Last Updated : 05 Aug, 2015 03:21 PM

 

Published : 05 Aug 2015 03:21 PM
Last Updated : 05 Aug 2015 03:21 PM

மான்டேஜ் மனசு 7 - அழகல்ல காதல்... காதலே அழகு!

வஸந்த் இயக்கும் படங்கள் மனசுக்கு நெருக்கமானவை. ஒவ்வொரு படமும் செதுக்கி வைத்த சிற்பம் போல இருக்கும். மிக மென்மையாக கடந்துபோகும் அந்த கதாபாத்திரங்கள் ஏதோ ஒரு காலகட்டத்தில் நம் நிஜ வாழ்வில் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி சந்திக்கும் நபர்கள் சிலாகிக்கும் உறவாக மனதில் பதியமிடும்.

பொதுவாக வஸந்த்தின் படங்களில் பெண் கதாபாத்திரத்துக்கு தனித்துவம் இருக்கும். ஹீரோ - ஹீரோயின் கதாபாத்திர வடிவமைப்பு, லாஜிக் மீறல் பற்றிப் பேசப்படும் இந்த தருணத்தில் வஸந்த் பட ஹீரோயின்கள் அதை அநாயசமாக கடந்து போவார்கள்.

'ஆசை' சுவலட்சுமி, 'ரிதம்' மீனா, 'சத்தம் போடாதே' பத்மப்ரியா என்று அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகும். இது வஸந்த்தால் மட்டும் எப்படி முடிகிறது? என்று யோசித்துப் பார்த்ததண்டு. அந்த கதாபாத்திரத்தை வடிவமைக்க எப்படி மெனக்கெட்டிருப்பார்? என்று மண்டையைப் பிய்த்துக்கொண்டதுண்டு.

வஸந்த் ஒரு கதாபாத்திரத்துக்கு முதலில் ஆட்டிடியூட் என்ற ஒன்றை உருவாக்கிவிடுகிறார். அதுவே கதாபாத்திரத்துக்கான தேவையை பூர்த்தி செய்துவிடுகிறது. இதை ரொம்ப ரொம்ப லேட்டாக உணர்ந்தவன் நான்.

இதைப் புரிந்துகொள்வதற்காகவே வஸந்த் படங்ககளை நான் திரும்பத் திரும்பப் பார்ப்பதுண்டு. 'ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே!' படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கும்போதுதான் இது தமிழோட கதை மாதிரியே இருக்கே என்று ஆச்சர்யப்பட்டேன்.

யார் அந்த தமிழ் என்றுதானே கேட்கிறீர்கள்?

தமிழ் - யாழினி காதல் சொல்லித் தீராது. சொல்லில் தீராது.

டைம் மிஷினில் ஏறி 2009-க்குள் பயணிக்கலாமா?

தமிழ் அப்போது கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தான். யாழினி முதலாமாண்டுக்கு முன்னேறி இருந்தாள்.

கல்லூரி ஆரம்பித்த முதல் நாளில் குதூகலமும், உற்சாகமுமாக பேருந்து நிலையம் நோக்கி விரைந்தான் தமிழ். அங்கு குவிந்திருந்த பெருங்கூட்டத்தில் தன்னையும் இணைத்துக்கொண்டான்.

அன்றைய காலைப் பொழுதை சுடிதார் அணிந்தவர்கள் அழகாக்கிக் கொண்டிருந்தனர். அதில் ஒற்றைப் பெண் மட்டும் தமிழை திரும்பத் திரும்பப் பார்க்க வைத்தாள்.

அமைதி தவழும் முகம், திருத்தமான உடை, அலட்டல் இல்லாத இயல்பான புன்னகை இழைந்தோடும் பார்வையால் தமிழை மெஸ்மரிசம் செய்தாள்.

திரும்பிப் பார்த்தவள் விரும்பிப் பார்க்க வேண்டும் என்று தமிழ் நினைத்தான்.

ஒரே பேருந்தில் முண்டியடித்து ஏறிய கூட்டத்தில் யாழினிக்கு இருக்கை கிடைத்தது. யாழினியின் பின் இருக்கையில் தமிழ் அமர்ந்தான். ஒருவருக்குப் பின் ஒருவர் தற்செயலாய் அமர்ந்தனர்.

