Published : 04 Jun 2015 11:28 AM
Last Updated : 04 Jun 2015 11:28 AM

எஸ்.பி. பாலசுப்ரமணியம் 10

உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பெற்றவரும் பன்முகத் திறன் கொண்டவருமான எஸ்.பி. பாலசுப்ரமணியம் (S.P.Balasubramaniam) பிறந்த தினம் இன்று (ஜுன் 4). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# ஆந்திரப் பிரதேசம் நெல்லூர் மாவட்டத்தில் பிறந்தவர் (1946). தந்தை ஒரு இசைக் கலைஞர். ஹரிகதா காலட்சேபம் செய்வதில் புகழ் பெற்றவர். காளஹஸ்தி பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி.யும் திருப்பதி ஆர்ட்ஸ் கல்லூரியில் பி.யு.சி.யும் பயின்றார். இளம் வயதிலேயே பாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

# தெலுங்கு சங்கம் ஒன்று நடத்திய பாட்டுப் போட்டியில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் முதல் பரிசை வென்றவர்களுக்கு வெள்ளிக் கோப்பை வழங்குவது வழக்கம். இரண்டு ஆண்டுகள் முதலில் வந்த இவருக்கு வெள்ளிக் கோப்பையைக் கொடுக்காமல் இருப்பதற்காக மூன்றாம் ஆண்டு வேண்டுமென்றே இரண்டாவது பரிசு என அறிவித்தனர்.

# அந்தப் போட்டிக்குத் தலைமை தாங்கிய பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி, இவர்தான் எல்லோரையும்விட சிறப்பாக பாடினார் என்று நிர்வாகிகளிடம் வாதாடி முதல் பரிசைப் பெற்றுத் தந்தார். வெள்ளிக் கோப்பையும் கிடைத்தது.

# சென்னை இன்ஜினியரிங் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்பதால் தொழில் கல்வி பயின்றார். 1966-ல் கோதண்டபாணி இசையமைத்த தெலுங்குத் திரைப்படத்தில் முதன் முதலாகப் பாடினார். தொடர்ந்து பல பாடல்களைப் பாடினார். தமிழில் முதன் முதலாக சாந்தி நிலையம் திரைப்படத்தில் பாடினார்.

# ஆனால் அது வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப் பெண் படத்தில் இவர் பாடிய ‘ஆயிரம் நிலவே வா’ பாடல் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து ஏராளமான வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட அனைத்து இசையமைப்பாளர்கள் இசையிலும் பாடியுள்ளார்.

# முறையாகக் கர்நாடக இசையைப் பயிலாத இவர், சங்கராபரணம் படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடல்களைச் சிறப்பாகப் பாடி உலகம் முழுவதும் பிரபலமானார். அதற்காக தேசிய விருதைப் பெற்றார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட இவர், எந்த மொழியில் பாடினாலும் அந்த மொழிக்கேற்ற இயல்பான உச்சரிப்புடன் பாடுவது இவரது சிறப்பம்சம்.

# 40 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றுள்ளார். தமிழக, கர்நாடக அரசுகளின் பல விருதுகளையும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் வென்றுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றுள்ளார்.

# 1981-ம் ஆண்டு பெங்களூரில் உள்ள ஒரு ரெகார்டிங் தியேட்டரில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களைக் கன்னட இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காகப் பாடிச் சாதனை புரிந்துள்ளார். தமிழில் ஒரே நாளில் 19 பாடல்களையும், இந்தியில் 6 மணி நேரத்தில் 16 பாடல்களையும் பாடிச் சாதனை செய்துள்ளார்.

# கமல், ரஜினி, பாக்யராஜ் உள்ளிட்ட பலருக்கு பல்வேறு மொழிப் படங்களில் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். தென்னிந்திய மொழிகளில் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 45 திரைப்படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார்.

# 60-களில் தொடங்கிய இவரது இசைப் பயணம் நான்கு தலைமுறை நடிகர்களுக்குப் பின்னணி பாடிய ஒரே பாடகர் என்ற பெருமையுடன் அரை நூற்றாண்டைக் கடந்தும் இன்றும் அதே இளமைத் துள்ளலுடன் தொடர்கிறது.

- ராஜலட்சுமி சிவலிங்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x