Published : 06 Jul 2014 09:00 AM
Last Updated : 06 Jul 2014 09:00 AM

செக்காலை நாடகக் கலாமன்றம்

அந்தக் காலத்து மேடை நாடகங்களும் மேடைக்கு முன்னால் நடந்த நாடகங்களும்…

திருச்சி வானொலியில் தியாகராஜ பாகவதர் பாடினால், “கொஞ்சம் பெலக்கா சவுண்டு வையுடா’’ என்பார் எங்கள் ஐயா வைரவன். பாட்டு முடியும் வரை ஸ்டேஷனை மாற்ற முடியாது. பாகவதர், பி.யு. சின்னப்பா, கிட்டப்பா,

டி.ஆர். மகாலிங்கம் இவர்களின் பாட்டு என்றால், ஐயாவுக்குச் சோறுதண்ணி தேடாது. காரணம், அவரும் ஒரு ‘ப்ளேபேக் சிங்கர்’.

அந்தக் காலத்தில் கிராமத்துத் திருவிழாக்களில் வள்ளித் திருமணம், சத்தியவான் சாவித்திரி, பவளக்கொடி, அல்லி அர்ஜுனா நாடகங்களை ஒரு வாரம் நடத்துவார்களாம். அந்த ஒரு வாரமும் நாடக செட் ஆட்களுக்குக் கிராமத்தில் ராஜமரியாதைதான். நாடக மேடையில் மைக் செட் இருக்காது. தலைக்கு மேலே பெட்ரோமாக்ஸ் விளக்குகள் மட்டும் செருமிக்கொண்டிருக்கும். வந்து வந்து போய்க்கொண்டிருக்கும் அதன் பிரகாசமான வெளிச்சத்தில் வண்டுகளும் பூச்சிகளும் சுற்றிலும் கும்மியடித்துக்கொண்டிருக்கும். மேடையின் பின்பகுதியில் ஒரு மேசை போட்டிருப்பார்கள். பின்பாட்டுப் பாடுகிறவர்கள் இந்த மேசையில் ஏறி நின்றுகொண்டு கொட்டகையின் உச்சியிலிருந்து உசலாடிக்கொண்டிருக்கும் கயிற்றை ஆதாரமாகப் பிடித்துக்கொண்டு, பின்பாட்டுப் பாட வேண்டும்; அதாவது, உரக்கக் கத்த வேண்டும். அவர் பாடுவது திடலின் கடைக்கோடியில் காலை நீட்டி உட்கார்ந்திருக்கும் கலாரசிகரின் காதையும் குளிர்விக்க வேண்டும். இல்லாது போனால், அடுத்த ஆண்டு நாடகத்துக்குப் பாக்கு வைக்க மாட்டார்கள்; ஆளை மாற்றிவிடுவார்கள். “அந்தக் காலத்துல அப்படியெல்லாம் இருந்துச்சு. இப்பவும்தான் பாடுறாய்ங்களே பாட்டு’’ - இப்படி அடிக்கடி அலுத்துக்கொள்வார் ஐயா.

ஐயாவுக்குப் பல்லெல்லாம் கொட்டிப்போய்ப் பாடுவதை நிறுத்திய பிறகு, அப்பா வந்தார் களத்துக்கு. காரைக்குடியில் உள்ள பெரிய முத்துமாரியம்மனுக்குப் பங்குனியில் திருவிழா வரும். அதில் இறுதி நாள் பேட்டையார் மண்டகப்படி. அன்று இரவு அப்பாவும் அவரது நண்பர்களும் சேர்ந்து நாடகம் போடுவார்கள். இதற்காகவே, ‘செக்காலை நாடகக் கலாமன்றம்’ என்ற அமைப்பை வைத்திருந்தார்கள்.