அதற்குப் பிறகு, தற்செயல் என்று சொல்லமுடியாதபடி இரண்டு மூன்று மாதங்களாக தமிழ் யாழினிக்குப் பின் இருக்கையிலேயே அமர்ந்தான்.

தமிழ், யாழினியை கண்களால் அளவெடுக்கவில்லை. அழகாய் இருக்கிறாளா என்று மனசுக்குள் கேட்டுப்பார்க்கவில்லை. நல்லா சிரிக்கிறா... நல்லா டிரஸ் பண்றா என்று எதிலும் மயங்கவில்லை.

அவள் முகத்தில் இருக்கும் அமைதி, பார்வையில் தெளிவு இருப்பதை கண்டுகொண்டான். இவள்தான் என் தேவதை. என் வளர்ச்சிக்கான உந்து சக்தி என்பதை உணர்ந்தான்.

அதற்கடுத்த இரண்டு மாதங்கள் யாழினியைக் காணவில்லை. அதற்காக தமிழ் தவிக்கவில்லை. ஆனால், எங்கே போய் விட்டாள் என கவலைப்பட்டான்.

ஒரு நாள் சைக்கிளில் யாழினி செல்வதைப் பார்த்து பின் தொடர்ந்து வீட்டைக் கண்டுபிடித்துவிட்டான்.

சில நாட்களுக்குப் பிறகு, ஒரு நிச்சயதார்த்த விழாவுக்கு சென்று வந்தவன் யாழினி வீட்டை நெருங்கினான்.

அப்போது யாழினி தன் தோழியிடம் தமிழைக் காட்டி ஏதோ சொல்லி சிரித்துக்கொண்டிருந்தாள். இதை எதேச்சையாகப் பார்த்த தமிழுக்கு பயங்கர கோபம்.

சைக்கிளை நிறுத்திவிட்டு, ஒரு ரூபாய் காய்ன் பாக்ஸுக்கு உயிர் கொடுத்தான்.

''என்ன நினைக்குற உன் மனசுல... கை காட்டி கலாய்க்குறியா... இந்தா இங்கே என் விசிட்டிங் கார்டை வைக்குறேன். எனக்கு போன் பண்ணு'' என சொல்லிவிட்டு, பாக்கெட்டில் இருக்கும் செல்போனை எடுத்துப் பார்த்துவிட்டு சிரித்தபடி நகர்ந்தான்.

கொஞ்ச நேரம் கழித்து அந்த விசிட்டிங் கார்டை எடுத்திருப்பாளா? இல்லையா? என்ற எண்ணம் தொடர்ந்து அலைக்கழித்தது.

மீண்டும் யாழினி வீட்டுப்பக்கம் என்ட்ரி ஆனான். அந்த விசிட்டிங் கார்டு அங்கேயே அடம் பிடித்துக்கொண்டிருந்தது.

மீண்டும் ஒரு ரூபாய் காய்ன் பாக்ஸைத் தட்டினான். ''இப்போ நீ இதை எடுக்கலை? அவ்ளோதான்'' என்று பொய்க் கோபத்துடன் சத்தமாக சொல்லிவிட்டுப் போனான்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு ஹாய் என்று தமிழுக்கு ஒரு மெசேஜ் வந்தது.

''சொல்லு. ஏன் இவ்ளோ லேட்?''

''நான் தான்னு எப்படி கண்டுபிடிச்சீங்க?''

''நான் உனக்கு மட்டும்தான் நம்பர் கொடுத்தேன். ஊருக்கெல்லாமா கொடுத்தேன்?''

உரையாடல் இப்படியே தொடர்ந்தது.

யாழினியிடம் பேச ஆரம்பித்த பிறகே தமிழுக்கு போட்டோகிராபி மீது ஆர்வம் வந்தது. கேமரா கண்களால் விதவிதமாய் புகைப்படங்கள் எடுத்தான். ஸ்ட்ரீட் போட்டோகிராபியில் தமிழை அடிச்சிக்க ஆளில்லை என்பது போல தனித்திறமையை வளர்த்துக் கொண்டான்.

