Published : 01 Oct 2015 10:47 AM
Last Updated : 01 Oct 2015 10:47 AM

டாக்டர் ஜி. வெங்கடசாமி 10

சர்வதேச கண் மருத்துவ நிபுணர்

கண் மருத்துவத்தில் உலகளாவிய சாதனை படைத்த டாக்டர் ஜி வெங்கடசாமி (Dr.G. Venkatasamy) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 1). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# எட்டையபுரம் அருகே உள்ள வடமலாபுரத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் (1918). தந்தை அதிகம் படிக்காவிட்டாலும் ஏராளமான புத்தகங்களைப் படித்து அறிவை விசாலமாக்கிக் கொண்டவர். வீட்டில் ஒரு சிறு நூலகத்தையே அமைத்திருந்தார். சிறுவன் நம்பிபுரம் ஏட்டுப் பள்ளிக்கூடத்தில் ஆரம்பக் கல்வி பயின்றான்.

# ஊரில் சரியான மருத்துவ வசதி இல்லாததால் நள்ளிரவில் அக்கம் பக்கத்து வீடுகளில் திடீர் திடீர் என்று இளம் தாய்மார்கள் பிரசவ நேரத்தில் எழுப்பும் மரண ஓலம் இந்த பாலகனை உலுக்கி எடுத்தது. மகப்பேறு மருத்துவராக வேண்டும் என்ற எண்ணம் சூல் கொண்டது. கோவில்பட்டியில் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.

# வீட்டிலிருந்த புத்தகங்கள் தவிர, மேலும் பல நூல்களைப் படித்து, அறிவை பட்டைத் தீட்டிக்கொண்டார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வேதியியல் பாடத்தில் பட்டம் பெற்றார்.

# சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். மருத்துவப் படிப்பு முடித்தவுடன் ராணுவத்தில் மருத்துவராக சேர்ந்தார். பர்மாக் காடுகளில் முகாமிட்டிருந்தபோது விஷப் பூச்சிகள் கடித்ததால், தீராத சரும நோய்க்கு ஆளானார்.

# முடக்குவாதமும் தாக்கியது. ராணுவப் பணியிலிருந்து விடுவிக்கப் பட்டார். மகப்பேறு மருத்துவக் கல்வி பயின்றார். மீண்டும் தாக் கிய முடக்குவாதம் இந்த முறை இவரது கைவிரல்களைக் கடுமை யாக பாதித்தது, பேனாகூட பிடிக்க முடியாத நிலை. ஓரளவு குணமடைந்து எழுந்த இவரிடம் ஒரு நண்பர், இந்தக் கைகளை வைத்துக்கொண்டு மகப்பேறு மருத்துவம் செய்ய முடியாது. எனவே, கண் மருத்துவம் பயிலும்படி ஆலோசனை கூறினார்.

# கண் மருத்துவத்தில் முதுகலை டிப்ளமோ மற்றும் எம்.எஸ். பட்டமும் பெற்றார். சென்னை எழும்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் கண் மருத்துவத் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார். தானாகவே பிரத்யேகப் பயிற்சிகளை மேற்கொண்டு, திருகிக் கொண்டிருந்த விரல்களுக்குக் கடுமையான பயிற்சியளித்து, கண் அறுவை சிகிச்சை நுட்பங்களில் தன்னை மேம்படுத்திக் கொண்டார்.

# ஆனாலும் இவரது விரல்களைக் காரணம் காட்டி, இவருக்கு அறுவை சிகிச்சை அளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. 1956-ல் மதுரை அரசு மருத்துவமனையில் புதிதாகத் தொடங்கப்பட்ட கண் மருத்துவத் துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேறு யாரும் முன்வராததால் இவர் மதுரைக்கு அனுப்பப்பட்டார்.

# வாழ்நாளில் ஒரு லட்சம் கண் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார். பணி ஓய்வு பெற்ற பிறகு தன் ஆன்மிக குரு ஸ்ரீ அரவிந்தரின் பெயரில் அரவிந்த் ஐ கிளினிக் என்ற 11 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையைத் தொடங்கினார். ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்தார்.

# இன்று இந்த மருத்துவமனை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிளை பரப்பி உலகப் புகழ்பெற்ற கண் மருத்துவமனையாக சேவையாற்றி வருகிறது. ஒவ்வொரு மருத்துவமனையும் இலவசப் பிரிவுடன் செயல்பட்டு வருகிறது.

# பத்மஸ்ரீ விருது உட்பட பல விருதுகளையும் அமெரிக்க கண் மருத்துவ அமைப்பு, பில் & மிலிந்தா கேட்ஸ் ஃபவுண்டேஷன் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் வழங்கிய விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். ஏழை நோயாளிகளுக்கு பார்வை அளிப்பதை தெய்வத் திருத்தொண்டாக மேற்கொண்ட ஜி.வெங்கடசாமி 2006ல் 87-வது வயதில் காலமானார்.

- ராஜலட்சுமி சிவலிங்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x