Last Updated : 08 Jun, 2016 08:14 AM

 

Published : 08 Jun 2016 08:14 AM
Last Updated : 08 Jun 2016 08:14 AM

கும்மிடிப்பூண்டி ‘லோக்கல்’ குவாஹாட்டி போகுமா?

தலைப்பைப் படித்ததும் ‘செக்கு மீது ஏறிக் கொண்டால் சிங்கப்பூரு போகுமா?’ என்ற பாடல் வரி நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல.

சென்னை சென்ட்ரலில் உள்ள புறநகர் ரயில் நிலையத்தில்தான் எல்லா மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கும் டிக்கெட் கவுன்ட்டர்கள் இருக்கின்றன. அங்கு டெல்லி, மும்பை, பெங்களூருக்கு முன்பதிவு இல்லாத டிக்கெட்களை வாங்குவோரில் சிலர், புறநகர் ரயில் நிலையத்தையே பெரிய நிலையமாகக் கருதி தங்களுடைய ரயிலுக்காக சில-பல நிமிஷங்கள் காத்திருக்கின்றனர். அடிக்கடி என்னிடமே சிலர் சிக்குகின்றனர். ‘‘குவாஹாட்டிக்கு எப்போ ரயில்?’’ என்று என்னிடம் ஒருவர் கேட்டபோதுதான் இது தெரிந்தது; ‘பக்கத்தில் இருப்பதுதான் பெரிய சென்ட்ரல், இது புறநகர ரயில்களுக்கானது’ என்று கூறியதும் பதற்றத்துடன் குடும்பத்தை இழுத்துக்கொண்டு விரைந்தார். புறநகர் மேலாளரிடம் இதைக் கூறியபோது, “மேலே ஒரு போர்டு இருக்கிறது, அதைப் படிக்காவிட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்று மிகவும் கனிவோடு (பொறுப்போடும்தான்) பதில் கூறினார். டிக்கெட் வாங்கும் இடத்துக்கு அருகிலேயே இந்தி, ஆங்கிலம், தமிழ் என்று 3 மொழிகளிலும் டெல்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத், ஆமதாபாத், திருவனந்தபுரம் ரயில்களுக்கான நிலையம் அடுத்தது என்று அம்புக்குறியுடன் போர்டுகளைக் கட்டாயம் வைக்க வேண்டும். அல்லது டிக்கெட் கவுன்ட்டர்கள் மெயின் ரயில் நிலையத்துக்கே மாற்றப்பட வேண்டும். (தெற்கு ரயில்வே அதிகாரிகளே) செய்வீர்களா?

காங்கிரஸ் ஆண்டாலும் பாஜக ஆண்டாலும் ஏன் ராணுவமே ஆண்டாலும்கூட ரயில்வே நிர்வாகத்தை அவ்வளவு எளிதில் மக்களுக்கு ஆதரவாகச் செயல்படச் செய்துவிட முடியாது. இருந்தாலும் நமக்கு சபலம் போவதில்லை.

சமீபகாலமாக அரக்கோணம் சென்னை, கும்மிடிப்பூண்டி சென்னை மார்க்கங்களில் புறநகர் மின்சாரப் பயணிகள் கூடுதல் இம்சைகளை - சக பயணிகள், பிச்சை எடுப்போர், தின்பண்டங்கள் விற்போர், அரசியல் பிரச்சாரக் குழுக்கள், திருநங்கைகள் - போன்றோரால் அனுபவிக்கின்றனர்.

