Published : 27 Sep 2013 05:44 PM
Last Updated : 27 Sep 2013 05:44 PM

குழந்தை வளர்ப்பில் தொலைக்காட்சியை அணுகுதல்

பூனே பயணமொன்றில் அண்ணனுடைய வீட்டில் தங்க நேரிட்டது. அண்ணன் மகளுக்கு அப்போது நான்கு வயது. கார்ட்டூன் டீவியின் விரும்பியாக இருந்தாள். ஆனால் இரவு ஒன்பதானதும் அண்ணி 'அனுமிதா,கரன்ட்டு கட், வந்து தூங்கு' என்றார். அவளும் நிறுத்திவிட்டு உறங்கச் சென்றுவிட்டாள்.

எங்கள் குழந்தை குழலிக்கு அச்சமயம் எட்டு மாதம் தான். அதே உத்தியை நாங்களும் கையாள்வோம் என நினைத்தும் பார்க்கவில்லை. வேறு வேறுகாரணங்கள் கூறி டீவி பார்ப்பதைக் குறைக்கிறோம்.

தொலைகாட்சியை நிறையப் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்று போதிய அளவு இந்நேரம் பயமுறுத்தி இருப்பார்கள். குழந்தைகள் குண்டாவார்கள், ஒழுங்காக அமரத் தெரியாது. கண்கள் பாதிப்படையும், நொறுக்தீனியை நிறைய உண்பார்கள், மூளை வளர்ச்சியில் பாதிப்பு, அடம் அதிகமாவது, கெட்ட விஷயங்களை நிறைய உள்வாங்குகின்றனர்.. இப்படி ஏராளம் ஏராளம்.

சரி அதற்காகத் தொலைக்காட்சியை நிராகரித்து விட முடியுமா? புதிய தொழில்நுட்பத்தை ஓரம் கட்டிவிடமுடியுமா? உண்மையில் குழந்தை வளர்ப்பில் தொலைக்காட்சியை எப்படித்தான் அணுகுவது?

குழந்தைகள் தொலைக்காட்சியின் அடிமையாகப் போவதற்கான அடிப்படை காரணங்கள் என்ன? பெற்றோர்களின் பொறுமையின்மை மற்றும் நேரம் செலவழிக்க முடியாத போக்குமே பிரதான காரணங்கள். டீவியைப் போட்டுவிட்டு நம் வேலையைச் செய்யலாம் என்ற விஷயத்தில் ஆரம்பிக்கின்றது விபரீதம்.தொலைக்காட்சி கார்ட்டூன்களுக்குள் நுழைந்துவிட்டால் அது அவர்களை இழுத்து சாப்பிட்டுவிடும். அவ்வளவு திறமையான வஸ்துக்கள் உள்ளே இருக்கின்றது.

* நாள் ஒன்றிற்கு இத்தனை நிமிடம் / மணி என்ற கட்டுப்பாடு ஆரம்பத்தில் இருந்தே அமலுக்கு வர வேண்டும். இது மிக அவசியம்.

* என்ன நிகழ்ச்சி , எந்தச் சேனலைக் குழந்தைகள் பார்க்கலாம் என்ற தேர்வு பெற்றோர் கையில் உள்ளது. அதனைப் பார்க்க மட்டும் அனுமதிக்க வேண்டும். அந்தச் சேனலை டீவி பெட்டியில் ட்யூன் செய்து வராமல் செய்துவிடலாம்.

சில நிகழ்ச்சிகளில் / சேனல்களில் மொழி மிக மோசமாக உள்ளது. சில நிகழ்ச்சிகள் இன்னும் வளர்ந்துவிட்ட பின்னரே பார்க்கலாம் என்றும் இருக்கும்.

