Published : 26 Apr 2016 12:02 PM
Last Updated : 26 Apr 2016 12:02 PM

குருதத்த வித்யார்த்தி 10

சமூக சேவகர், கல்வியாளர்

ஆரியசமாஜத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பண்டிட் குருதத்த வித்யார்த்தி (Gurudatta Vidyarthi) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 26). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l பாகிஸ்தானின் முல்தான் நகரில் (1864) பிறந்தார். தந்தையிடம் பாரசீக மொழி கற்றார். சமஸ்கிருதத்திலும் நாட்டம் கொண்டிருந்தார். அதே ஊரில் ஆரம்பக் கல்வி கற்றார். புத்தகம் படிப்பதில் அதிக நாட்டம் கொண்டவர். புத்தகத்தை கையில் எடுத்தால், முழுமூச்சில் படித்து முடித்துவிடுவாராம்.

l உருது, ஆங்கில அறிஞர்களின் ஏராளமான புத்தங்கங்களை சிறு வயதிலேயே படித்து முடித்தார். ஆரியசமாஜத்தின் சமஸ்கிருத வகுப்புகளில் சேர்ந்தார். சமஸ்கிருதத்தில் தொடர்ந்து பல மணி நேரம் உரையாற்றும் வல்லமை பெற்றார். உருது கவிதைகள் எழுதினார். ஆங்கிலத்திலும் அசாதாரணப் புலமை பெற்றிருந்தார்.

l லாகூரில் லாலா ஹன்ஸ்ராஜ், லாலா லஜபதி ராய் படித்துக்கொண்டிருந்த அரசுக் கல்லூரியில் சேர்ந்தார். இவர்கள் மூவருக்குள் நெருக்கமான நட்பு மலர்ந்தது. அறிவியலில் நாட்டம் கொண்டிருந்தார். அனைத்தையும் அறிவியல் அடிப்படையிலேயே அலசிப் பார்த்ததால் இவருக்கு இறைவன் குறித்த வலுவான சந்தேகம் இருந்து வந்தது.

l அறிவியலில் 1886-ல் எம்.ஏ. பட்டம் பெற்றார். அரசுக் கல்லூரியிலேயே பேராசிரியராகப் பணியாற்றினார். பஞ்சாப் மாகாணத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். ஆரியசமாஜத்தில் 1881-ல் இணைந்தார். சுவாமி தயானந்த சரஸ்வதிக்கு மிகவும் நெருங்கிய, பிரியமான சீடரானார். இலவச விவாத சங்கம் ஒன்றைத் தொடங்கினார். அங்கு தத்துவார்த்தமான விவாதங்கள் நடைபெற்றன.

l பெரும் பண்டிதராக போற்றப்பட்ட போதிலும், மிகுந்த அடக்கத்தோடு தன்னை ‘வித்யார்த்தி’ (மாணவன்) என்றே கூறிக்கொள்வார். 1883-ல் நோய்வாய்ப்பட்ட சுவாமி தயானந்த சரஸ்வதியை கவனித்துக்கொள்ள லாகூரில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட இருவரில் இவர் ஒருவர். பின்னர், சுவாமி மறைந்தார்.

l அவரது மறைவுக்குப் பிறகு அங்கிருந்து திரும்பிய இவர், புது அவதாரம் எடுத்ததுபோல காணப்பட்டார். தயானந்தராகவே மாறும் தீவிர முனைப்புகளை மேற்கொண்டார். தீவிர தேடல் தாகம் கொண்டவராக மாறினார்.

l தயானந்தரின் மறைவுக்குப் பிறகு அவரது நினைவாக ‘தயானந்த் ஆங்கிலோ வைதிக் காலேஜ்’ என்ற கல்வி அமைப்பை நிறுவ முடிவெடுத்தார். இதற்காக நிதி திரட்டும் முயற்சியில் லாலா லஜபதிராய், லாலா ஹன்ஸ்ராஜ் ஆகியோருடன் இணைந்து நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டார். இறுதியில் 1886-ல் லாகூரில் டிஏவி பள்ளி தொடங்கப்பட்டது.

l வேத கல்வி, வேத பாரம்பரியத்தைப் பரப்பும் முனைப்புகளிலும் சமூக சேவைகளிலும் தீவிரமாக ஈடுபட்டார். ‘எ டெர்மினாலஜி ஆஃப் தி வேதாஸ்’ என்ற இவரது ஆய்வுக் கட்டுரை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக சமஸ்கிருதப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது.

l உபநிடதங்களுக்கு ஆங்கிலத்தில் உரை எழுதி, அவற்றை மொழி பெயர்த்தார். பல நூல்களை எழுதியுள்ளார். ஆரியசமாஜத்தின் அனைத்து சமூக சேவைகளிலும் தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

l அறிவைத் தேடுவதிலும், பரப்புவதிலும், சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்த இவர், தன் உடல்நலத்தில் கவனம் கொள்ளவே இல்லை. தனது மேதைமையாலும் சமூக சிந்தனையாலும் மகத்தான பல சாதனைகளை நிகழ்த்திய, பண்டிட் குருதத்த வித்யார்த்தி காசநோயால் பாதிக்கப்பட்டு 26-வது வயதில் (1890) மறைந்தார்.

- ராஜலட்சுமி சிவலிங்கம்



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x