Last Updated : 06 Jul, 2015 06:17 PM

 

Published : 06 Jul 2015 06:17 PM
Last Updated : 06 Jul 2015 06:17 PM

மான்டேஜ் மனசு 5 - காதல் கொண்டவர்களின் கதை!

மனசுக்கு சுகமில்லாதபோது செல்வராகவன் படங்களைப் பார்ப்பது என் வழக்கம். அப்படி ஒரு மழை நாளில்தான் 'காதல் கொண்டேன்' படம் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான் பிளஸ் 2 முடித்த தருணத்தில் காதல் கொண்டேன் ரிலீஸாகி இருந்தது. படம் பார்த்துவிட்டு வந்த என் அண்ணன் ஈஸ்வரன் 'படம் பிரமாதம்' என்று சொல்லிக்கொண்டிருந்தான். அவ்வளவு சீக்கிரம் எந்தப் படத்தையும் ஓஹோ என சொல்லமாட்டான்.

வகுப்பறையில் தூங்கிக் கொண்டிருக்கும் தனுஷை எழுப்பும் புரொபசர் , ''அந்த கணக்கை சால்வ் பண்ணு'' என திட்டி தீர்ப்பார். எந்த அலட்டலும் இல்லாமல் கணக்கு போட்டுவிட்டு கடைசி பெஞ்ச்சில் தூங்குவான் தனுஷ் என சிலாகித்துக்கொண்டிருந்த சமயத்தில், 'காதல் கொண்டேன்' பார்த்தே ஆவது என திட்டமிட்டேன்.

முதல் முறை படம் பார்த்தபோது வாவ் என ஆச்சர்யப்பட்டேன். மீண்டும் மீண்டும் பார்க்கும்போதுதான் இன்னும் இன்னும் பிடித்தது. கல்லூரி முடித்த பின் 'காதல் கொண்டேன்' பார்க்கும்போது எனக்கு மலர் - ஆனந்த் ஞாபகம் வந்துபோனதை தவிர்க்க முடியவில்லை.

ஆனந்தும், மலரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். படிப்பு, பேச்சு, கவிதை என எல்லாவற்றிலும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் போட்டி போடுவார்கள். பல சமயங்களில் ஆனந்த் வெற்றிவாகை சூடுவார்.

அப்போதெல்லாம் மலர் கோபித்துக்கொண்டு சென்று விடுவார். ''இந்தா மலர். உனக்குதான் இந்த கோப்பை. நடுவர் ஏதோ தப்பா சொல்லிட்டாங்க. நீ கவலைப்படாதே. இந்தா நீயே வெச்சுக்கோ'' என்று ஆனந்த், மலரின் கைகளில் கோப்பையை திணிப்பார்.

''போடா டக்கால்டி. நீ விட்டுக்கொடுத்து நான் இந்த பரிசை வாங்க வேணாம்'' என்று மலர் சென்று விடுவார்.

ஒரு நாய்க்குட்டியைப் போல மலரின் பின்னால் ஆனந்த் சென்றுகொண்டிருப்பான்.

ஒருவழியாக இருவரும் சமாதானமாகி பேசிவிடுவார்கள். ஆனால், எல்லாம் அடுத்த போட்டி நடக்கும் வரை தான்.

கம்பன் கழகம், தமிழ் வளர்ச்சி கழகம், கல்லூரிப் பட்டிமன்றங்கள் எல்லாவற்றிலும் மலர் - ஆனந்த் ஜோடிக்கு வெற்றிகள் அதிகம். சின்ன சின்ன ரசிகர் பட்டாளமும் உண்டு. இந்த ஜோடியைப் பார்த்து ஆச்சர்யப்படாதவர்கள் இல்லை.

மலர் ஆனந்த்தை நண்பனாகப் பார்த்தாள். ஆனந்த் வீட்டுக்கு செல்வாள். அவன் தங்கைகளோடு பழகுவாள்.

ஆனால், ஆனந்த் மலரை காதலியாகப் பார்த்தான். கடைசிவரை அந்த காதலை சொல்ல முடியாமல் போனது. காதலை சொல்ல வரும்போது மலர் திருமண அழைப்பிதழை நீட்டினாள்.

