Published : 25 Jul 2015 11:18 AM
Last Updated : 25 Jul 2015 11:18 AM

முத்துக் குளிக்க வாரீகளா 2: மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும்

(சென்ற வாரக் கட்டுரையின் தொடர்ச்சி)

மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் ஒன்றுக் கொன்று எதிரானவை என்றே பலர் கருதுகின்றனர். அது தவறு.

உண்மையில் இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று உதவுபவை.

மெய்ஞ்ஞானம் அகத்தை விளக்குகிறது. விஞ்ஞானம் புறத்தை ஆராய்கிறது.

மெய்ஞ்ஞானம் படைத்தவனை விளக்குகிறது. விஞ்ஞானம் படைப்புகளை விளக்குகிறது.

மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் கணவனும் மனைவியும் போன்றவை.

ஒரு காலத்தில் விஞ்ஞானிகள், மெய்ஞ் ஞானத்தை வெறுங்கற்பனை என்று ஏளனம் செய்து வந்தனர்.

இப்போது மெய்ஞ்ஞானம் ‘நாம் அறியாத, அறிய முடியாத பிரபஞ்ச ரகசியங்களை விளக்கு கிறது. நாம் அதனிடமிருந்து கற்க வேண்டியிருக் கிறது’ என்று கூறுகிறார்கள். நடராஜர் வடிவத்தை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

நடராஜர் வடிவம் குறியீடாக அமைக்கப் பட்டிருக்கிறது. அக்குறியீடு ஆழ்ந்த பிரபஞ்ச ரகசியங்களை உணர்த்துகிறது.

கலைகளில் முதலாவதாகத் தோன்றிய கலை தான் நடனம். அது மந்திர வித்தையின் பழமை யான வடிவம். நடனம் பரவசத்தை உண்டாக்கு கிறது. அது தன்னை அறியவும், தெய்வீகத்தை அனுபவிக்கவும் உதவுகிறது. இறுதியில் தெய்வீக சாரத்தில் கலக்கச் செய்கிறது.

இந்தியாவில் அது வழிபாட்டு முறைகளில் ஒன்றாகவும் மதிக்கப்படுகிறது.

நடராஜரின் பிரபஞ்ச நடனம் (Cosmic Dance) இயக்கம், இயக்கமின்மை என்ற இரு தெய்வீக சக்தி கள் கலந்து ஆடுவதைக் குறிக்கும் குறியீடாகும்.

நடராஜர் ஒளிவட்டத்துக்குள் ஆடுகிறார். இந்த ஒளிவட்டம் படைப்பின் தொடக்கத்தில் தோன்றிய நெருப்பைக் குறிக்கும். இது பிரபஞ்சத்தையும் குறிக்கும்.

நடராஜர் மேல் வலக்கரத்தில் டமருகத்தை (உடுக்கை) ஏந்தியிருக்கிறார். டமருகம் ஓசையின் குறியீடு. இது ஓசையில் இருந்து பிரபஞ்சம் தோன் றியது என்ற தத்துவத்தை உணர்த்துகிறது. இது கால ஓட்டத்தைக் குறிப்பதாகவும் கருதப்படுகிறது.

நடராஜரின் மேல் இடக்கரம் நெருப்பை ஏந்தியிருக்கிறது. இது அழிவின் குறியீடு.

இரண்டாவது வலக்கரம் அபய முத்திரை யைக் காட்டுகிறது. இது தர்மத்தைப் பின்பற்று கிறவர்களை தீமையில் இருந்தும், அஞ்ஞானத்தில் இருந்தும் இறைவன் காப்பாற்றுவான் என்பதைக் குறிக்கிறது.

இரண்டாம் இடக்கரம் தூக்கிய காலைச் சுட்டுகிறது. இது மோட்சத்தைக் குறிக்கிறது. மேலும், இக்கரம் யானையின் தும்பிக்கையைப் போல் அமைந்திருக்கிறது. இது காட்டில் யானை வழிநடத்திச் செல்வது போல் இறைவன் அறியாமைக் காட்டில் வழிநடத்திச் செல்வதை உணர்த்துகிறது.

