Published : 06 Oct 2015 02:35 PM
Last Updated : 06 Oct 2015 02:35 PM

நெட்டெழுத்து: சென்னைப்பித்தன்... பதிவர்களில் இவர் கபாலி!

’எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம்’ இதுதான் சென்னைப்பித்தனின் வலைப்பதிவு. ஆனால் ஏராளமான நிகழ்வுகளையும், கருத்துகளையும், சுவாரசியம் மிகுந்த கதைகளாகவும், கட்டுரைகளாகவும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் சென்னைப்பித்தன்.

படிக்கத் தூண்டுகிற, சுவாரசியம் மிக்க கதைகளை, அதன் ஓட்டத்திலேயே இழுத்துச் செல்வதில் வல்லவரான சென்னைப்பித்தன் ஒரு கதையை எழுதி, அதன் முடிவுகளை பல விதங்களில் மாற்றியமைக்கிறார். மாறிய முடிவே வேறொரு கதைக்கான முன்னோட்டத்தை அளித்துச் செல்கிறது.

வட இந்தியாவில் வங்கியில் பணியாற்றியவரான சென்னைப்பித்தன், தன் பணி ஓய்வுக்குப் பிறகு சென்னையில் வசித்து வருகிறார். வலைப்பதிவுகள் பிரபலமாகத் தொடங்கிய காலகட்டமான 2008-ல் எழுதத் தொடங்கியவர், இப்பொழுதும் எழுத்துலகத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார். கதைகளை தனக்கே உரிய பாணியில், விறுவிறுப்பாக எடுத்துச் செல்வது இவரின் பாணி.

ஓர் அடர்ந்த காடு. அங்கிருக்கும் மான் ஒன்று கருவுற்றிருக்கிறது. அது குட்டியை ஈன்றெடுக்கும் நேரம் நெருங்கி விட்டது. அருகில் இருக்கும் ஒரு புல்வெளியை அடைந்து விட்டால் நல்லது என நினைக்கிறது. அப்போது பார்த்து சட்டென மேகங்கள் திரள்கின்றன. வானம் கருக்கின்றது. பெரிய மின்னல் தாக்கிக் காட்டில் மரங்கள் பற்றி எரியத் தொடங்குகின்றன. மானுக்குப் பிரசவ வலி எடுத்து விட்டது. இடது புறம் சிறிது தொலைவில்,ஒரு வேட்டைக்காரன் தன் துப்பாக்கியுடன் தயாராகிக் கொண்டிருப்பதைக் காண்கிறது. வலது புறம் சற்றுத் தொலைவில் பதுங்கி வரும் புலியைப் பார்க்கிறது. என்ன ஆகும் அந்த மானுக்கு?

காட்டுத்தீயில் கருகிச் சாகுமா? வேட்டைக்காரனின் குண்டுக்கு மடியுமா? வேங்கையின் பசிக்கு உணவாகுமா? என்ன நடக்கும்? >இதைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

விடுமுறை- சிரிமுறை என்ற தலைப்புகளில், சிரிக்க வைக்கும் சிந்தனைப் பதிவுகளை ஞாயிற்றுக் கிழமைகளில் இடுகிறார். வாசிக்க:>விடுமுறை- சிரிமுறை

அந்தக்கால சென்னையின் திரையரங்குகளைப் பற்றி யாருக்கெல்லாம் தெரியும்? தெரிந்துகொள்ள ஆசைப்படுபவர்கள் வாசிக்க:>மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்!! இழந்த சொர்க்கங்கள்!

கைபேசி எவ்வாறு நம் வாழ்வின் இன்றியமையாத அங்கமாகி விட்டது, நம் பண்பாட்டை எவ்வாறு பாதித்திருக்கிறது என்று நக்கலடிக்கும் பதிவு. வாசிக்க:>கடவுளுடன் ஒரு செல்ஃபி!

