Published : 18 May 2015 06:32 PM
Last Updated : 18 May 2015 06:32 PM

நெட்டெழுத்து: என்றும் தணியாத விமரிசனம்

பரபரப்பான தமிழக, இந்திய அரசியல் களத்தின் காய் நகர்த்தல்கள் பற்றியும், கட்சித் தலைவர்களின் அன்றாட செயல்பாடுகள் குறித்தும் தொடர்ந்து எழுதி வருபவர்களில் முக்கியமானவர் காவிரி மைந்தன். இவர், >''விமரிசனம்'' என்னும் பெயரில் வலைதளம் அமைத்து பதிவுகளைப் படிப்பவர்களின் முகம் கோணாமலும், பதிவர்களுக்கு தன் முகத்தையே காண்பிக்காமலும் எழுதி வருகிறார்.

அவ்வப்போதைய அரசியல் சூழ்நிலைகளைப் பிரதிபலித்து எழுதப்படுபவைகளுக்கு ஆயுள் குறைவு. ஆனால், சில இடுகைகள், நிரந்தரமாக வைத்துப் படிக்கவும், பலருக்கும் சென்று சேரக்கூடிய அளவில் செய்திகளும், தகவல்களும் நிறைந்ததாகவும் இருக்கும். ''விமரிசனம்'' தளத்தில் அத்தகைய இடுகைகள்தான் வெளிவருகின்றன.

"இத்தளத்தின் முக்கிய அம்சமே அந்த இடுகைகளுக்கு வாசகர்கள் எழுதும் "பின்னூட்டங்கள்" தான். பல சமயங்களில், இடுகையைவிட, பின்னூட்டங்களில் அதிக சாரமும், விறுவிறுப்பும், உயிரோட்டமும் நிறைந்திருக்கும்" என்கிறார் காவிரி மைந்தன்.

பகடி பாணியில் சுவாரசியமாய் எழுதும் கலை வரப்பெற்றவர்களில் ஒருவர் காவிரிமைந்தன். காலத்துக்கும், நேரத்துக்கும் தகுந்தாற்போல நடந்து கொள்பவர்கள்தான் அரசியல்வாதிகள் என்பவர், கருணாநிதி தொடங்கி ஜெயலலிதா, ஓபிஎஸ், அன்புமணி வரை எல்லோரின் செயல்பாடுகளையும் கேள்விக்கு ஆட்படுத்துகிறார்.

இதற்கு பிரதமர் மோடியும் விதிவிலக்கல்ல. சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமரின் புகைப்படங்களை இணைத்து எழுதியிருக்கும் இந்த ஒரு கட்டுரை போதும் அதைப் பறைசாற்ற.

வாசிக்க: >மோடிஜியின் ரசனையே தனி தான்..!>

எவ்வாறு வெளிநாடுகளில் சிகரெட், குட்கா போன்ற பொருட்களால் ஏற்படும் விளைவுகளை புகைப்படங்கள் மூலமே காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றார்கள் எனச் சொல்பவர், நம் நாட்டில் சிகரெட் விளம்பரங்களுக்கு ஏற்படும் தடைகள் குறித்து கவலை தெரிவிக்கிறார்.

”இந்த வலைத்தளத்தின் பின்னூட்டங்களில் கருத்தாழமும், வாதத்திறமைகளும், இடுகையை விட சிறப்பாக இருக்கின்றன”. இது காவிரி மைந்தனின் வார்த்தைகள். அதில் உண்மையும் இருக்கிறது. ஆரோக்கியமான விவாதங்களையும், பயனுள்ள தகவல்களையுமே காணமுடிகிறது.

திருச்சி- முடிகண்டம், திருப்பூர்- கொசம்பாளையம், கோவை- குருடம்பாளையம், நீலகிரி- பர்லியார், தூத்துக்குடி- மேலபுதுக்குடி, விருதுநகர்- அத்திப்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூபாய் 30 இலட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. எதற்கு என்று தெரியுமா?

வாசிக்க: >இந்த தகவல் உங்களுக்கே வியப்பாக இருக்கும்...!

ஒரு அரசு சில திட்டங்களுக்கு தங்களுக்கு பிடித்தமான பெயரை வைத்துவிட்டுப் போவதும், அடுத்த கட்சி ஆட்சிக்கு வந்ததும் முந்திய அரசின் திட்டப் பெயர்களை எல்லாம் தங்களுக்கு பிடித்தவாறு மாற்றுவதற்கும் பதிலாக எல்லாவற்றிற்கும் "மத்திய அரசு திட்டம்" அல்லது "மாநில அரசின் திட்டம்" என்று பொதுவாக பெயர் வைத்து விடுவது நல்லது என்றுதானே தோன்றுகிறது...? பிரதமருக்கு அளிக்கப்படும் சலுகை, மாநில முதல்வர்களுக்கு மறுக்கப்படுவது சரியா.?