அரக்கோணம் சென்னை மார்க்கத்தில் அதிகாரப்பூர்வமற்ற வகையில் ‘2 வர்த்தக மண்டலங்கள்’ இருக்கின்றன! சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே நடைமேடை 12, 13, 14 ஆகியவற்றில் மூட்டை களில் அடுக்கிவைத்து 5 ரூபாய்க்கு சிப்ஸ், இதர நொறுக்குத் தீனிகளை விற்போர். இவர்கள் அநாவசியமாக ரயிலில் ஏறி கூடவே வரமாட்டார்கள். பிளிப்கார்ட், அமேசான் போல இணையதளத்தில் ஆர்டர் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. சென்ட்ரலில் இருந்து புறப்படும் வரை, பெட்டிக்குள் ஏறி விற்று விட்டுக் கீழே இறங்கிவிடுவார்கள். இவர்கள் விற்கும் நொறுக்குத் தீனிகளில் உள்ள ரசாயனங்கள், எண்ணெய், அளவு பற்றியெல்லாம் பயணிகளே கவலைப்படாததால், ரயில்வே துறையில் சுகாதார ஆய்வாளரும் (அப்படியொரு பதவியில் எவராவது இருந்தாலும்) கவலைப்படுவதில்லை. சென்னைப் புறநகர நடைமேடைகளின் தரமான சுகாதாரத்துக்கு இந்த அதிகாரிக்கு ‘காப்பே’ போடலாம்! தெற்கு ரயில்வேயின் ‘தடையற்ற சுதந்திர வர்த்தக மண்டலமாக’ நடைமேடைகளைக் கருதலாம்.

அடுத்த இனம், ரயிலுக்குள் ளேயே இடைவிடாமல் ஏறி வறுகடலை, மூக்கடலை சுண்டல், தேங்காய் புட்டரிசி, பர்பி பாக்கெட், கமர்கட், பத்து ரூபாய்க்கு 3 ‘அண்ணா’ கவுறு உள்பட பல அத்தியாவசிய சாமான்களை எல்லோரையும் இடித்தும், துவைத்தும் விற்பவர்கள். சம்சா விற்பவர்கள் தங்களுடைய வாயமுதத்தையும் தெளித்து, திறந்த டப்பாவில் ‘ஆரோக்கியமாக’ சம்சா விற்கிறார்கள். விலை மலிவு. 10 ரூபாய்க்கு 4. புறநகர் பயணிகள் தங்களுடைய பசியையும், விற்பவர்களின் வாழ்வாதாரத்தையும் உத்தேசித்து, வாங்கிச் சாப்பிட்டு ஆதரவு காட்டுகிறார்கள். நெய் பிஸ்கட், தேங்காய் பிஸ்கட், பப்ஸ், 10 ரூபாய் பாக்கெட்களில் தலை கால் வெட்டப்பட்ட முற்றிய காரட்டுகள், வதங்கிய கத்தரிக்காய், வளையாத வெண்டைக்காய் போன்றவற்றையும் விற்கிறார்கள். காய்கறி, பழம் என்றாலே மொஃபசல் ஏரியா வந்துவிட்டது என்று அறியலாம்.

ரயில் பெட்டியின் தரையை அழகுபடுத்துவதற்காகவே ‘வேச்ச’ கடலை (‘வேகவெச்ச’ மருவி, ‘வெவிச்ச’ ஆகி இப்போது ‘வேச்ச’!) விற்கிறார்கள். இதை வாங்குவோரில் 90 சதவீதம் பேர் ஆழ்ந்த சிந்தனைச் சிற்பிகள். கடலைக்காயை உரித்து வாயில் போட்டுக்கொண்டே தோலை அப்படியே காலுக்கடியில் நழவவிடுவார்கள். சப்போட்டாவாக இருந்தால் எதிரில் இருப்பவரின் காலுக்கு அடியில் துப்புவார்கள்.

சென்ட்ரல் ரயில் நிலைய வாயிலிலேயே ஒருவர் பத்து ரூபாய்க்கு 5 சம்சா விற்பார். டெல்லி, மும்பை, பெங்களூரு, திருவனந்தபுரம் போன்ற தலைசிறந்த ரயில் நிலையங்களில்கூட இந்த சம்சா ‘ரிசப்ஷன்’ விற்பனை கிடையாது. பகல் நேரமானால் மோர் விற்பனை. மாங்காயை மிளகாய்த்தூளில் நீராட்டி அப்படியே திறந்து வைத்து விற்பது சென்னை சென்ட்ரல் எதிரில் ஸ்பெஷல்.

