Published : 30 May 2015 10:56 AM
Last Updated : 30 May 2015 10:56 AM

ஜெயகாந்தனோடு பல்லாண்டு 33- சபரிமலை விரதம்

எங்கள் முதல் பம்பை அனுபவத்தை நான் ஏற்கெனவே ராஜசபை அவர்களைப் பற்றி எழுதியபோது விவரித்துள்ளேன்.

அய்யப்பன் சந்நிதானத்துக்குச் சென்று தரிசனம் முடிந்து கீழிறங்கி வந்து, நீலிமலை இறக்கத்தின் முடிவில் நின்றார் ஜெயகாந்தன். நிமிர்ந்த அந்த நீலிமலை ஏற்றத்தைப் பார்த்துவிட்டு “அப்பாடா! அய்யப்பனாவது கிய்யப்ப னாவது. இன்னொரு தடவை வந்து இந்த மலையெல்லாம் நம்மால ஏற முடியாதுப்பா!” என்றார் திகைத்த படி.

ஆனால், ஓவ்வோராண்டும் அந்த மலைகளை எல்லாம் ஏறி இறங்கத்தான் செய்தார். மொத்தம் 11 ஆண்டுகள் ஜெயகாந்தன் சபரிமலை யாத்திரை சென்றார். அவருடைய கடைசித் தடவையில் மட்டும்தான் நான் பங்கேற்கவில்லை.

சபரிமலைக்கு இரண்டாவது ஆண்டு ஆழ்வார்ப்பேட்டையில் இருந்து புறப்பட்ட ஜே.கே, எங்களை மயி லாப்பூர் ராமகிருஷ்ண மடத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த தியான மண்டபத்தில் சிறிது நேரம் கண்மூடி அமர்ந்தோம். அங்கிருந்த துறவிகள் ஜெயகாந்தனை அன்புடன் வரவேற்றுப் பேசி, அவர் கழுத்தில், சிறுசிறு ருத்ராட்சங்களைக் கோத்து உருவாக்கிய ஓர் அழகிய மாலையை அணிவித்து ஆசி வழங்கினர்.

அங்கிருந்து புறப்பட்டு தாம்பரம் தாண்டியதும், ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் ஓய்வெடுப்பதற்காகச் சிறிது நின்றோம். அப்போது ஜெயகாந்தன் “நான், இன்னும் ஒரு குழந்தைக்குத் தந்தையாகப் போகிறேன்!” என்கிற நல்ல செய்தியைச் சொன்னார்.

அவருக்குள் அரும்பியிருக்கிற பக்தியின் அநேக காரணங்களுக்கெல் லாம் அப்பாற்பட்ட ஆழ்பொருள் ஒன்று எனக்கு புரிந்த மாதிரி இருந்தது. ஆனால், இதை நான் எல்லோ ரிடமும் வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டிருக்கவில்லை. மனசுக்குள் நிறுத்திக்கொண்டேன்.

அடுத்து, சில மாதங்கள் கழித்து, ஜெயகாந்தனிடம் இருந்து ஓர் அஞ்சல் வந்தது. அதில், “அன்புள்ள குப்புசாமி, இன்று நான் ஓர் ஆண் குழந்தைக்குத் தந்தையுமானேன். நண்பர்களுக்கு இதைக் கூறவும்” என்று எழுதியிருந்தது.

இரண்டாம் முறையாக நாங்கள் சபரிமலை விரதம் தரித்தபோது, விரத காலத்தில், ஜெயகாந்தன் சிவகங்கை யில் ஒரு கூட்டத்தில் பேசவேண்டி வந்தது. நாங்களும் உடன் சென் றிருந்தோம். மேடையில், விரதத்துக்கான வேட்டியோடு ஜெயகாந்தன் வீற்றிருந் தார்.

அப்போது ஒருவர் மேடையேறி வந்து, ஜெயகாந்தனிடம் பாக்கெட் நோட்டு போன்ற ஒரு சிறிய புத்த கத்தை வழங்கினார். அதை வாங்கிப் பார்த்த ஜெயகாந்தன், அதைத் தன் சட்டைப் பையில் பத்திரமாக வைத்துக்கொண்டார்.

அந்த சிவகங்கைக் கூட்டம் முடிந்த பிறகு, நாங்கள் தங்கியிருந்த விடுதிக்குத் திரும்பினோம். ஜெயகாந்தன், தனது சட்டைப்பையில் இருந்து அந்தச் சிறிய புத்தகத்தை எடுத்தார்.

“ஏம்பா! யாரோ ராமசாமிப் புலவராம்ப்பா. ஐயப்பன் மேலே பதினெட்டுப் பாட்டு எழுதியிருக்காராம். மகிஷாசுரமர்த்தினி சுலோகம் மெட்டுல நல்லாயிருக்கு. கவிதையாவும் இருக்கு…” என்று ஜேகே கூறி அறிமுகப்படுத்திய அந்தப் பதினெட்டுப் பாடல்களும், அதன் பின் எங்களின் எல்லா யாத்திரைகளிலும் பிரதான மான இடத்தைப் பிடித்துக்கொண்டு விட்டன.