புகைப்படக்கலை அவனுக்குள் இருக்கும் ரசனையை வெளிக்கொண்டு வந்தது. பார்த்தவர்கள் பாராட்டத் தொடங்கி இருந்தனர்.

அக்டோபர் 26. தமிழ் பிறந்த நாள். யாழினியின் வரவை அதிகம் எதிர்நோக்கியிருந்தான். ஆனால், யாழினி தங்கை மட்டுமே வந்திருந்தாள்.

அந்த பிறந்த நாளை தமிழால் பெரிதாக சிறப்பாகக் கொண்டாட முடியவில்லை.

''மிஸ் யூ'' என்று மெசேஜ் தட்டினான்.

ரிப்ளை வந்தது.

செல்பேசியில் அழைத்தான்.

'''நீ இல்லாத இந்த பிறந்த நாள் ஏதோ மாதிரி இருக்கு. 21 வருஷமா என் அப்பா அம்மோவோட பிறந்த நாள் கொண்டாடி இருக்கேன். அப்போ எனக்கு ஒண்ணும் தெரியலை. நீ வந்த பிறகு நீ இல்லாம, பிறந்த நாளை என்னால சந்தோஷமா கொண்டாட முடியலை. ஒரு நிமிஷம் கூட உன்னை விட்டுப் பிரியக்கூடாதுன்னு நினைக்கிறேன். என் வாழ்க்கை முழுக்க நீ வேணும் யாழினி.''

யாழினி தமிழ் பேசுவதை கலங்கிய கண்களோடு கேட்டுக் கொண்டிருந்தாள்.

சட்டென்று காதலைச் சொன்ன தமிழுக்கு உடனடியாக பதில் சொல்லவில்லை. ஆனால், சில நாட்களிலேயே காதலைச் சொன்னாள்.

ஊரார் காதலை ஊட்டி வளர்த்தால் தன் காதல் தானாய் வளரும் என்று நினைத்தான். நண்பர்களின் தம்பி - தங்கைகளின் பள்ளிப் பருவத்துக் காதல்களுக்கு ஆலோசனை கூறி சுமூகமாய் மூடுவிழா நடத்தினான்.

உண்மையான காதலுக்கு கூடவே நின்று திருமணம் செய்து வைத்தான். ஒரு தலைக் காதலாக இருந்தாலும், அதைக் கொண்டாடச் சொன்னான். சுற்றத்தையும் நட்பையும் அன்பால் அலங்கரித்தான்.

இப்போது தமிழ் - யாழினி காதலுக்கு ஐந்து வயது. யாழினி வீட்டில் மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை ஆரம்பித்துவிட்டார்கள். அடுக்கடுக்கான போட்டோக்களைக் காட்டிவிட்டு பிடிச்சிருக்கா? என்று கேட்டபோது, அதிராமல், அழாமல் தமிழைக் காதலிக்கிறேன் என்று உறுதியாக சொன்னாள்.

தமிழை அவர்கள் முன் நிறுத்தினாள்.

''பையன் அழகா இருக்கான்னு காதலிக்காதே. அழகு கொஞ்ச நாள்ல போய்டும்'' யாழினியின் அத்தை சொன்னாள்.

''நீங்க பார்க்கிற பையன் எப்படிப் பார்த்துப்பான்னு உங்களால சொல்ல முடியுமா? எது நடந்தாலும் என் வாழ்க்கைக்கு உங்களால உத்தரவாதம் கொடுக்க முடியுமா?'' யாழினியின் கேள்விகளுக்கு அத்தை பதில் பேச முடியாமல் வாயடைத்துப் போனாள்.

தொடர்ந்து யாழினி பேசினாள்.

''தமிழ் என்னை நல்லா பார்த்துப்பான். அவனை விட யாரும் என்னை நல்லா கவனிச்சுக்க முடியாது. அவன் தான் என்னோட சரிபாதி. அவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா எப்பவும் உங்க முன்னாடி வந்து மூக்கை சிந்திட்டு இருக்க மாட்டேன்'' தீர்க்கமாக சொன்னாள்.