கருத்துகளை நகைச்சுவையாகவும், நக்கலாகவும் சொல்லியே பழக்கப்பட்ட சென்னைப்பித்தன், வலைத்தளத்தில் அடிமையாகிக் கிடப்பவர்களைப் பற்றி ஒரு பாடலை எழுதி இருக்கிறார். வாசிக்க:>வலைப்பூ அடிமைகள்!

கால ஓட்டத்தில் இழந்ததை எல்லாம் திரும்பத்தரச் சொல்லி இறைவனிடம் கேட்கிறார் சென்னைப்பித்தன். இழந்தது என்ன என்று இறைவன் கேட்க, பட்டியலும் இடுகிறார். அதற்கு இறைவன் என்ன பதில் சொல்லியிருப்பார்? வாசிக்க:>இழந்ததெல்லாம் திரும்பத் தா இறைவா!

சுவாரசியக் கதைகள்

பெரும்பாலான சமயங்களில் நம்மால் பொறுமை காக்க முடிவதில்லை. எந்த நிகழ்வுக்கும் உடனே எதிர்ச்செயலாற்றி விடுகிறோம். பொறுமை காப்பதால் ஏற்படும் நல்ல விளைவுகளைக் கதையொன்றின் வழியாகச் சொல்கிறார் சென்னைப் பித்தன். வாசிக்க: >>மந்திரத் தண்ணீர்!

வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம். அது மற்றவர்கள் நம்மைப் பார்த்து மகிழ அல்ல. அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்! எப்படி? வாசியுங்கள்:>யார் புத்திசாலி!

எதிர்பாராத சூழ்நிலையைச் சமாளிக்கவும் தனித்திறன் வேண்டும். அப்படி இருப்பவர்கள் சீக்கிரத்திலேயே உயர்நிலையை அடைவார்கள் என்பதை ஒரு குறுங்கதை மூலம் விளக்குகிறார் சென்னைப்பித்தன். வாசிக்க:>அப்படிப் போடு!

எந்த விஷயத்திலும், அவசரப்பட்டு முடிவுக்கு வரக்கூடாது; எப்படியும் மனிதர்கள் இருக்கலாம் என்றும் கதை நவில்கிறார் சென்னைப்பித்தன். வாசிக்க:>மகிழ்வுந்தில் மூன்று பெண்கள்!

கண்டதும் காதல் என்று சொல்வார்கள். அவனைப் பொறுத்தவரை அதுவே நடந்தது. கண்டான்; காதல் கொண்டான். முதல் பார்வையிலேயே அவள் அழகு அவனை அவள் மேல் காதல் கொள்ள வைத்தது. அவளுடன் கழித்த இரண்டு ஆண்டுகள் இரண்டு நொடிகளாகக் கடந்தன. படிப்பு முடிந்தது; பிரியும் நேரம் வந்தது. விரைவில் அவளைக் காண வருவேன் என்று உறுதி எடுத்துக்கொண்டான். திரும்ப வந்தானா? யார் அவர்கள்? வாசிக்க:>அவன் ஒரு காதலன்!

அன்றாட வேலைகளுக்கிடையே இணையத்தில் ஆறுதலும், மாறுதலும் தேடி வருபவர்களுக்கு, இந்த அறுபது வயது இளைஞரின் வலைதளம், கபாலி போஸ்டர் போல் கம்பீரம் குறையாதது.

சென்னைப்பித்தனின் வலைதள முகவரி: >http://chennaipithan.blogspot.in/

முந்தைய அத்தியாயம்- >நெட்டெழுத்து: தமிழில் பின்னியெடுக்கும் குறுக்கெழுத்துத் தளம்

*

நீங்கள் வாசித்து வரும் நல்ல வலைப்பூ, ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களைப் பரிந்துரைக்க ramaniprabhadevi.s@thehindutamil.co.in என்ற மின்னஞ்சலுக்கு இணைப்புகளை அனுப்பலாமே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x