நடராஜர் முயலகன் என்ற குள்ளனை மிதித்துக் கொண்டிருக்கிறார். முயலகன் அறியாமையின் குறீயீடு. இது இறைவன் அறியாமையை வெற்றி கொண்டதைக் குறிக்கும். முயலகனைத் தீமையின் குறியீடாகவும் கொள்ளலாம்.

நடராஜர் உடலைச் சுற்றியிருக்கும் பாம்பு குண்டலினி சக்தியைக் குறிக்கிறது.

நடராஜரின் அவிழ்ந்து நாலா பக்கமும் ஆடும் சடை பால்வீதியை, நாள்களைக் கோள்களை அடித்துச் சிதற வைப்பதைக் குறிக்கும். ஊழிக் காலத்தில் இவையெல்லாம் அழிக்கப்படும் என்பது பொருள்.

நடராஜரின் நடனம் இரு வகைப்படும். ஒன்று, ஆனந்தத் தாண்டவம். இது, படைப்புச் செயல். மற் றொன்று ருத்ர தாண்டவம். இது, அழிவுச் செயல்.

நடராஜ நடனம் இறைவனின் ஐம்பெருஞ் செயல்களை (பஞ்ச கிரியா) குறிக்கிறது. அவை 1. ஆக்கல் 2. காத்தல் 3. அழித்தல், 4. மறைத்தல் 5. அருளல்.

இந்நடனம் காலச் சுழற்சியையும் குறிக்கிறது. பிரபஞ்ச உருவாக்கத்துக்குக் காரணமான ஹிக்ஸ் போஸானே, அதன் அழிவுக்கும் காரணமாக இருக்கும் என்று பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறுகிறார். இதை மெய்ஞ்ஞானம் என்றோ சொல்லிவிட்டது.

சிதம்பரத்தில் நடராஜர் சிலை அமைக்கப் பட்டிருப்பதிலும் பொருள் உண்டு. ‘சித்’ என்றால் மனம். அம்பரம் என்றால் ஆகாயம்.

இறைவன் மனம் என்ற ஆகாயத்தில் ஆடிக் கொண்டிருக்கிறான் என்று பொருள்.

யாருடைய மனம் ஆகாயம் போல் விரிந்து பரந் திருக்கிறதோ, அங்கே இறைவனுடைய நடனம் நிகழும்.

இறைவனுடைய நடனம் ஒரே நேரத்தில் மனத் திலும் நடக்கிறது, ஆகாயத்திலும் நடக்கிறது என்றும் பொருள் கொள்ளலாம்.

நடராஜர் சிற்றம்பலத்தில் ஆடுகிறார், பேரம் பலத்திலும் ஆடுகிறார் என்று சொல்லப்படுகிறது.

மனம்தான் சிற்றம்பலம். ஆகாயம்தான் பேரம்பலம் என்று நான் கருதுகிறேன்.

நடராஜர் நடனத்தில் மெய்ஞ்ஞானம், விஞ்ஞானம், கலை மூன்றும் அற்புதமாக, அழகாகச் சங்கமம் ஆகியிருக்கிறது.

இந்தச் சிலையை ஒரு சாதாரணச் சிற்பி உரு வாக்கியிருக்க முடியாது. மெய்ஞ்ஞானத்திலும், கலையிலும், குறியீட்டிலும் வல்லவரான யாரோ ஒரு ஞானிதான் இதை உருவாக்கியிருக்க வேண்டும்.

சிவபெருமான் சுடுகாட்டில் ஆடுவதாகக் கூறப்படுகிறது. அவர் சாம்பல் மீது ஆடுகிறார் என்பதே இங்கே குறிக்கப்படும் பொருள்.

ஊழிக் காலத்தில் எல்லாம் அழிந்த பிறகு, எது எஞ்சுகிறதோ அதைக் குறிப்பது சாம்பல்.

