Published : 25 Nov 2015 10:23 AM
Last Updated : 25 Nov 2015 10:23 AM

கார்ல் பென்ஸ் 10

கார் கண்டுபிடிப்பாளர், இயந்திரவியலாளர்

ஜெர்மனியை சேர்ந்த மோட்டார் இயந்திரவியலாளரும், முதன்முதலில் எரிபொருளில் இயங்கும் நான்குசக்கர வாகனத்தை (கார்) தயாரித்தவருமான கார்ல் பென்ஸ் (Carl Benz) பிறந்த தினம் இன்று (நவம்பர் 25). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# ஜெர்மனியின் மூல்பர்க் நகரில் (1844) பிறந்தார். இன்ஜின் டிரை வரான தந்தை, இவருக்கு 2 வயது இருக்கும்போது இறந்துவிட்டார். கடும் இன்னல்களுக்கு நடுவே, இவரை நன்கு படிக்கவைத்து ஆளாக்கினார் தாய். பொறியியலில் பட்டம் பெற்றார்.

# பல நிறுவனங்களில் வேலை செய்தார். மிதிவண்டி, குதிரை வண்டி போல அல்லாமல் எரிபொருளில் இயங்கும் நான்குசக்கர வாகனம் தயாரிப்பது குறித்து இடையறாது சிந்தித்தார். கற்பனையில் சுழன்றதை கணக்கற்ற வரைபடங்களாக தீட்டினார்.

# நண்பருடன் சேர்ந்து பட்டறை தொடங்கினார். இயந்திரங்களின் சுழற்சி நுணுக்கங்களை அறிந்துகொண்டு, நான்குசக்கர வண்டியைத் தயாரித்தார். அது நகருமாறு இயந்திரங்களை இணைத்தார். கை சுழற்சியால் சிறிது தூரம் அது தானாகவே ஓடும்படி செய்தார். அகஸ்ட் ரைட்டருடன் இணைந்து இரும்பாலை, இயந்திரவியல் பட்டறையை உருவாக்கினார்.

# இவரது மனைவி பெர்த்தா ரிங்கரும் இயந்திரவியலில் ஆர்வம் கொண்டவர். இருவரும் இரவு பகலாக உழைத்து பல இன்ஜின்களை வடிவமைத்தனர். ஸ்பார்க் பிளக், கார்பரேட்டர், கிளச், கியர் ஷாப்ட் உள்ளிட்டவற்றை உருவாக்கி காப்புரிமை பெற்றனர்.

# 2-ஸ்ட்ரோக் இன்ஜினை வடிவமைத்து 1879-ல் காப்புரிமை பெற்றனர். தொலைதூரம் பயணம் செய்ய இந்த இன்ஜின் சரிப்பட்டு வரவில்லை. இவரது மனைவி சில மாறுதல்கள் செய்து அதை மேம்படுத்தினார்.

# கணவரிடம்கூட சொல்லாமல், தன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அதில் ஏறி புறப்பட்டார். மேன்ஹெய்ம் நகரில் இருந்து 106 கி.மீ. தூரத்தில் ஃபோர்ஷெம் நகரில் உள்ள தன் தாய் வீட்டுக்கு அந்த வாகனத்திலேயே சென்றார். வாகனத்தில் இருந்த சில குறைபாடுகளை வழியிலேயே சரிசெய்தார். ஊரைச் சென்றடைந்த பிறகு, இத்தகவலை பென்ஸுக்கு தந்தி மூலம் தெரிவித்தார்.

# இது உலகின் முதல் நீண்டதூர கார் பயணமாகும். இதை அடிப் படையாகக் கொண்டுதான், பிற்காலத்தில் உலகப் புகழ்பெற்ற பென்ஸ் அண்ட் ஸீ நிறுவனம் 1883-ல் தொடங்கப்பட்டது. பென்ஸ் நிறுவனத்தின் மோட்டார் வேகன் 1885-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. எரிபொருளால் இயங்கும் முதல் வாகனம் இது.

# 1886-1893 இடையே 25 மோட்டார் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இருவர் பயணிக்கும் ‘விக்டோரியா’ வாகனம் (1893), முதல் சரக்கு வாகனம் (1895) ஆகியவையும் வரவேற்பை பெற்றன. 4 ஆயிரம் வாகனங்கள் விற்பனையுடன் உலகின் முதல்தர வாகன உற்பத்தியாளர் என்ற அந்தஸ்தை 1903-ல் பெற்றது பென்ஸ் நிறுவனம்.

# முதலாம் உலகப் போருக்குப் பிறகு நஷ்டம் ஏற்பட்டதால், டிஎம்ஜி மோட்டார் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு, ‘மெர்சிடிஸ்-பென்ஸ்’ என்ற புதிய வடிவம் பூண்டது. இந்த பெயரே இதன் வர்த்தகப் பெயராக நிலைத்தது.

# இறுதிவரை இதன் நிர்வாகக் குழுவில் கார்ல் பென்ஸ் இடம் பெற்றிருந்தார். சுகமாகவும் விரைவாகவும் உலகைப் பயணிக்க வைத்த இந்த சாதனையாளரின் வாழ்க்கைப் பயணம் 85-வது வயதில் 1929-ல் நிறைவடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x