியோரும் தாமரையை இருப்பிடமாகக் கொண்டவர்களாகத் தொன்மங்கள் வருணிக்கின்றன.

இயத்தில் இருக்கும் கமலத்தில் ஆன்மா ஒளி வடிவில் காட்சி தருகிறது என்று மெய்ஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பெளத்த மதமும் தாமரைக்கு முக்கிய இடம் தருகிறது. மகாயான பெளத்தம் எல்லா ஆன்மாக்களும் ஒரு தாமரையில் இருந்து தோன்றின என்று கூறுகிறது.

கெளதம புத்தரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் ஒரு பழைய நூல் ‘‘சேற்றில் பிறந்தாலும் அதனோடு ஒட்டாமல் கறையற்று நிற்கும் தாமரையைப் போன்றது சிறந்த மனிதர்களின் ஆன்மா’’ என்று விளக்குகிறது.

‘ஓம் மணி பத்மே ஹும்’ என்ற பெளத்த மந்திரத்துக்குத் ‘தாமரைப் பூவில் இருக்கும் ஆபரணமே’ என்று பொருள். இது பிரபஞ்சம் என்ற தாமரையில் வாழும் மனிதனுடைய தெய்வீகத்தைக் குறிக்கும்.

இதனுடைய உட்பொருள் ‘உன்னில் நான், என்னில் நீ’ என்பதாகும். இது ஆன்ம நேய ஒருமைப்பாட்டை உணர்த்துகிறது.

தாமரை இதழ்கள் இரவில் குவிகின்றன. நீருக் குள் மூழ்குகின்றன. காலையில் எழுந்து இதழ்களைத் திறக்கின்றன. எனவே தாமரைச் சூரியனைக் குறிக்கிறது. அதனால் படைப்பையும், மறுபிறப்பையும் குறிக்கிறது என்று புராதன எகிப்திய ஆன்ம போதனைகள் விவரிக்கின்றன.

மனித இதயம் இதழ் விரிக்காத தாமரையைப் போன்றது என்றும் புத்தத் தன்மை (ஆன்மத் தன்மை) வளர்ச்சி அடையும்போது இதயத் தாமரை மலர்கிறது என்றும் பெளத்த ஆன்மிக நூல்கள் கூறுகின்றன. அதனால்தான் புத்தர் தாமரை மலரில் அமர்ந்திருப்பதுபோல் சித்திரிக்கப்படுகிறார்.

சமண மதம், ‘‘கடுந்தவம் செய்து தீர்த்தங்கர ராக உயர்ந்த அருகருக்கு இந்திரன் சமவசரணம் என்ற புஷ்பக விமானத்தை அளிப்பான்; அவருடைய காலடியில் ஒரு தாமரைப் பூவை வைப்பான்’’ என்று கூறுகிறது.

இதனையே திருவள்ளுவர் ‘மலர்மிசை ஏகினான்’ என்று குறிப்பிடுகிறார்.

தாயுமானவர் ஒருநாள் பூசைக்குப் பூப்பறிக்கப் பூங்காவுக்குச் சென்றார். அங்கே அவர் பூவில் இறைவனைத் தரிசித்தார். ஞானம் பிறந்தது.

‘‘பரம்பொருளே! நீ பூவில் இருப்பது தெரியாமல் உன்னையே பறித்து உன் சிலை மீது போட்டேனே. நீ எல்லா இடங்களிலும் இருப்பதை உணராமல் ஒரு வடிவத்தில் உன்னை வணங்கினேன். இனி, இத்தகைய பூசையைச் செய்ய மாட்டேன். (‘பண்ணேன் உனக்கான பூசை ஒரு வடிவிலே, பாவித்து இறைஞ்ச ஆங்கே, பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி அப் பனிமலர் எடுக்க மனம் நண்ணேன்’.)

மன்மதனின் அம்புகள் மலர்கள். அவன் இளையவர்களின் இதயங்களில் மலர்களாலேயே காயம் செய்கிறான்.

பெண், ஆண்கள் பலரோடு உறவுகொண்டால் அவளை விலைமகள் என்கிறார்கள். பூவோ பல வண்டுகளோடு உறவுகொள்கிறது. ஆனால், அது தவறானது அல்ல. அதுதான் பூவின் கற்பு.

பெண்ணைப் பூ என்கிறார்கள். பெண்ணையும் பூவையும் புரிந்துகொள்ள முடியாது; அனுபவிக் கத்தான் முடியும்.

‘பூக்களைப் பறிக்காதீர்கள்’ என்கிறார்கள். ஆனால், பூக்கள் நம்மைப் பறித்துவிடுகின்றன.

அன்பர்களே! நீங்கள் பூவைத் தியானம் செய்யுங்கள். ஞானியாகிவிடுவீர்கள்!

- இன்னும் முத்துக் குளிப்போம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: kaviko2003@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x