ஆனந்தால் எதுவும் சொல்லமுடியவில்லை. நண்பர்கள், ஆனந்தின் தங்கைகள் எல்லாம் அரசல் புரசலாக ஆனந்த் - மலர் காதலைப் பேசி வந்தார்கள். ஆனால், அதைக் குறித்து ஆனந்த் வாய் திறக்கவே இல்லை.

ஒரு கட்டத்தில் கேள்விப்பட்ட மலர், ''ஆனந்த். நீ என் நல்ல நண்பன். உன் கூட சண்டை போடலாம். ஜாலியா வம்பு பண்ணலாம். ஆனா, காதல், கல்யாணம்னு இருக்க முடியாது. ஒரு நிமிஷம் கூட அப்படி யோசிச்சதில்லை. தப்பா எடுத்துக்காதே. நீ என் நண்பன் மட்டும்தான்'' என சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

ஆனந்தால் இதை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. என் காதல் இதுதான் என்றோ, மனபூர்வமாக உன்னை விரும்புகிறேன் என்றோ மலரிடம் சொல்ல எந்த பகிரங்க பிரயத்தனமும் செய்யவில்லை.

கண்ணீரில் கரைந்துபோனான் ஆனந்த்.

மலர் வீட்டில் பார்த்த ஆணைத் திருமணம் செய்துகொண்டு சென்னையில் செட்டில் ஆனாள்.

அதற்குப்பிறகு ஆனந்த் வாழ்க்கை திசை மாறிப்போனது. தமிழ், இலக்கியம் எந்த பக்கமும் கவனம் செலுத்தவில்லை.

'காதல் கொண்டேன்' தனுஷைப் பார்க்க பார்க்க எனக்கு ஆனந்த் ஞாபகம் வந்தது.

சோனியா அகர்வால் நன்றாக தேர்வு எழுதவில்லை என்பதற்காக விடைத்தாள்கள் இருக்கும் அறையையே எரித்துவிடுகிறார் தனுஷ்.

ஆனந்த் அப்படிப்பட்டவன் அல்ல. ஆனால், கல்லூரி படிக்கும்போது தான் படிக்கும் பாடத்துக்கே கேள்வித்தாள் தயாரிப்பான். அதை தானே திருத்துவான்.

மலர் மதிப்பெண் குறைவாக வந்தால்அழுது வடிவாள். அதைத் தாங்க முடியாது என்பதற்காக மலருக்கே மதிப்பெண்களை அள்ளிப் போடுவான்.

''நான் சொன்னேன்ல. உன்னை விட அதிக மார்க் வாங்கி நான் ஜெயிச்சுட்டேன்ல. எங்கடா ட்ரீட்'' என்று மலர் கேட்டதும், தயங்காமல் கேட்டதை வாங்கிக் கொடுப்பான்.

இப்படி சில விஷயங்கள் இயல்பாக 'காதல் கொண்டேன் 'படத்தை நினைவூட்டின. ஆனால், 'காதல் கொண்டேன் 'எப்போதும் கொண்டாடப்பட வேண்டிய படம் என்பது என் தனிப்பட்ட எண்ணம்.

தனுஷுக்கு இது இரண்டாவது படம். 20 வயதில் இப்படிப்பட்ட கேரக்டரா? என்று இப்போதும் ஆச்சர்யம் மட்டுமே அகலாமல் இருக்கிறது. வினோத் கேரக்டரில் தனுஷ் தனித்துத் தெரிகிறார்.

திவ்யாவாக நடித்த சோனியா அகர்வாலுக்கும், ஆதியாக நடித்த சுதீப்புக்கும் அறிமுகப்படம்.

செல்வராகவன் மீது தனிப்பட்ட மரியாதை ஏற்பட இந்தப் படம் மிக முக்கிய காரணம்.

பாலியல், கற்பு, பாலியல் கல்வி குறித்து மிக நீண்ட விவாதங்கள் எழுந்த சமயம் அது.

கற்பு குறித்து குஷ்பு பேசியதும் சர்ச்சையைக் கிளப்பிய தருணம். ஆனால், ஓரமா போய் சண்டை போடுங்கப்பா என்று சொல்லிவிட்டு, எதை பேசத் துணிகிறோமோ அதை படத்தில் தன் காட்சிமொழியில் உணர்த்தியவர் செல்வராகவன்.

'துள்ளுவதோ இளமை' படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதிய செல்வராகவன் இயக்கத்தில் அதிகாரபூர்வமாக வெளிவந்த முதல் படம் 'காதல் கொண்டேன்'.