மகாவிஷ்ணுவுக்குச் சக்கரம் கொடுத்தவர்

அந்த மன்றத்தின் உயிர்நாடி ஃபிலமன் சாமி. எந்த நேரமும் காக்கி டிராயரும் கைவைத்த பனியனுமாய்க் காட்சிகொடுக்கும் அவரை நாங்கள் ‘நைனா’என்றுதான் கூப்பிடுவோம். ஆச்சி மனோரமாவை மேடை நாடகங்

களில் அரிதாரம் பூசவைத்ததே நைனாதான். கைதேர்ந்த எலெக்ட்ரீஷியன். மகாவிஷ்ணுவின் தலைக்குப் பின்னால் சக்கரம் சுற்ற வேண்டுமா… தாமரைக்குள்ளிருந்து பிரம்மன் மலர வேண்டுமா... தனது எலெக்ட்ரிக்கல் மூளையால் அத்தனையையும் தத்ரூபமாய்ச் செய்து அசத்திவிடுவார் நைனா. சம்பூர்ண ராமாயணம், கிருஷ்ணன் தூது, பரதன் சந்திப்பு... இந்த நாடகங்கள் செக்காலை நாடகக் கலாமன்றத்தில் அப்போது மிகவும் பிரபலம்.

பரதன் சந்திப்பில் அப்பா மகாவிஷ்ணு வேடம் அணிந்து, பாற்கடலில் பள்ளிகொண்டிருந்ததை நானே பார்த்து வியந்திருக்கிறேன். ஐந்து தலை நாகம் தலைகளை ஆட்டுவதுபோலவும் அலையடிப்பது போலவும் அழகாக செட் போட்டிருந்தார் நைனா. இந்த நாடகங்களில் அப்பாவின் நண்பர்கள் அத்தனை பேரும் நடித்தார்கள். எனது மூத்த அண்ணன் வைரவன் பால லெட்சுமணராக நடித்தது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. அதிர்ந்து பேசாத, சைவச் சாப்பாடு சிதம்பரத்தை ராவணன் வேடம்போட வைத்ததை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும்.

கிழிந்த பாயில் காவல்

அப்போது நாங்கள் செக்காலை அருணாச்சலம் செட்டியார் வீதியில் ஒரு செட்டியார் வீட்டில் குடியிருந்தோம். நாடகத்துக்கு முதல் நாள் அந்த வீட்டின் முகப்பில் ஒத்திகை நடக்கும். மதுரை அல்லது திருச்சியிலிருந்து கதாநாயகி மற்றும் துணை நடிகைகளை வர வைத்திருப்பார்கள். அவர்களுக்கு எங்கள் வீட்டில்தான் சாப்பாடு. மறுநாள் நாடகம் நடக்கும்போது “சீதையா நடிக்கிற பொம்பள எங்க வீட்டுலதான் சாப்புட்டாங்க தெரியும்ல’’ என்று என் சோட்டுப் பொடியன்களிடம் நானும் என் தம்பி சாயிராமும் பெருமை பீத்திக்கொள்வோம்.

நாடகம் பார்க்க எங்கள் சொந்தபந்தங்களெல்லாம் பக்கத்து ஊரிலிருந்து வருவார்கள். அவர்கள் நாடகம் பார்க்க வசதியாக, இதற்காகவே (பத்திரப்படுத்தி!) வைத்திருக்கும் ஓரம் கிழிந்த பாய்களை நாடகத் திடலில் மேடான இடம் பார்த்து விரித்து வைத்து, அதில் யாரும் நடமாடாதபடிக்கு நானும் என் தம்பியும் காவல்காப்போம். சில சமயம் நாடகம் ஆரம்பிக்கும் முன்பாகவே நாங்கள் தூங்கிப்போவதும் உண்டு. மேடையில் அப்பா தோன்றியதும், “அடே சாயி… சம்முகம் அப்பா வந்துருச்சுடா” என்று எங்க அப்பத்தாதான் எங்களை எழுப்புவார். எங்களை எழுப்பிவிட்டு, மகாவிஷ்ணுவாக நிற்கும் மகனைப் பார்த்துக் கைகூப்பிக்கொண்டிருப்பார் அப்பத்தா.

