Published : 04 Nov 2014 10:37 AM
Last Updated : 04 Nov 2014 10:37 AM

ஜம்னாலால் பஜாஜ் 10

தொழில் நிறுவனத்தைத் தொடங்கிய காந்தியவாதி ஜம்னாலால் பஜாஜ் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

 ராஜஸ்தானில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். உறவுக்கார பணக்கார தம்பதியின் பேரனாகத் தத்தெடுக்கப்பட்டார். தொழில் நுணுக்கங்களை கற்று, தாத்தா இறப்பதற்கு முன்பு குடும்பத் தொழிலை எடுத்து நடத்தும் அளவுக்கு முன்னேறினார். பின்னாளில் பஜாஜ் குழுமமாக புகழ்பெறவிருந்த தொழில் நிறுவனத்தை1926-ல் தொடங்கினார்.

 முதல் உலகப் போரின்போது நிதி வழங்கிய இவருக்கு பிரிட்டிஷ் அரசு ராய் பகதூர் விருது வழங்கியது. 1921-ல் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டபோது அதை திருப்பிக்கொடுத்துவிட்டார்.

 மகாத்மா காந்தி தென் ஆப்ரிக்காவில் இருந்து திரும்பியவுடன், அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் இணைந்தார். அனைவரும் சுதேசிப் பொருட்களைப் பயன்படுத்துவதே நாட்டின் வறுமையைப் போக்கும் என்ற காந்தியின் தொலைநோக்கு இவருக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

 ஆங்கிலேயர்கள் இங்கிருந்து மலிவு விலையில் பருத்தியை வாங்கி இங்கிலாந்துக்கு அனுப்பி அங்கிருந்து விலை அதிகமான துணிகளாக இறக்குமதி செய்வதையும் கண்டார். சுதேசிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

 காந்தியின் எளிய வாழ்க்கை பிடித்ததால், மனைவி, மக்களோடு சபர்மதி ஆசிரமத்துக்கு வந்து சிலகாலம் தங்கியிருந்தார். 1923-ல் கொடி சத்தியாகிரகத்தில் பங்கேற்றார். காந்திக்கு மிகவும் நெருக்கமான சகாவாக, அவரைப் பின்பற்றினார். காந்தி இவரை தன் மகன்போலக் கருதினார்.

 காந்தி வார்தாவில் தங்கியிருந்து சுதந்திரப் போராட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது இவரது விருப்பம். 1930-ல் வார்தா அருகே உள்ள சேவாகிராம் என்ற கிராமத்தில் காந்தி வசிக்கத் தொடங்கினார். காந்தி சேவா சங்கத்தின் தலைவராக ஜம்னாலால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராகவும், 1933-ல் காங்கிரஸ் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 தீண்டாமை ஒழிப்பு, இந்தி பிரச்சாரம், கதர் ஆடை மற்றும் கிராமத் தொழில் மேம்பாடு ஆகியவற்றில் முழு மூச்சுடன் பங்கேற்றார். கதர் அணிவதை வலியுறுத்தி நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டார்.

 தேசப் பொது மொழி அவசியம் என்று காந்திபோலவே இவரும் கருதினார். இந்தியைப் பரப்ப, ராஜாஜியுடன் சேர்ந்து தட்சிண பாரத இந்தி பிரச்சார சபா தொடங்கினார்.

ஹரிஜன மக்களுக்காக வார்தாவில் 1928-ல் லட்சுமி நாராயண் மந்திர் என்ற கோயிலை சொந்த செலவில் கட்டினார். சமபந்தி போஜனங்களில் கலந்துகொண்டார். தனது வயல்கள், தோட்டங்களில் பொதுக் கிணறுகளை வெட்டினார்.

 தனது செல்வத்தில் பெரும் பங்கையும் தொழில் லாபத்தையும் சமுதாய நலன்களுக்காகவே செலவிட்டார். ‘தனிநபர் ஆதாயத்தைவிட சமுதாய நலன்தான் முக்கியம்’ என்பதில் வலுவான நம்பிக்கை கொண்டிருந்தார். 53-வது வயதில் காலமானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x