Published : 31 Dec 2015 10:09 AM
Last Updated : 31 Dec 2015 10:09 AM

ச. வே. சுப்பிரமணியன் 10

பைந்தமிழ் மொழிக்கு பாங்குற தொண்டாற்றி வரும் முதுபெரும் தமிழறிஞர் ச. வே. சுப்பிரமணியன் பிறந்த தினம் இன்று (டிசம்பர் 31). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l நெல்லை மாவட்டம் வீரகேரளம் புதூரில் பிறந்தவர் (1929). விக்ரம சிங்கபுரம் புனித இருதய மேல்நிலைப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டமும் கேரளப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.

l தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் 1953 முதல் மூன்றாண்டுகள் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியிலும் திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார். கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராக வழிநடத்தினார்.

l சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றி அரிய ஆய்வு நூல்களை வெளியிட்டார். சிலப்பதி காரத்தில் விசேஷ ஈடுபாடு கொண்ட இவர், சிலப்பதிகாரத்தை இசையுடன் பாடியே பாடம் நடத்துவார்.

l இவரது மாணவர்களில் பலர் இன்று புகழ்பெற்ற தமிழறிஞர்களாக உள்ளனர். படைப்பாற்றல் மிக்க இவர், தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் எழுதும் திறன் பெற்றவர்.

l இலக்கிய நினைவுகள், மாந்தர் சிறப்பு, ஒன்று நன்று, கம்பன் கற்பனை, இளங்கோவின் இலக்கிய உத்திகள், தமிழ் இலக்கிய வரலாறு, சிலப்பதிகாரம் மூலம், சிலம்பும் சிந்தாமணியும், பாரதியார் வாழ்க்கைக் கொள்கைகள், தமிழ் நிகண்டுகள் உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.

l நாட்டுப்புறக் கலை, தத்துவம், தாவரவியல், மண் அமைப்பு ஆகியவை குறித்தும் எழுதியுள்ளார். சிலப்பதிகாரத்தின் சில பகுதிகள் உள்ளிட்ட தமிழின் தொன்மையான பல படைப்புகளை ஆங்கிலத்தில் பல தொகுதிகளாக மொழிபெயர்த்து வெளியிட்டார். சாகித்திய அகாடமி கமிட்டியின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். பேச்சாற்றல் மிக்கவர்.

l 200-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளார். வானொலியில் 100-க்கும் மேற்பட்ட உரைகளை நிகழ்த்தியுள்ளார். இலங்கை, மொரீசியஸ், ஜெர்மனி, போலந்து, செக்கோஸ்லவேகியா, ஜப்பான், பாரீஸ், லண்டன், கெய்ரோ உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பயணம் சென்று கருத்தரங்குகளில் கலந்து கொண்டுள்ளார்.

l 1969-ல் நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் திருவள்ளுவர் கல்லூரியை தொடங்கினார். இவரது மேற்பார்வையில் 44 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். 1985-ல் நெல்லை மாவட்டத் தில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் ‘தமிழூர்’ என்ற ஊரை உருவாக்கி அங்கு வாழ்ந்து வருகிறார். இவரது வீட்டின் பெயரே ‘தமிழகம்’.

l ராஜா சர் முத்தையா செட்டியார் நினைவுப் பரிசு உள்ளிட்ட பல பரிசுகளை வென்றுள்ளார். இந்திய சாகித்திய அகாடமியின் ‘பாஷா சம்மான்’ விருது பெற்ற முதல் தமிழறிஞர் என்ற பெருமைக்குரியவர், ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி விருது, நல் அறிஞர் விருது, அவ்வைத் தமிழ் அருளாளர் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார்.

l ‘Tholkappiyam is the first Universal grammar in the Universe’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வு நூலை 2015 ஜுன் மாதம் வெளியிட்டுள்ளார். ‘தமிழ் ஞாயிறு’, ‘சாதனைச் செம்மல் ச.வே.சு.’ ஆகிய தலைப்புகளில் இவருடைய வாழ்க்கை வரலாறு நூல்கள் வெளிவந்துள்ளன. தமிழ் சிற்றிலக்கியங்களை 50 தொகுப்புகளாக வெளியிடும் பணியில் தற்போது முனைந்துள்ள தமிழ்ப் பேரறிஞர் ச.வே.சுப்பிரமணியம், 86 வயதை இன்று நிறைவு செய்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x