Published : 03 Oct 2015 08:50 AM
Last Updated : 03 Oct 2015 08:50 AM

முத்துக் குளிக்க வாரீகளா 12: தீமையும் நன்மைக்கே!

இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த இறைவன் நல்லதை மட்டும் படைத்திருக்கலாமே, தீயதை ஏன் படைக்க வேண்டும்?

நல்ல மனிதர்களை மட்டும் படைத்திருக் கலாமே, தீய மனிதர்களை ஏன் படைக்க வேண்டும்?

இன்பத்தை மட்டுமே படைத்திருக்கலாமே, துன்பத்தை ஏன் படைக்க வேண்டும்?

இந்தக் கேள்விகள் நம் இதயங்களில் எழாமல் இருப்பதில்லை.

நல்லதற்காகத்தான் தீயது படைக்கப் பட்டிருக்கிறது.

நல்ல மனிதர்களின் நன்மைக்காகவே தீய மனிதர்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இன்பத்துக்காகவே துன்பம் படைக்கப்பட்டிருக்கிறது.

இப்படிச் சொன்னால் ஏற்பீர்களா?

ஆனால், இதுதான் உண்மை!

இதுதான் படைப்பின் மர்மம். இதுதான் வாழ்க்கையின் ரகசியம்.

இதற்கு இயற்கை விதி (Law of Nature) என்று பெயர்.

இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த இறைவன் அது சிறப்பாக இயங்குவதற்காக விதி ஒன்றை உண்டாக்கினான். அந்த விதிப்படியே அண்ட சராசரமும் இயங்குகின்றன.

இந்த விதிதான் ‘இயற்கை விதி’ எனப்படுகிறது. வேதங்களும் வேத சம்ஹிதைகளும் இதை ‘ரித’ என்கின்றன.

இமானுவேல் கான்ட் (Immanuel Kant) தம் அரசுக் கொள்கையை விளக்கும்போது, இயற்கை விதியில் அடங்கியுள்ள நுட்பமானதொரு செயற்பாட்டை உணர்த்துகிறார்.

மனிதன் இயல்பாகவே சமூகத்தோடு இசைந்து வாழும் பண்பும், சமூக எதிர்ப்புப் பண்பும் ஒருங்கே கொண்டவன் என்பது அவர் கண்டறிந்த உண்மை.

சமூக எதிர்ப்புப் பண்பும் ஒரு வகையில் நன்மைக்கே பயன்படுகிறது. இப்பண்பு இல்லை யென்றால் மனிதனுடைய ஆற்றல்கள் வெளிப்பட வாய்ப்பு இல்லாமல் போய்விடும். இத்தகைய இரு வகையான முரண்பட்ட பண்புகளினால் விளையும் போராட்டமே மனித வாழ்வின் எல்லா வகையான முன்னேற்றங்களுக்கும் காரணமாக அமைகிறது என்று அவர் கூறுகிறார்.

பொறாமை, வீண் பெருமை, அதிகார வேட்கை, உடைமைப் பற்று போன்ற சமூக எதிர்ப்புப் பண்புகளை நன்மையைக் கருதியே இறைவன் அமைத்திருக்கிறான். இதனால் நிகழும் போராட்டத்தின் விளைவாக மனிதனின் உள்ளே அடங்கிக் கிடக்கும் ஆற்றல்கள் வெளிப்பட்டு அவனுடைய இயற்கைத் திறன்கள் மேலும் வளர்ச்சி அடைகின்றன என்பது அவர் கருத்து.

‘ஒவ்வோர் ஊரிலும் தீயவர் சிலரை நானே உண்டாக்கி வைத்திருக்கிறேன்’ என்று இறைவன் கூறியதை குர் ஆன் எடுத்துரைக்கிறது.

தத்துவஞானி கான்ட் கண்டறிந்த ‘இயற்கை விதி’ தொடர்பான இந்த நுட்பமான செயற் பாட்டைக் கம்பர் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே (ஒன்பதாம் நூற்றாண்டு) அறிந்திருந்தார் என்பது வியப்பை ஏற்படுத்துகிறது.

‘சமூக எதிர்ப்பான தீய சக்திகளும் நன்மைக் காகவே தோன்றுகின்றன’ என்ற கருத்தைக் கம்பர் தம் காப்பியத்தில் பல இடங்களில் உணர்த்துகிறார்.

அமைதியான அயோத்தியில் தங்கள் அன்பிற்குரிய இராமன் முடிசூடப் போகிறான் என்ற மிகழ்ச்சியை மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது கூனி தோன்றுகிறாள். அக்கொடியவளை அறிமுகப்படுத்தும்போதே,

‘இன்னல் செய் இராவணன்

இழைத்த தீமைபோல்

துன்னருங் கொடுமனக்

கூனி தோன்றினாள்’ (1445)

என்றே கம்பர் அவளை வருணிக்கிறார். இதன் வாயிலாக அக்கொடியவளும் ‘இராவண வதம்’ என்ற ஒரு நன்மைக்காகவே தோன்றினாள் என்று கம்பர் உணர்த்துகிறார்.