* தொலைக்காட்சியைப் பார்த்து என்ன உள்வாங்கி இருக்கிறார்கள் என்பதை அடிக்கடி பரிசோதனைச் செய்ய வேண்டும். எப்படி? அது பரிசோதனை என்று அவர்களுக்குத் தெரியக்கூடாது. நிகழ்ச்சியின் பெயரைக்கூறி அதில் வரும் கதையினைக் கூறச் சொல்ல வேண்டும். குழந்தைகள் அவர்கள் பார்த்ததைக் கூறுவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். உள்வாங்கியதில் கதை, வார்த்தைகள், கருத்துகள், புதிய மிருகங்கள், பெயர்கள் ஆகியவை பெற்றோருக்கு விளங்கும். அவற்றைப் பற்றிய புரிதலும் பெற்றோருக்கு அவசியம்.

* கார்ட்டூன் கேரக்டர்கள் மீது மோகம் வராமல் பார்த்துக் கொள்வதும் முக்கியம். நமக்குத் தெரியாமல் அது ஒருவியாபார பொருளாகி வருகின்றது. டோரா, சோட்டா பீம், வேர்டுகேள் போன்றவை பொதிந்த பொருட்கள் குழந்தைகளைக் குறிவைத்து தினமும் சந்தையில் வந்து கொண்டிருக்கின்றன. டிபன் பாக்ஸ், ஸ்டிக்கர், கர்சீப்,செருப்பு, ஷுக்கள், ஆடைகள் எனக் குழந்தைப் பயன்படுத்தும் எல்லாப் பொருட்களிலும் நுழைந்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

* நாம் தொலைக்காட்சி பார்க்க வேண்டும் என்ற காரணத்தினால் அவர்களையும் கூட அமர்த்திக் கொண்டு, அவர்கள் மனங்களை பாதிக்கும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை சுயநினைவுடன் தவிர்க்கவும்.

* முடிந்தமட்டில் குழந்தைகள் டீவி பார்க்கும் போது பெற்றோர் யாரேனும் ஒருவர் உடன் அமர்வது சிறந்தது. உங்கள் இருப்பு அங்கே முக்கியம்.

* டீவியில் காட்சி ஓடும்போதே நீங்கள் கண்களை மூடிக்கொண்டு, குழந்தையை விவரிக்க சொல்லுங்கள். ஆரம்பத்தில் கடும்தடுமாற்றம் இருக்கும் கொஞ்ச நேரத்திற்குப் பிறகு குழந்தை கண்ணை மூடிவிட்டு, நீங்கள் விவரியுங்கள். அந்த விவரிப்புகள் குழந்தைகள் என்னென்ன கவனிக்கலாம் என்பதை விளக்க வேண்டும்.

தொலைக்காட்சியைக் கொண்டு நிச்சயம் இந்த உலகின் விஸ்தாரத்தை, பிரம்மாண்டத்தை, அழகினை,தெரிந்துகொள்ள வேண்டியவற்றை, வாழ்கையில் வேண்டிய நம்பிக்கையைக் குழந்தைகளுக்குக் காட்டலாம். கற்பனை வளத்தைக் கூட்டலாம். உடனடியாக நேரில் காண முடியாததை காட்சிகளைக் காட்டலாம்.

குழந்தையை இப்படி கூடவே இருந்து வளர்க்க வேண்டுமா என்ற கேள்வி எழலாம். அவர்கள் கையில் தொடப்போவது கத்தி என்றால் கொஞ்சம் உஷாராக இருப்பதில் தவறில்லை. கத்தியினைக்கொண்டு ஒழுங்காக பயன்படுத்துகின்றார்களா என்பதினை கவனிக்க வேண்டியது நம் பொறுப்பு.

மீண்டும் முன்னர் கூறியதைப்போல நிறைய பொறுமையையும், குழந்தைகளுடன் தரமான நேரத்தையும் பெற்றோர்கள் செலவிடவேண்டும். அந்த அடிப்படை புரிந்துவிட்டால் குழந்தை வளர்ப்பு சுகமானது. இடர்கள் எழும், சமாளித்துவிடலாம்.

குழந்தை வளர்ப்பினை மகிழ்வாய் கொண்டாடி மகிழுங்கள்.

விழியன் - வலைப்பதிவுத் தளம் > http://vizhiyan.wordpress.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x