சாதி தடை என்று சொன்னதைக் கூட யாழினி காதில் வாங்கிக்கொள்ளவில்லை. அப்பா இல்லாத பொண்ணுன்னு செல்லம் கொடுத்தா இப்படி பேசுறியே என அத்தை சொன்னதையோ யாழினி சட்டை செய்யவில்லை.

அதிர்ச்சி விலகாமல் பேசிய அம்மாவிடம், தமிழைப் பற்றி பொறுமையாக எடுத்துச் சொன்னாள்.

ஒரு வழியாக சம்மதம் வாங்கிவிட்டாள்.

வஸந்த்தின் 'ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே!' படத்தில் ஷாம் போட்டோகிராஃபர். ஷாம் தன் பிறந்த நாளில்தான் சினேகாவிடம் காதலைச் சொல்வார். ஆனால், சினேகா உன் மேல காதல் வரலை. ஆனால், உன்னைப் பிடிக்கும் என்று சொல்லிவிடுவார்.

இறுதியில், சினேகாவை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையிடம், ஷாமை காதலிப்பதாகச் சொல்வார். அவர் அப்பா மோகன் ராம் அதிர்ச்சியோடு கேட்கும்போது விளக்கம் கூறுவாள். இந்த சீக்வன்ஸ் அப்படியே தமிழ் - யாழினிக்கு நடந்திருக்கிறது.

கமர்ஷியல் ரீதியில் பெரிதாய் போகாத படம் என்றாலும், யதார்த்தம் சார்ந்து எடுக்கப்பட்ட விதத்தில் 'ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே!' படம் தவிர்க்க முடியாதது.

ஒரு தலைக் காதல், காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக ஆசிட் ஊற்றுதல், கொலை செய்தல், கடத்துதல் என்று காதலில் இப்போதும் துன்பியல் சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஒரு பெண் காதலிக்கவில்லை என்றால், வெறுத்துவிடாதீர்கள். பழி வாங்க புறப்படாதீர்கள். உங்கள் காதல் உண்மை. அப்படி இருக்கையில், ஒரு தலை காதலாக இருந்தாலும் எப்படி அந்த பெண்ணை வெறுக்க முடியும்? பழிவாங்க முடியும்? அந்த காதலி நலமுடன் வாழ மனப்பூர்வமாக உதவி செய்யுங்கள் என்பதுதான் நாயகன் ஷாம் வழியாக வஸந்த் சொல்வது.

காதல் தோல்வி என்றால் அழிப்பதோ, தன்னை அழித்துக்கொள்வதோ சரியான முடிவில்லை என்று வஸந்த் அழுத்தமாகச் சொன்ன படம் 'ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே!'

படத்தில் ராஜீவ் கிருஷ்ணா கதாபாத்திரம் முக்கியமானது. காதல் தோல்வியில் இருக்கும் ராஜீவ் எந்நேரமும் மதுவிலேயே மயங்கிக் கிடப்பார். தன் காதலிக்குத் திருமணம் என்றதும் கலங்கிப்போவார். நான் இருக்க வேண்டிய இடத்துல இன்னொருவனா? என அழுகையும் ஆற்றாமையுமாக பொங்குவார்.

''அவங்க லவ் பண்ணது இல்லைன்னு சொல்லிட்டா நாம விரும்பினது இல்லைன்னு ஆயிடுமா? மனசுக்குப் பிடிச்ச பொண்ணுக்கு ஹெல்ப் பண்றதை ஏன் நிறுத்தணும்?

நீங்க அவங்களை லவ் பண்ணீங்க. ஆனா, அந்த பொண்ணு உங்களை லவ் பண்ணலியே. அதுக்காக வெறுக்கக்கூடாது. வெம்பக்கூடாது. அவங்க நோ சொன்னதுக்காக நீங்க வெறுத்துட முடியுமா? உங்க லவ் பொய் ஆகிடாது?

நீங்க என்ன பண்ணணும் தெரியுமா?