படைப்புக்குக் காரணமாக, ஆதிமூலமாக இருந்த பரமாணுவே பிரபஞ்சம் அழிந்த பிறகும் எஞ்சியிருக்கும். அதில், இறைவன் இயங்கிக் கொண்டிருப்பான் என்பதையே சாம்பல் குறிப்பிடுகிறது என்பது என் கருத்து.

இதே கருத்தை வைணவமும் சொல்கிறது.

விஷ்ணு ஆதிசேஷன் என்ற பாம்பின் மீது உறங்கிக் கொண்டிருக்கிறார் என்று வைணவம் கூறுகிறது.

சமஸ்கிருதத்தில் ‘சிஸ்’ என்றால் ‘எது எஞ்சுகிறதோ அது’ என்று பொருள்.

இதிலிருந்து உருவான சொல்தான் ‘சேஷம்’.

பிரளயத்தில் எல்லாம் அழிந்த பின் எது எஞ்சுகிறதோ, அதில் இறைவன் உறங்கிக் கொண்டிருப்பான் என்பது பொருள்.

இங்கே ‘உறங்கிக் கொண்டிருப் பான்’ என்றால் மனிதர் மாதிரி உறங்கிக் கொண்டிருப்பான் என்று பொருள் அல்ல.

இதை ‘அறிதுயில்’ என்று வைண வம் கூறுகிறது. அதாவது, இறை வன் எல்லாம் அறிந்தபடியே உறங்குகிறான் என்று பொருள்.

பிரளயத்தில் எல்லாம் அழிந்து விடும். எனவே ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற வேலைகள் இல்லாத தால் இறைவன் இயங்காமல் இருக்கிறான் என்பதையே உறக்கம் குறிப்பிடுகிறது.

அணுவுக்குள் எலெக்ட்ரான் இடை விடாமல் ஆடிக் கொண்டிருக்கிறது. நியூட்ரான் அசைவற்று அமைதியாக இருக்கிறது.

நடராஜரை எலெக்ட்ரானின் குறியீடாகவும், விஷ்ணுவை நீயூட்ரானின் குறியீடாகவும் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

பிரபஞ்சத்தை உருவாக்கியது ஹிக்ஸ் போஸான் பரமாணு என்று விஞ்ஞானம் கூறு கிறது. அந்தப் பரமாணுவையே உருவாக்கியது பரம்பொருள். அதாவது, இறைவன் என்று மெய்ஞ்ஞானம் கூறுகிறது.

‘பூமியில் உள்ள யாவும் அழிந்தே

போகும். மிகுந்த கண்ணியமும்

பெருமையும் உடைய உமது

இறைவனின் திருமுகமே என்

றென்றும் நிலைத்திருக்கும்.’

(55.26,27)

என்று திருக்குரான் கூறுகிறது.

இங்கு திருமுகம் என்பது இறைவனுடைய மூலச் சத்தைக் (தாத்) குறிக்கும்.

சைவமும், வைணவமும் கூறும் அதே கருத் தையே இஸ்லாமும் கூறுகிறது. இதில் வியப்பேதும் இல்லை.

உண்மை ஒன்றே! அதை வெவ்வேறு சமயங்கள் வெவ்வேறு குறியீட்டு மொழியில் சொல்கின்றன.

‘ஏகம் ஸத்; விப்ரா பஹூதா வதந்தி’ என்று ரிக் வேதம் கூறுகிறது.

‘உண்மை ஒன்றே; அதை ஞானியர் பல்வேறு விதமாகச் சொல்கிறார்கள்’ என்பது இதன் பொருள்.

சுய அறிவற்ற பரமாணு இந்தப் பிரபஞ்சத்தைக் கட்டமைத்தது என்று விஞ்ஞானம் கூறுகிறது.

சகல அறிவும், சகல வல்லமையும் உடைய பரம் பொருள்தான் (இறைவன்) இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கியது என்று மெய்ஞ்ஞானம் கூறுகிறது.

இதுதான் விஞ்ஞானத்துக்கும் மெய்ஞ்ஞானத் துக்கும் உள்ள வேறுபாடு.

- இன்னும் முத்துக் குளிப்போம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: kaviko2003@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x