அனாதை ஆசிரமத்தில் வளரும் தனுஷ் இன்ஜினீயரிங் படிக்க நகரத்துக்கு வருகிறான். தனுஷைப் பார்த்து எல்லாரும் தெறித்து ஓடுகிறார்கள். கல்லூரியில் யாரும் பக்கத்து இருக்கையில் அமராமல் பதறி விலகுகிறார்கள்.

தாழ்வு மனப்பான்மையில் இருக்கும் தனுஷுக்கு சோனியா அகர்வால் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தித் தருகிறாள். அவன் இருப்பை உணர்த்துகிறாள்.

தனுஷுக்கு சோனியா மீது காதல் மலர்கிறது. தனுஷின் அடையாளம் மாறுகிறது. செமினாரில் பேப்பர் பிரசன்டேஷனில் பின்னி எடுக்கிறான் தனுஷ்.

தனுஷ் சோனியாவிடம் காதலை சொல்லத் துடிக்கிறான். அப்போது, தான் ஆதியைக் காதலிப்பதாக தனுஷிடம் சோனியா கூறுகிறாள். அதுவும் தனுஷ் மூலமாக ஆதி இதை தெரிந்துகொள்கிறான்.

ஒரு கட்டத்தில், ஆதிக்கும், சோனியாவுக்கும் காதல் கடிதங்களை கொடுக்கும் கொரியர் பாயாக மாறுகிறான். சோனியாவின் காதல் அப்பா ஶ்ரீகாந்துக்குத் தெரிய, ஆதி வீட்டை எச்சரிக்கிறார்.

ஆதிக்கு உதவுவதாக சொல்லி, சோனியாவை யாருமில்லா இடத்துக்கு அழைத்துச் சென்று விடுகிறான் தனுஷ்.

தனுஷ் - சோனியாவைத் தேடி ஆதி வருகிறான். தனுஷ் ஏற்கெனவே இரு கொலைகளைச் செய்த குற்றவாளி என்பது தெரிய வருகிறது.

ஆதி - தனுஷ் மோதலில் சோனியா சிக்கிக் கொள்கிறாள், அவளைக் காப்பாற்றும் முயற்சியில் மரத்தின் கீழ் ஆதியும் தனுஷும் விழுகிறார்கள். இருவரையும் தன் இரு கைகளில் தாங்கிப் பிடிக்கிறாள் சோனியா.

''அவன் சாகணும். அவனை விட்டுடு'' என்று சொல்கிறான் ஆதி. அழுகையுடன் விடமால் இருக்கிறாள் சோனியா. வலி கலந்த புன்னகையுடன் கையை விடுவித்துக்கொண்டு கீழே விழுந்து உயிர் பிரிகிறான் தனுஷ்.

தனுஷ் உலகம் எப்படிப்பட்டது?

அனாதை ஆசிரமத்தில் படித்து வளரும் தனுஷ் அங்கிருக்கும் சிறுவர்களை குளிப்பாட்டுகிறான். சோறு போடுகிறான். இன்னும் கொஞ்சம் என்று கேட்டும் குழந்தைக்கு எந்த மறுப்பும் இல்லாமல் தருகிறான். அழும் குழந்தைக்கு வாஞ்சையோடு பால் புட்டி தருகிறான்.

லாரியில் வரும் பழைய துணிகளில் ஒரு பேன்ட்டுக்காக சண்டை போடுகிறான். ஆட்டோக்காரனிடம் அடிவாங்கி, கல்லூரிக்குள் நுழைகிறான்.

புரொபசர் எகத்தாளமாக, ''நீ ஸ்டூடண்டா? கோட்டாவில் சீட்டு கிடைச்சா, இங்கே வந்துட்டு தாலி அறுக்குறாங்க'' என்று அலுத்துக்கொள்கிறார்.

இரவில் சர்வர் வேலை பார்த்துவிட்டு அசந்து வகுப்பறையில் தூங்கும் தனுஷை பாடம் நடத்தும் புரொபசர் எழுப்புகிறார்.

