Published : 22 Feb 2017 11:02 AM
Last Updated : 22 Feb 2017 11:02 AM

ஒரு நிமிடக் கதை: வேண்டாம் இந்தப் பாதை

அந்தத் தெருவில் பாதி தூரம் வந்த பிறகு, “நாம வேற தெரு வழியா போகலாம்” என்று சொன்ன கணேசன் மீது எனக்குச் சற்று கோபம் வந்தது.

கடந்த ஒரு வாரமாக கணேசன் இப்படித்தான் நடந்து கொள்கிறான்! நேராக போகும் வழியை விட்டுவிட்டு சுற்றுப் பாதையில் அழைத்துப் போனான். அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இடத்துக்கு என்னையும் ரெண்டு கிலோ மீட்டர் நடக்க வைத்தான்.

“ஏன் கணேசா! நானும் ஒரு வாரமா பார்த்துட்டிருக்கேன். நேரா போகிற இடத்துக்கு சுத்து வழியாவே போறே. உனக்கு என்னதான் பிரச்சினை?” அவனிடம் கேட்டேன்.

“எல்லாம் கடன் பிரச்சினைதான்!” என் றான் கணேசன்.

“யார்கிட்டே எவ்வளவு கடன் வாங்கினே? யாரைக் கண்டு இப்படி ஒளிஞ்சு ஓடுறே?” என்று கேட்டேன்.

“நான் கடன் வாங்கல. கடன் கொடுத்தேன். பாவம் அடுத்த தெருவில இருக்கிற ஒரு பெரியவர் என்கிட்டே ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார். அவருக்கு இருக்கிற கஷ்டத்துல இப்ப அவரால என் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும். அவர் என்னைப் பார்த்தா ‘பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியலியே’ன்னு வருத்தப்படுவார். அவருக்கும் சங்கடம், எனக்கும் சங்கடம். அதான் தூரத்துல அவரைப் பார்த்தாலே அவர் கண்ணுல விழாதபடி நான் வேற பாதையில போய்டுறேன்!” என்று கணேசன் சொல்ல, ‘கணேசன் போவது சுற்றுப் பாதையாக இருந்தாலும் நல்ல பாதைதான்’ என்று தோன்றியது எனக்கு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x