உங்க லவ்வருக்கு ரொம்ப பிடிச்ச பிரசன்டை வாங்கிட்டுப் போய் கல்யாணத்துல கலந்துகிட்டு வருங்காலத்துல எந்த உதவியாவது தேவைப்பட்டா கேளுங்கன்னு முழு மனசோட ஆல் தி பெஸ்ட் னு சொல்லிட்டு வரணும். இதான் ஒரு தோத்துப்போன காதலனுக்கு அழகு'' என்று ஷாம் சொல்வார்.

ஜெயாரே ஷாமை ஒரு தலையாகக் காதலிக்கிறார். ஷாம் காதலிக்கவில்லை என்று தெரிந்ததும், பழிவாங்க அவர் வேலை செய்யும் விளம்பரக் கம்பெனிக்கே வருகிறார். இல்லாததும் பொல்லாததுமாக ஷாம் பற்றி சொல்லி டோஸ் வாங்க வைக்கிறார்.

இதற்கு ஷாமின் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும்?

''அரை டிரவுசர் போட்ட பசங்க டீச்சர் டீச்சர் இவன் என்னைக் கிள்ளிட்டான்னு சொல்ற மாதிரி கிட்டிஷா பண்றீங்க'' என்று ஜெயாரேவிடம் சொல்லிவிட்டு வேலை பார்க்க ஆரம்பிப்பார்.

ஜெயாரேவால் வேலை பறிபோனபோதும் கூட ஷாம் நிதானம் தவறவில்லை.

''உண்மையான காதல்னா என்னன்னு தெரியுமா உனக்கு? நிஜமா என்னை லவ் பண்ணியிருந்தா நான் நல்லா இருக்கணும்னுதான் நெனைச்சிருப்ப. என் லைஃபை கெடுக்குறதையே உன்னோட லட்சியமா வெச்சுக்காதே... அது உன்னையே அழிச்சிடலாம். தியானம் பண்ணு'' என்று அறிவுரை சொல்லிவிட்டு வருவார்.

ஷாமின் ஆட்டிடியூட் எப்படிப்பட்டது? உச்சமாக இன்னும் ஓர் உதாரணம்...

ஷாம் காதலை ரிஜெக்ட் செய்ததற்காக சினேகாவை அவன் நண்பர்கள் வறுத்தெடுப்பார்கள். ஆனால், சரக்கடித்த போதும் சலம்பாமல், கண்ணியமாகப் பேசுவான்.

''என்னடா கத்துவான்னு பார்த்தா புத்தன் மாதிரி பேசுறான்...''

''அதுவே காதலனோட அவ வந்தா என்ன செய்வ?''னு விவேக் கேட்கிறார்.

''அவளுக்கு என் மேல அந்த ஃபீலிங் வரலைன்னு சொன்னா. அவ லைஃபை கெடுக்கணுமா? இல்லை ஆசிட் ஊத்தணுமா? இல்லை அவளையே நினைச்சு தாடி வளர்த்துக்கிட்டு என் லைஃபை அழிச்சிக்க சொல்றியா... இதுல நான் எதையும் பண்ணமாட்டேன்.

நம்மோடது ஒன் சைட் லவ். என் லவ்வுக்கு அவ நோ சொல்லிட்டா. அதனால என் லவ் பொய் ஆகிடுமா? எனக்கு அவ மேல சத்தியமா கோபம் இல்லைடா. அவ மேல இருக்குறது லவ்...லவ்...லவ்...தான்.

நான் அவளை விரும்பினேன். விரும்புறேன். விரும்பப் போறேன்.

அவ யாரை வேணா காதலிக்கட்டும். யாரை வேணா கல்யாணம் பண்ணிக்கட்டும். எனக்குப் பிடிச்சது மாறாது.

அம்பாசமுத்திரத்துல இருக்குறவனும் நான் தான். மெட்ராஸ்ல இருக்குறவனும் அதே ஆள்தான். குடிச்சாலும், குடிக்கலைன்னாலும் அதே ஆள்தான். அவ என்னை லவ் பண்ணாலும், பண்ணலைன்னாலும் நான் மாறமாட்டேன்'' என ஷாம் சொல்வார்.