வாசிக்க: >மக்கள் செலவில் அரசியல்வாதிகளுக்கு விளம்பரம்? சுப்ரீம் கோர்ட் தலையீடு சரியா..?

வழக்கு இருக்கிறது.. வழக்கு இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்களே தவிர, இதைப்பற்றிய விஷயங்கள் என்ன ஏது என்று விவரமாக வெளிவந்ததாகத் தெரியவில்லை என்று அன்புமணியைப் பற்றிக் கூறும் காவிரிமைந்தன், "வருங்கால முதல்வர்" வேட்பாளராக அவரும் இருப்பதால், அந்த வழக்கு பற்றிய விவரங்களை கொஞ்சம் சேகரித்துத் தொகுத்திருக்கிறார்.

வாசிக்க: >சின்ன மருத்துவர் அய்யா மீது என்ன வழக்கு...?

அரசியல் செல்வாக்கோ, பண பலமோ இருந்தால் போதும். எத்தகைய குற்றங்களையும் துணிந்து செய்துவிட்டு, காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு சமூகத்தில் உலவி வர கொடியமிருகங்களை நாம் அனுமதிக்கிறோம். நமது சட்டங்கள் அனுமதிக்கின்றன. இந்த நாட்டில் நல்லவர்கள்தான் பயப்பட வேண்டி இருக்கிறது. இஸ்லாமிய நாடுகளைப் போல் கடுமையான சட்டங்களை கொண்டு வந்தால் இந்த நிலை இன்னமும் இங்கிருக்குமா என்று கோபக்கனல் வீசுகிறார்.

வாசிக்க: >தீமாபுர்- கற்பழிப்பு ஆசாமியை அடித்தே கொன்றது சரியா.. தவறா..?

தேர்தலுக்கு முந்தைய ஆண்டு வரை, ஆளும் கட்சிக்கு அதிகம் கொடுக்கும் கம்பெனிகள், தேர்தல் ஆண்டுகளில் மட்டும் அடுத்து எந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்பதை யூகித்து, அந்த கட்சிக்கு அதிகமாக நிதி கொடுப்பதைப் பார்க்க முடிகிறது. பெரிய பெரிய வர்த்தக நிறுவனங்களும், தொழிலதிபர்களும், அரசியல் கட்சிகளுக்கு பெரிய அளவில் தொகைகளை "நன்கொடை" என்கிற பெயரில் அளிக்கின்றன. இவ்வாறு கொடுக்கப்படும் "கொடை"களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு வேறு அளிக்கப்படுகிறது எனக் கொதிக்கிறார்.

வாசிக்க: >கட்சிகளுக்கு, கம்பெனிகள் கொடுப்பது "டொனேஷனா?" அல்லது "அட்வான்ஸ் லஞ்சமா?"

சினிமாவுக்கு வந்தவர்களின் செயல்களை எல்லாம், அவர்களுக்குத் தெரியாமலே எங்கோ உட்கார்ந்து கொண்டு யாரோ பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிய வந்தால் அவர்களுக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சியாக இருக்கும்..?

வாசிக்க: >சினிமா பார்ப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை.. உங்களை யாரோ பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்..!

அரசியல் நிகழ்வுகளோடு, சமூக அக்கறை கொண்ட பதிவுகளையும் எழுதி வரும் காவிரி மைந்தன், >"இன்னும் தணியவில்லை எங்கள் சுதந்திர தாகம்" என்கிற தலைப்பில் ஒரு மின் நூலை வெளியிட்டிருக்கிறார். சுதந்திரப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை ஈந்த புரட்சி வீரர்கள் சிலரின் வீரச்செயல்களை நினைவுபடுத்தும் விதமாக, விமரிசனம் வலைத்தளத்தில் எழுதப்பட்ட இடுகைகளைத் தொகுத்து உருவாக்கப்பட்ட இந்நூலின் அஸ்திவாரம் பாரதியின் வார்த்தைகள்தான் என்கிறார்.

காவிரி மைந்தனின் வலைதள முகவரி: > https://vimarisanam.wordpress.com/

முந்தைய அத்தியாயம்->நெட்டெழுத்து: இணைய ஊருக்கு உழைக்கும் நீச்சல்காரன்!

| நீங்கள் வாசித்து வரும் நல்ல வலைப்பதிவு, ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களைப் பரிந்துரைக்க ramaniprabhadevi.s@thehindutamil.co.in என்ற மின்னஞ்சலுக்கு இணைப்புகளை அனுப்பலாமே! |

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x