Published : 02 Jan 2015 11:10 AM
Last Updated : 02 Jan 2015 11:10 AM

ஐசக் அசிமோவ் 10

அமெரிக்க அறிவியல் புனைக்கதை எழுத்தாளர்களின் முன்னோடியான ஐசக் அசிமோவ் பிறந்த நாள் இன்று (ஜனவரி 2). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

ரஷ்யாவில் பிறந்தவர். 3 வயதில் இவரது குடும்பம் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தது. அப்பாவின் மிட்டாய்க் கடையில் அசிமோவ் உட்பட குடும்ப உறுப்பினர்கள் வேலை பார்த்தனர். அதீத நினை வாற்றல், அறிவுக் கூர்மை கொண்ட இவர் 5 வயதில் தானாகவே எழுதப்படிக்கக் கற்றுக்கொண்டார்.

 ‘படிப்பது வீண் வேலை. தொழிலைப் பார்’ என்பார் அப்பா. இவருக்கோ எழுத்து, படிப்பு மீது அளவுகடந்த ஆர்வம். பள்ளியில் அனைத்து வகுப்புகளிலும் முதல் மாணவனாக வந்தார். சிறு வயதிலேயே அறிவியல் புனைகதைகளைப் படிக்கத் தொடங்கினார்.

 11 வயதில் கதை எழுதினார். 19 வயதில் இவரது கதைகள் நாளிதழ்களில் வெளிவந்தன. ரசிகர்களும் உருவானார்கள். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1938-ல் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். கடற்படையில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தார். 1948-ல் உயிர் வேதியியலில் டாக்டர் பட்டம் பெற்றார்.

 1950-ல் இவரது கதைத் தொகுப்பு ‘ஐ ரோபோ’ வெளிவந்தது. அடுத்த ஆண்டே இவரது ‘பவுண்டேஷன்’ நாவல் வெளிவந்தது. படைப்பாற்றல் மிக்க இவரது கதைகள் உலகம் முழுவதும் பிரபலமாயின. 1958-ல் முழுநேர எழுத்தாளர் ஆனார்.

 தொடர்ந்து பவுண்டேஷன் அண்ட் எம்பயர், செகண்ட் பவுண்டேஷன் ஆகிய நூல்கள் வெளிவந்தன. 1979-ல் பாஸ்டன் பல்கலைக்கழகம் இவரை கவுரவப்படுத்தி உயிர் வேதியியல் துறைப் பேராசிரியராக நியமித்தது.

 வானவியல், உயிரியல், கணிதம், மதம், இலக்கியம் போன்ற துறைகளிலும் சுய சரிதையாகவும் ஏறக்குறைய 500 புத்தகங்கள் படைத்துள்ளார். 90 ஆயிரம் கடிதங்கள் எழுதியுள்ளார்.

 1956 முதல் இவரது தனிப்பட்ட ஆவணங்கள் பாஸ்டன் பல்கலைக்கழக நூலகத்தில் 464 பெட்டிகள், 232 அடி அலமாரியில் ஆவணப்படுத்தப்பட்டன. உலகின் அறிவியல் புனைகதை (சயின்ஸ் ஃபிக்‌ஷன்) எழுத்தாளர்களில் முக்கியமானவராகக் கருதப்பட்டார்.

 இவர் சிறந்த பேச்சாளரும்கூட. நேசம் நிறைந்தவர். ஆயிரக்கணக்கான ரசிகர்களின் கடிதங்களுக்குப் பொறுமையாக விடையளிப்பார். 1984-ல் அமெரிக்க மனிதநேய சங்கம் இவரை மனிதநேயம் மிக்கவராகத் தேர்ந்தெடுத்தது.

 அந்த சங்கத்தின் கவுரவ முதல்வராகவும் பதவி வகித்தார். பல பட்டங்கள், விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு இவரது நாவலைத் தழுவி வில் ஸ்மித் நடிப்பில் வெளிவந்த ‘ஐ ரோபோ’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. பல்வேறு அறிவியல் அமைப்புகள், நிறுவனங்கள் தங்களது பொருட்களுக்கு இவரது பெயரைச் சூட்டின.

 புதினங்கள், கதைகள் தவிர, குறுநாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவற்றையும் படைத்துள்ளார். 72-வது வயதில் மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x