Published : 06 Jun 2016 11:23 AM
Last Updated : 06 Jun 2016 11:23 AM

சா.கணேசன் 10

விடுதலை வீரர், இலக்கியவாதி

சுதந்திரப் போராட்ட வீரரும், சிறந்த தமிழ் அறிஞருமான ‘கம்பனடிப்பொடி’ சா.கணேசன் (Sa.Ganesan) பிறந்த தினம் இன்று (ஜுன் 6). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l சிவகங்கை மாவட்டம் காரைக்குடி யில் (1908) பிறந்தார். திண்ணைப் பள்ளியில் பயின்றார். வித்வான் சிதம்பர ஐயர், பண்டித சேதுப்பிள்ளையிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் கற்றார். பின்னர் தானாகவே வடமொழி, ஆங்கிலம் கற்றார்.

l அறிவியல், வரலாறு, ஜோதிடம், எண்கணிதம் என பல துறை களிலும் வித்தகர். 12 வயதில் அரசியலில் இறங்கினார். 1927-ல் காந்திஜி காரைக்குடிக்கு வந்தபோது காங்கிரஸில் இணைந்து காந்திஜிக்கு சேவை செய்யும் தொண்டர்படைத் தலைவரானார். தனிநபர் சத்தியாகிரகத்தில் பங்கேற்று டெல்லி நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். கைது செய்யப்பட்டு 4 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

l ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை செட்டிநாட்டுப் பகுதியில் முன்னின்று நடத்தினார். ஆங்கில அரசால் இவரது வீடு ஜப்தி செய்யப்பட்டு, சொத்துகள் சூறையாடப்பட்டன. இதுகுறித்து ஏற்கெனவே அறிந்தவர், தான் பாடுபட்டு நிறுவிய வீட்டு நூலகத்தில் இருந்த 5,000 அரிய புத்தகங்களை பத்திரமாக பாதுகாத்தார்.

l மாறுவேடத்தில் ஊர் ஊராகச் சென்று, மக்களை எழுச்சிபெறச் செய்தார். இதனால் இவரைக் கண்டதும் சுட அரசு உத்தரவிட்டது. ராஜாஜியின் அறிவுரைப்படி, சென்னையில் காவலர்களிடம் சரணடைந்தார். 18 மாத சிறை தண்டனை பெற்றவர், சிறையில் கைதிகளுக்கு கம்பராமாயணம் உள்ளிட்ட இலக்கியப் பாடங்களைக் கற்பித்தார்.

l நாடு விடுதலை பெற்ற பிறகு, தியாகிகளுக்கு வழங்கப்படும் நிலம், ஓய்வூதியம் எதையும் பெற மறுத்துவிட்டார். ராஜாஜி, சுதந்திரா கட்சி தொடங்கியபோது, அவருடன் இருந்தார். 1962-ல் இக்கட்சி சார்பில் காரைக்குடி சட்டப்பேரவை தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1968 முதல் 1974 வரை சட்ட மேலவை உறுப்பினராகப் பணியாற்றினார்.

l கம்பன் மீது அளவற்ற பற்று கொண்டவர். பக்தி இலக்கியமாக இருந்த கம்பராமாயணத்தை பேரிலக்கியமாகப் புகழ்பெறச் செய்தவர். 1939-ல் கம்பன் கழகத்தை தோற்றுவித்து, கம்பன் திருநாள் கொண்டாடினார். ஆண்டுதோறும் கம்பன் விழா கொண்டாட ஏற்பாடு செய்தார்.

l பல இடங்களில் கம்பன் கழகங்கள் நிறுவப்பட காரணமாக இருந்தார். காரைக்குடியில் கம்பன் மணிமண்டபம் கட்டினார். இலக்கிய மேடைகளில் பட்டிமன்றம், கவியரங்கம், வழக்காடுமன்றம், நற்றமிழ் முற்றம் போன்ற புதுமையான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தியவர் இவரே.

l கல்வெட்டு ஆதாரங்களைக் கொண்டு பிள்ளையார்பட்டியின் சிறப்பை உலகறியச் செய்தார். கம்பராமாயண ஏட்டுப் பிரதிகளை திரட்டி தமிழ் அறிஞர்களின் உதவியோடு 9 தொகுதிகளாக பதிப்பித்து வெளியிட்டார். ‘கம்பனடிப்பொடி’ எனப் போற்றப்பட்டார். கம்பனுக்கு கிடைத்த மற்றொரு சடையப்ப வள்ளல் என்று ரசிகமணி டிகேசி இவரைப் போற்றினார்.

l கல்லூரி சென்று படிக்காத இவர், மதுரை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட், செனட் உறுப்பினராக 3 முறை நியமிக்கப்பட்டார். கதர் வேட்டி, ஒரு துண்டு மட்டுமே அணியும் வழக்கம் கொண்டவர். பல நூல்களை எழுதியுள்ளார்.

l சிறந்த சொற்பொழிவாளர், அரசியல்வாதி, இலக்கியவாதி, காந்தியவாதி, சிற்பக்கலை வல்லுநர், கல்வெட்டு ஆய்வாளர் என பன்முகப் பரிமாணம் கொண்ட சா.கணேசன் 74-வது வயதில் (1982) மறைந்தார்.

- ராஜலட்சுமி சிவலிங்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x