நாடி நரம்பெல்லாம் புடைக்க, ‘‘ஓட்டுப் பொறுக்கிக் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள், தேர்தல் பாதை திருடர் பாதை, மக்கள் அதிகாரத்தைக் கையிலெடுங்கள், டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்குவோம், ஆயுதம் எடுத்துப் போராடுவோம்’’ என்று அன்பார்ந்த உழைக்கும் மக்களை அழைக்கும் அனல் வீச்சு இயக்கத்தினரை ரயில்வே பாதுகாப்புப் படை (அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்திக்காரர்கள், தமிழ் தெரியாது) ஜவான்கள், இருப்புப் பாதைக் காவல்துறையினர் கண்டு கொள்வதே இல்லை. பத்து ரூபாய்க்குத் தங்களுடைய வார இதழை நடப்பு அரசியல் விமர்சனத்துடன் சேர்த்து விற்கவும், இயக்கச் செலவுக்குப் பணம் வசூலிக்கவும் ‘ஃபுளோட்டிங் பாப்புலேஷனை’ நன்றாகப் பயன்படுத்துகிறார்கள். (நாங்க சொல்றதை கேளுங்க, எதிர்த்துப் பேசாதீங்க என்ற அறிவுரையும் உண்டு.)

திருப்பதி, அரக்கோணம், திருத்தணி ‘விரைவு’ ரயில்கள் நடைமேடைக்கு வந்ததும், இளமைத் துள்ளலுடன் பாய்ந்து ஏறி கைப்பை, கர்ச்சீப், செல்போன், லேப்-டாப் என்று 4 அல்லது 5 பொருட்களை இருக்கைகளில் விரித்து அதில் ‘யாரும் உட்காரக்கூடாது, சேத்துப்பட்டில் ரயிலில் வந்துகொண்டிருக்கும் தங்கள் நண்பர்களுக்காக’ என்று அடம் பிடிக்கும் சக பயணிகளான வாலிபர்களை, ஏன் என்று கேட்கக்கூட ரயில்வே துறையில் யாரும் கிடையாது. வயதானவர்கள் நிற்பதை இந்த வாலிபர்களால் கண்கொண்டு ‘பார்க்க’ முடிவதில்லை. எனவே ‘செல்’லில் இயர் பிளக்கை சொருகி பண்பலை வர்ணனையுடன் பாடல்களைக் கேட்டுக்கொண்டு ‘கண்ணை மூடிக்கொண்டு’ விடுகிறார்கள்.

கூட்டம் எவ்வளவு மிதிபட் டாலும் வாயிலிலேயே உட்கார்ந்து அல்லது கேள்விக்குறி போல உடலை மடித்து படுத்து வழிமறிக் கும் வழியடைப்பு சுதந்திரம் தெற்கு ரயில்வேயால் பலருக்கும் தரப்படுகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் அவதிப் பட்டாலும், சிலராவது காற்று வாங்கிக்கொண்டு வருகிறார்களே என்று நாம் சாந்தி அடைய வேண்டும்.

சுதந்திர தினம், குடியரசு தினம், பாபர் மசூதி இடிப்பு தினம், தெற்கு ரயில்வே பொது மேலாளர் புறநகர் மார்க்கமாக பயணிக்கும் தினம் தவிர மற்ற நாட்களில், பயணி களுக்கு ‘இடைஞ்சலாக’ எந்த உயர் அதிகாரியும் நடைமேடை களுக்கோ, ரயில் பெட்டிகளுக்கோ வருவதே இல்லை!

இருப்புப்பாதை காவல் படைக்குத் தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார். அவர் பெரும்பாலும் ஆளும்கட்சியால் விரும்பப்படாதவராக இருப்பார். அவருக்கு இந்தப் பதவி கவுரவக் குறைச்சல். எனவே அவர் அடுத்த சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி வரை பல்லைக் கடித்துக்கொண்டு அந்தப் பதவியை வகிப்பதால் துயரங்கள் தொடர்கின்றன. ரயில்வே துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், ரயில் பாதுகாப்புப் படையினர் என்று முத்தரப்பினரும் உச்சி மாநாடு நடத்தினால் இதற்கெல்லாம் தீர்வு கிட்டலாம். அது சாத்தியமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x