''என்ன பண்ணிகிட்டு இருக்கே? ஃபிரீ சீட்டு, ஃபிரீ சாப்பாடு கொடுத்துடுவாங்க. என்ன இழவுக்கு இங்கே வந்த. வெட்கமா இல்லை. இந்த கணக்கு தெரியுமா? உனக்கு தெரியாதுன்னு தெரியும். எதுக்குமே நீ லாயக்கு இல்லை. அங்கே போய் ஒரு தொடப்பைகட்டை மாதிரியாவது நில்லு'' என்பார்.

ஆறு புத்தகங்கள், இரண்டு நாள் பிரப்பேர் செய்து வந்த கணக்கு என பில்டப் கொடுப்பார். 2 நிமிடங்களில் அந்த கணக்கை செய்துமுடிப்பார் தனுஷ்.

கோட்டாவில் வந்தால் கோட்டுவா விடத்தான் லாயக்கு என்பது பொதுப்புத்தியா? அந்த புத்தியை நெற்றிப்பொட்டில் அறைந்ததைப் போல சொல்லும் படம்.

சோனியா வீட்டுக்கு குரூப் ஸ்டடிக்கு வரும் தனுஷ் கதவைத் தாழிடும்போது புரியாமல் சின்ன கலவரத்துடன் பார்க்கிறாள் சோனியா.

மெத்தையில் ஓடி ஆடி விளையாடி குளிர்பானங்கள், ஸ்நாக்ஸ் என ரவுண்டு கட்டி பாத்ரூம் போய் களைத்துப் படுத்து உறங்கும் தனுஷுக்கு என்ன தேவை?

மறுநாள் காலையில் அதை தனுஷே சொல்கிறார்.

''உனக்கு ஏதாவது பிரச்னையா?'' என்று சோனியா கேட்கிறாள்.

''இல்லயே நான் சந்தோஷமா இருக்கேன். நீதான் என் கூடவே இருக்கியே'' என்று சொல்கிறான்.

சட்டை இல்லாமல் சோனியா அருகில் தூங்கும் தனுஷை மடியில் கிடத்தி தலை வருடுகிறாள் சோனியா. அப்போதே கண்ணீரில் கெட்டது கரைந்து போய்விட்டது.

''எனக்கு இது போதும்டா. உன் கூட இருக்கணும். அவ்ளோதாம் புரிஞ்சுகிட்டா போதும். கூடவே இருந்தால் போது, நாய்க்குட்டி போல இருக்கேன். ஒரு மூலையில இருந்துக்கிறேன். கேட்டதெல்லாம் கொண்டு வர்றேன்.

''நீ ஆதியை லவ் பண்றதா நினைக்குற? அதெல்லாம் இல்லடா. உன்னை ஹாஸ்பிடல்ல சேர்த்தது நன்றிக்கடன். அதுக்கு தேங்க்ஸ் சொல்லிடு. அதைப் போய் லவ் பண்றதா நினைக்குற மக்கு. நமக்குள்ள இருக்குறதுதான் லவ். எனக்கு ஒண்ணுன்னா துடிச்சுப் போற பாரு. அதான் லவ்'' என்பான்.

சோனியா, ''நீ என் ஃப்ரெண்ட் டா. லைஃப் புல்லா உன் கூட இருக்க முடியாது. உனக்குப் புரியாது'' என்கிறாள்.

ஆனால், அதே சோனியா இன்ஸ்பெக்டர் டேனியல் பாலாஜியிடம் பேசும்போது, '' என் வினோத் அப்படி கொலை பண்ணி இருக்கமாட்டான் சார்.

சின்ன வயசுலயே பல கொடுமைகளை அனுபவிச்சுட்டான் சார். அவன் அப்பாவி. இதோ ஆதி பண்ணான்னு சொல்லுங்க நான் நம்புறேன்'' என்கிறாள்.

இதில் எது காதல்? என்பதை நீங்களே புரிந்துகொள்ளுங்கள்.

மீண்டும் ஆனந்தும், மலரும் மனதுக்குள் வந்து போனார்கள்.

மலர் இல்லாத வாழ்வை நினைத்துப் பார்க்கக் கூட விரும்பாத ஆனந்த் இதுவரை திருமணம் செய்துகொள்ளவே இல்லை.

மலருக்கும் மகிழ்ச்சி கிட்டவில்லை. திருமணத்தில் கசப்பு படர, விவாகரத்து செய்துவிட்டு மகனே வாழ்க்கை என நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

*

க.நாகப்பன் - தொடர்புக்கு nagappan.k@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x