மேடையில், அப்பா மகாவிஷ்ணுவாக நின்று கொண்டிருப்பார். அரைத் தூக்கத்தில் ஏதோ தேவலோகத்தில் இருக்கும் பிரமையில் நாங்களும் இருப்போம். அந்த நேரம் பார்த்து, பீடி புகையில் ரயில் விட்டுக்கொண்டு, மண்ணெண்ணெய் ‘ஸ்டவ்’ வுடன் நடமாடும் சுக்குமல்லி காப்பிக்காரர் அந்தப் பக்கம் வருவார். அப்பத்தாவின் கருணையில் அதில் ஒரு டம்ளர் வாங்கி அவசரமாய்க் குடித்து நாக்கைப் பொசுக்கிக்கொள்வதுண்டு. அப்புறம் எங்கே தூங்குவது? நாடகம் முடிந்ததும் பொக்கிஷ மான அந்தக் கிழிந்த பாய்களைச் சுருட்டித் தலையில் தூக்கிக்கொண்டு அரைத் தூக்கத்தில் அலைபாய்ந்தபடி வீட்டுக்கு நடப்போம்.

நினைவாலே சிலை செய்தவர்

அப்பாவின் நண்பர்கள் 12 ஆண்டுகள் தொடர்ச்சி யாக நாடகம் போட்டார்கள். குழுவில் இருந்த பலருக்கு வயதாகிப்போனதால் ‘செக்காலை நாடகக் கலாமன்றம்’ நாடகம் போடுவதை நிறுத்திக்கொண்டது. அதன் பிறகு, ஜான் வாத்தியார், மாதவன் சார், சி.ஆர். சாமி இவர்களெல்லாம் அதே மேடையில் சமூக நாடகங்களைப் போட்டார்கள். கடைசியாக, ‘செந்தமிழ் இளைஞர் மன்றம்’ உதயமானது.

மன்றத்துக்குத் தலைவர் எனது அண்ணன் வைரவன். அடுத்த தலைமுறை நடிக்க ஆரம்பித்தது. அண்ணனும் அவரது நண்பர்களும் சேர்ந்து, ‘எதுவும் நடக்கலாம்’, ‘ஒரு தீபம்’, ‘யாருக்காக’ உள்ளிட்ட சமூக நாடகங்களை அதே மேடைகளில் அரங்கேற்றினார்கள். இதில் பெரும்பாலான நாடகங்களில் அண்ணன்தான் ஹீரோ. சென்னையிலிருந்தும் மதுரையிலிருந்தும் ஹீரோயின்களை வரவழைப்பார்கள். நாடகத்தில் டூயட் பாடல்களும் தூள்பறக்கும். ஒரு சமயம், ‘நினைவாலே சிலை செய்து உனக்காக வைத் தேன்’ பாடலுக்கு ஹீரோயினுடன் டூயட் பாடிய அண்ணன், அந்த அம்மாவை(!) தாங்கிப் பிடிக்க முடியாமல் கீழே விழுத்தாட்டிய கூத்தும் நடந்தது.

நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. திடீரென, அண்ணனுக்குத் திருமணம் ஆகிப்போனது. “இனி மேல் நாடகத்திலெல்லாம் நடிக்கக் கூடாது” என்று அண்ணியிடமிருந்து ஆணை. இதையே அப்பாவும் அம்மாவும் சொன்னபோது சிலிர்த்துக்கிளம்பியவர், அண்ணியின் ஆணைக்கு அப்பீல் சொல்லவில்லை. அதன் பிறகு, ஒன்றிரண்டு நாடகங்களை மட்டுமே போட்டது செந்தமிழ் இளைஞர் மன்றம். பின்னர், நாடக மேடைகளைப் பாட்டுக் கச்சேரிகளும் ஆடல்

பாடல்களும் ஆக்கிரமித்துக்கொண்டன. இப்போதும் அந்த மேடையைப் பார்க்கும்போது அப்பாவும் அண்ணனும் அரிதாரம் பூசி நடித்த நாடகக் காட்சிகளில் சில என் கண் முன்னே வந்து நிழலாடி விட்டுப் போகும். நாடகம் நடந்த திடலோ காலம் விரித்துப்போட்ட கிழிந்த பாய்போலக் கிடக்கும்.

குள. சண்முகசுந்தரம்- தொடர்புக்கு: shanmugasundaram.kl@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x