Published : 23 Apr 2015 02:18 PM
Last Updated : 23 Apr 2015 02:18 PM

நெட்டெழுத்து: இணையத்தில் வழிகாட்டும் தமிழக ஆசிரியர்!

கதை, கவிதை, கட்டுரை எனக் கற்பனைக் கடிவாளங்களை அவிழ்த்துவிட்டு வலைப்பதிவுகளில் அதைத் தொடுப்பவர்கள் பலர். அவர்களுக்கு மத்தியில் முழுக்க முழுக்கத் தமிழக ஆசிரியர்களுக்காகவே இயங்கி வருகிறார் சுரேஷ்.

அவரின் >http://www.tamilagaasiriyar.com/ வலைதளம், அரசு வெளியிடும் அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பாடங்கள் சார்ந்த கையேடுகள், பாடப் புத்தகங்கள், பவர் பாயிண்ட் விளக்கக் காட்சிகள், பொது அறிவு சார்ந்த புத்தகத் தொகுப்புகள், ஆய்வுக் குறிப்புகள் என அறிவுக் களஞ்சியமாக இருக்கிறது.

வேலை பார்ப்பவர்களுக்கு உதவும் விதமாக சம்பளப் பட்டியலுக்கான பே-ரோல் மென்பொருளின் இணைப்பு, வருமான வரி குறித்த சந்தேகங்களுக்கான விளக்கப் பட்டியல் ஆகியவையும் இத்தளத்தில் உண்டு.

தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்விக்கான ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் தொகுத்து, பதிவேற்றப்பட்டிருக்கின்றன.

பள்ளிக்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் இத்தளத்தில் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு வழிகாட்டும் விதமாய் 'சர்வ சிக்‌ஷ அபியான்' திட்டக் கொள்கைகள், பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கையேடுகள், பொதுத்தேர்வு பற்றிய வழிகாட்டிகள் போன்றவை உள்ளன.

தொடக்க மற்றும் உயர்நிலை வகுப்புகளுக்காக CCE எனப்படும் 'தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு' முறையின் மென்பொருளும் இங்கே உள்ளது. இதன் மூலம் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் மதிப்பெண்ணை உள்ளீடு செய்தாலே, அது கிரேடாக மாற்றப்பட்டு, முழுமையான தர அறிக்கையைப் பெற முடிகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான வினா விடைகள் அடங்கிய தொகுப்பு, பள்ளிக் கல்வித் துறையின் முக்கிய அறிவிப்புகள், சுற்றறிக்கைகளின் நகல்கள், காலியாக உள்ள பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு, பள்ளிக் கல்வி இயக்குநரின் சுற்றறிக்கைகள் போன்றவையும் லிங்க்குகளாய் இங்கே காணக் கிடைக்கின்றன.

இவை போக சுவாரசியமான கணிதப்புதிர்களும், பொது அறிவுத் தகவல்களும் கொட்டிக் கிடக்கின்றன. தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய வழிகாட்டி கையேட்டின் இணைப்புகளும் இத்தளத்தில் அடக்கம். யாருக்கெல்லாம் பச்சை மையில் கையெழுத்திட அதிகாரம் உள்ளது போன்ற அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய பல விவரங்கள் இங்கே பதிவேற்றப்பட்டிருக்கின்றன.

தொடக்கப்பள்ளி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மேலே என்ன படிக்கலாம், எவ்வகையான உயர்கல்வி தங்களின் முன்னேறத்துக்கு உதவும் என்பது போன்ற தகவல்கள் தரப்பட்டுள்ளன.

இவை மட்டுமல்லாது, செல்பேசி, டேட்டா கார்டு மற்றும் டிடிஹச்களை ரீசார்ஜ் செய்வதற்கான தளங்களின் இணைப்புகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. செல்பேசி மற்றும் மின் வாரியக் கட்டணங்களை செலுத்துவதற்கான இணைப்புகளும் இதில் அடக்கம்.

தமிழில் தட்டச்சு செய்வதற்கான மென்பொருட்களின் இணைப்புகள், காணொளிகளைக் காண மீடியா, வி.எல்.சி., ரியல் ப்ளேயர்களின் இணைப்புகள், அனைத்துப் பல்கலைக்கழகங்களின் யூ.ஆர்.எல். இணைப்புகள் ஆகியவையும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

எந்தெந்த தினத்தில் கிரிக்கெட் நடக்கிறதோ, அன்று விளையாடும் அணி குறித்த தகவல்களும், உடனுக்குடனான கிரிக்கெட் ஸ்கோர் பட்டியலும் வெளியிடப்படுகிறது.

முக்கியமாய் வலைதள வாசிப்பாளர்களும் தங்களிடம் உள்ள புத்தகங்களையும், விடைத் தாள்களையும், கையேடுகளையும் இங்கே பதிவேற்றலாம். இதன் மூலம் எல்லோரும் அதைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளிக்கும் ஊடகமாக இத்தளம் செயல்படுகிறது. அரசு வெளியிடும் அறிவிப்புகள், கல்வி சார்ந்த நீதிமன்ற ஆணைகள் அனைத்தும் உடனுக்குடன் பதிவேற்றப்படுவது இத்தளத்தின் முக்கிய அம்சமாகும்.

மொத்தத்தில் கணிப்பொறியையும், இணையத்தையும் ஆரம்ப நிலையில் கையாளத் தெரிந்தவர்களுக்கும், ஆசிரியர் பயிற்சி மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளை எழுதுபவர்களுக்கும் ஆகச் சிறந்த வழிகாட்டியாக இந்த வலைதளம் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சுரேஷ்: >http://www.tamilagaasiriyar.com/

| நீங்கள் வாசித்து வரும் நல்ல பக்கங்களை பரிந்துரைக்க ramaniprabhadevi.s@thehindutamil.co.in என்ற மின்னஞ்சலில் இணைப்புகளை அனுப்பலாமே! |

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x