கூனியின் தீய சொற்களைக் கேட்டு தூயவளாகிய கைகேயியின் மனமும் மாறுகிறது. அவள் இவ்வாறு சிந்தை திரிந்ததும் ஒரு நன்மைக்கே என்று கம்பர் கூறுகிறார்.

‘தீய மந்தரை

இவ்வுரை செப்பலும், தேவி

தூய சிந்தையும்

திரிந்தது, சூழ்ச்சியின் இமையோர்

மாயையும், அவர் பெற்ற

நல்வரம் உண்மையாலும்

ஆய அந்தணர்

இயற்றிய அருந்தவத்தாலும்’ (1483)

இராவணன் கொடுமைகளிலிருந்து விடுதலை பெறத் தேவர்கள் பெற்ற வரமும் அந்தணர் இயற்றிய அருந்தவமும்தாம் கைகேயியின் தூய சிந்தை திரியக் காரணமாயின என்று இங்கே கம்பர் உணர்த்துவதைக் காணலாம். ‘இமையோர் மாயை’ என்பதன் மூலம் இயற்கை விதியே இவ்வாறு அவளைத் தூண்டியது என்றும் தெரிவிக்கிறார். மேலும்

‘அரக்கர் பாவமும்

அல்லவர் இயற்றிய அறமும்

துரக்க நல்லருள்

துறந்தனள் தூமொழி மடமான்’ (1484)

என்று இதை விளக்கமாகவே அவர் உணர்த்துகிறார்.

அதே பாடலில்,

‘இரக்கம் இன்மையன்றோ இன்று

இவ்வுலகங்கள் இராமன்

பரக்கும் தொல்புகழ்

அமுதினைப் பருகுகின்றதுவே’

என்று கூறுகிறார். இதன்மூலம் கைகேயியின் இரக்கமின்மை என்ற தீய பண்பினாலேயே இராமன் அளப்பரிய வீரமும் உன்னதமான பண்புகளும் வெளிப்பட்டுப் பெரும்புகழ் பெற்றான். மக்களும் அவனைப் பாராட்டி மகிழ்ந்தனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.

கொடுமனக் கூனி சூழ்ச்சி செய்யாதிருந்தால், தூய கைகேயியின் மனம் திரிந்திருக்காது. அவள் மனம் திரிந்திராவிட்டால் இராமன் காடு சென்றிருக்க மாட்டான். வனவாசம் காரணமாக வெளிப்பட்ட அவனுடைய அளப்பரிய ஆற்றலும் உன்னதமான பண்புகளும் உள்ளேயே அடங்கிக் கிடந்திருக்கும். இராவண வதமும் நிகழ்ந்திராது.

தீயையே எரித்த சீதையின் கற்பின் ஆற்றலும் வெளியுலகுக்குப் புலப்பட்டிராது. பரதனின் மகோன்னதமான பண்பு தெரியாமலே போயிருக்கும். கிட்கிந்தையிலும் இலங்கையிலும் நல்லரசுகள் ஏற்பட வழியில்லாமல் போயிருக்கும். இலக்குவன், அனுமன் ஆகியோருடைய ஒப்பற்ற ஆற்றல்கள் வெளிப்படாது வீணாகியிருக்கும். இராமன் கிட்கிந்தை, இலங்கை அடங்கிய ஒரு பேர ரசுக்குத் தலைவனாக ஆகியிருக்க மாட்டான். இவ்வளவு நன்மைகளும் கூனி, கைகேயி ஆகிய இரு தீய சக்திகளின் தோற்றத்தின் காரணமாகவே ஏற்பட்டன என்பதையே கம்பர் இங்கே காட்ட விரும்புகிறார்.

நல்லவளாயிருந்த கைகேயியே தீயவளாக மாறினாள் என்று காட்டியதன் வாயிலாக ஒரே இடத்திலேயே இவ்விரு வகை முரண்பட்ட பண்புகளும் அமைந்திருந்து, ஒரு பெரிய நண்மைக்காகத் தக்க நேரத்தில் தீய பண்பு செயற்படத் தொடங்கும் என்ற நுட்பத்தையும் கம்பர் உணர்த்துகிறார்.

- இன்னும் முத்துக் குளிக்கலாம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: kaviko2003@yahoo.com

முந்தைய அத்தியாயம்:>முத்துக் குளிக்க வாரீகளா 11: நாவாய் மொழி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x