''காதலிக்கவில்லைன்னு சொன்ன உடனே விரும்பினவங்களை எக்ஸ்பிரஸ் வேகத்துல எப்படி வெறுக்க முடியும்? நீ என்னை விரும்பினாதான் நான் உன்னை விரும்புவேன்னு சொல்றது வியாபாரம். உனக்கு என்னை பிடிச்சிருக்கோ இல்லையோ எனக்கு உன்னை பிடிச்சது மாறாதுன்னு சொல்றதுதான் உண்மையான காதல். அதைத்தான் நான் ஃபாலோ பண்றேன்'' என்று சினேகாவிடம் சொல்லும் ஷாமின் கண்ணியடத்தை நாமும் கடைபிடிக்கலாமே?

ஆட்டிட்யூட் என்பது நீங்கள் உங்களை எப்படி எடுத்துச் செல்கிறீர்கள், நீங்கள் மற்றவர்களை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள், நீங்கள் உலகத்தை உங்களுடன் எப்படி அவ்வப்போது ஒப்பிட்டுக்கொள்கிறீர்கள் என்பதுதான். இந்த மனப்பாங்கையும், அணுகுமுறையும் வளர்த்துக்கொண்டால் போதும் என்பதை உணர்த்திய விதத்தில் 'ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே!' மிக முக்கியமான படம்.

ஒரு நல்ல செய்தி...

போட்டோகிராபர் தமிழ் இப்போது வேலை தேடிக்கொண்டிருக்கிறான். வேலை கிடைத்த அடுத்த மாதமே நிச்சயதார்த்தம். ஆறு மாதத்தில் கல்யாணம். இதுதான் யாழினி குடும்பத்தினர் விதித்திருக்கும் நிபந்தனை.

இதோ கையில் ஃபைலோடு வேலை தேடிப் புறப்பட்டுவிட்டான் தமிழ். சென்னை அண்ணா சாலை பேருந்து நிறுத்தத்தில் பயோ டேட்டா, கேமராவுடன், க்ரீட்டிங் கார்டு வைத்திருக்கும் 27 வயது இளைஞனை பார்த்தீர்கள் என்றால் தயங்காமல் ஆல் தி பெஸ்ட் சொல்லுங்கள். அவன் தமிழ் தான்.

க்ரீட்டிங் கார்டு எதற்கு? என்கிறீர்களா?

இன்று யாழினி பிறந்த நாள்.

கடையில் ஏதோ ஒரு க்ரீட்டிங் கார்டு கொடுப்பதில் தமிழுக்கு உடன்பாடில்லை. அவனே அளவாக க்ரீட்டிங் கார்டு தயாரித்துவிட்டான். அதுவும் ஒன்று இரண்டல்ல. 16.

ஒரு பெரிய க்ரீட்டிங் கார்டில் மற்ற 15 க்ரீட்டிங் கார்டும் அடங்கும் அளவுக்கு அளவாக அழகாக செய்திருக்கிறான்.

16 க்ரிட்டீங் கார்டிலும் தமிழ், யாழினியைக் கிளிக்கிய படங்கள்தான். கூடவே, யாழினியின் தோழிகளிடம் இருந்து அவளுக்கே தெரியாமல் பெற்ற வாழ்த்துகள்.

இந்த சர்ப்ரைஸ் வாழ்த்தால் ஒற்றை கணத்தில் யாழினியின் கண்களில் பரவசத்தைப் பார்க்க வேண்டும் என்பதே தனக்குக் கிடைக்கும் வரம் என்கிறான் தமிழ்.

தமிழுக்கு ஒரு ஆல் தி பெஸ்ட்டும், யாழினிக்கு ஒரு வாழ்த்தும் சொல்லிவிடுங்களேன்... தீராக் காதலர்களை வாழ்த்தினால் இன்னும் மகிழ்வேன் நான்..!

மான்டேஜ் மனசு இன்னும் சுழலும்...

க.நாகப்பன் - தொடர்புக்கு nagappan.k@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம்: >மான்டேஜ் மனசு 6 - அனிதாக்களின் காலனிகள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x