ஒருமுறை எருமேலியில் இருந்து சாலகாயத்துக்குப் பஸ்ஸில் போய் கொண்டிருந்தோம். பஸ்ஸில் இருந்தவர் களில் ஒரு குழுவினர் விதவிதமான வாத்தியக் கருவிகளை தங்கள் கையில் வைத்திருந்தனர். முதலில் ஓர் அரை மணிநேரம் அவர்கள் தங்கள் நாம சங்கீர்த்தனப் பஜனையைப் பாடினர். வாத்தியக் கருவிகள் எல்லாம் ஓய்ந்த பிறகு, நாங்கள் எங்கள் அபிமானத்துக்கு உகந்த சிவகங்கை ராமசாமிப் புலவரின் அந்தப் பதினெட்டுப் பாடல்களைப் பாடத் தொடங்கினோம்.

அப்போது எங்கள் குழுவில் பத்துக்கும் மேற்பட்டவர் இருந்தனர். ஒவ்வொருவரும் ஒரு முறை என அந்தப் பதினெட்டுப் பாடல்களும் பல மடங்குப் பெருகி அந்த பஸ்ஸையே நிறைத்தன. அந்தப் பாடலோசையோடு சென்ற எங்கள் பஸ் ஒவ்வொரு சிற்றூரைச் சந்திக்கும்போது எல்லாம் “சாமி, மாலை குடு... சாமி, மாலை குடு” என்று சின்னஞ்சிறார் பஸ்ஸின் ஓரமாகவே ஒடிவந்து கையேந்திக் கேட்டனர். ஐயப்பனின் பேரால் அணிவிக்கப்பட்ட மாலைகள் அனைத் தும் அவர்களை நோக்கி வீசப் பட்டன.

அந்த சிவகங்கை ராமசாமிப் புலவரின் பாடல்களை நாங்கள் பெற்றது 1973-ம் ஆண்டு வாக்கில். அவர் இப்போது இருக்கிறாரா, இல்லையா என்பது தெரியாது. பக்தியும் மகிஷாசுரமர்த்தினி சுலோகத்து மெட்டையும் நல்ல வளமான தமிழையும் கொண்டு, ராமசாமிப் புலவர் இயற்றிய பாடல்களில் கவிதை ததும்பும் சில வரிகளை உங்கள் பார்வைக்குத் தருகிறேன்.

“உலகு நலம்பெற அடவி மலைத் தொடர்

உச்சியில் ஏறி அமர்ந்தவனே

நிலவு முகத்தினர் உறவை மறந்து

நிலைத்த தவத்தில் நிறைந்தவனே

கொல்ல வரும்புலி உன்பெயர் சொல்லக்

குனிந்து வணங்கி நகர்ந்து செலும்

அல்லல் தரும் பரல் கல்லொடு முள்வகை

அழகிய பஞ்சணை ஆகிவிடும்

சில்லென வீசிய வாடையும் தூறலும்

தென்றல் பன்னீர் என மாறிவிடும்

தேரொடு யானைகள் நால்வகைச் சேனைகள்

செருவில் நடத்தும் மஹாதரனே

படிபதினெட்டிலும் முடிதொட நெஞ்சினில்

பரவச வெள்ளம் பரந்ததுவே

அடிமை சுமந்து நடந்த முடிச்சுக்கள்

ஐயன் பதத்தில் அவிழ்ந்தனவே..!’’

வெள்ளக்குட்டை ஆறுமுகம் என்கிற எங்கள் நண்பர் அந்தப் பதினெட்டுப் பாடல்களையும் அச்சிட்டு வைத்துள்ளார். விரும்புபவர்கள் என் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டால் அந்தப் பாடல்களை இப்போதும் வழங்க முடியும்.

ஜே.கே.துளிகள்!

ஜெயகாந்தனை ஜே.கே என்று முதன்முதலில் செல்லமாக அழைத்தவர் நடிகர் சந்திரபாபு.

சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஊருக்கு நூறு பேர், உன்னைப் போல் ஒருவன், யாருக்காக அழுதான், புதுசெருப்பு ஆகிய ஜே.கே-வின் எழுத்துக்கள் திரைப்படமாகியுள்ளன.

இதில் ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘யாருக்காக அழுதான்’, ‘புது செருப்பு’ ஆகிய படங்களை ஜெயகாந்தனே இயக்கியுள்ளார்.

சாகித்திய அகாடமி விருது, ஞானபீட விருது, பதம் பூஷண் விருது, ரஷ்ய விருது போன்ற விருதுகளை ஜே.கே பெற்றுள்ளார்.

1977 சட்டமன்றத் தேர்தலில் தியாகராய நகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக ‘சிங்கம்’ சின்னத்தில் ஜெயகாந்தன் போட்டியிட்டார். 481 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

பாவேந்தன் பாரதிதாசன் ஜெயகாந்தனின் மேல் அன்பு கொண்டவர். திருவல்லிக்கேணி பாண்டியன் ஸ்டுடியோவில் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இப்போதும் ஜே.கே-வின் வீட்டில் உள்ளது!



- தொடர்வோம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: pisakuppusamy1943@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x