Published : 11 Mar 2016 11:06 AM
Last Updated : 11 Mar 2016 11:06 AM

எம்ஜிஆர் 100 | 19 - ஸ்ரீதருக்குச் செய்த உதவி!

M.G.R. நடிப்பில் நீங்கள் ஏன் படம் எடுக்கக் கூடாது?.. இயக்குநர் ஸ்ரீதரிடம் அவரது நெருங்கிய நண்பரும் இந்தி நடிகருமான ராஜேந்திர குமார் கேட்ட கேள்வி இது. தமிழ் திரையுலகில் தனது வித்தியாசமான படங்களால் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஸ்ரீதர். தனது சொந்த நிறுவனமான சித்ராலயா பேனரில் திரைப்படங்களை தயாரித்தும் வந்தார். அவர் எடுத்த சில படங்கள் எதிர்பார்த்த அளவு போகாததால் பொருளாதார ரீதியாக நெருக்கடிக்கு ஆளானார். அந்த நேரத்தில் இந்தி நடிகர் ராஜேந்திர குமார், ஸ்ரீதருக்கு கொடுத்த ஆலோசனைதான் ஆரம்பத்தில் உள்ள கேள்வி.

ஆனால் ஸ்ரீதருக்கு எம்.ஜி.ஆரிடம் செல்ல தயக்கம். காரணம், ஏற்கெனவே எம்.ஜி.ஆர் நடிக்க ‘அன்று சிந்திய ரத்தம்’ என்ற பெயரில் படப்பிடிப்பை தொடங்கினார். கருப்பு வெள்ளை படமான அதில், சில காட்சிகள் படமாக்கப்பட்டு ஸ்டில்களும் வெளியாயின. அந்த நேரத்தில் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை யும் வண்ணப்படமாக தயாரிப்பதாக இருந்தார். விளம்பரமும் வெளிவந்தது. ‘புதுமுக நடிகர்களை போட்டு கலரில் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை எடுக்கும் ஸ்ரீதர், உங்களை வைத்து கருப்பு வெள்ளையில் படம் எடுக்கிறாரே?’என்று எம்.ஜி.ஆரிடம் சிலர் திரித்துக் கூறினர். படமும் வளராமல் நின்று போனது. (பின்னர் இதே பெயரில் ஜெய்சங்கர் நடித்த படம் ஒன்று வெளியானது) அதுபற்றி எம்.ஜி.ஆரிடம் விளக்கம் தராதது தனது தவறுதான் என்று பின்னர் ஸ்ரீதர் வருந்தினார்.

‘அன்று சிந்திய ரத்தம்’ படத்தில் நடிப்பதற்காக அட்வான்ஸ் தொகையாக ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கு ரூ.25,000 அளித்தார் ஸ்ரீதர். படம் நின்று விட்ட நிலையில், சில காட்சிகள் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு கொடுக்கப்பட்ட தொகையாக நினைத்து அந்த பணத்தை ஸ்ரீதரும் கேட்கவில்லை.

ஏற்கெனவே, எம்.ஜி.ஆருடன் இணைந்து செய்வதாக இருந்த படம் நின்று போன நிலையில், மீண்டும் அவரை அணுகுவதா? என்று யோசித் தார். இருந்தாலும் நண்பர் ராஜேந்திரகுமாரின் ஆலோசனையை ஏற்றார். இயக்குநர் பி.வாசுவின் தந்தையும், எம்.ஜி.ஆரின் ஆஸ்தான ஒப்பனையாளருமான பீதாம்பரம் மூலம் எம்.ஜி.ஆருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆரும் மனதில் எதுவும் வைத்துக் கொள்ளாமல் ஸ்ரீதர் படத்தில் நடிக்க சம்மதித்தார். எம்.ஜி.ஆரின் உயர்ந்த பண்புக்கும் எப்படி எல்லாம் சிந்தித்து மற்றவர்களை கவுரவப்படுத்துகிறார் என்பதற்கும் ஒரு உதாரணம்... அப்போது ஸ்ரீதருக்கு ஏற்பட்ட நெருக்கடியை எம்.ஜி.ஆர். அறிந்தே இருந்தார். ஸ்ரீதராகத்தான் விரும்பி தனது படத்தில் நடிக்க எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடுத்துள்ளார். எம்.ஜி.ஆர். நினைத்தால் ‘ஸ்ரீதரை வரச் சொல்லுங்கள்’ என்று சொல்லியிருக்கலாம்.

ஆனால், ஒப்பனையாளர் பீதாம்பரத்திடம் எம்.ஜி.ஆர். கூறியதுதான் அவரது உயர்ந்த உள்ளத்தை வெளிப்படுத்தும். ‘‘ஸ்ரீதர் பெரிய இயக்குநர். திடீரென்று என்னை வந்து சந்தித்து பேசினால், நெருக்கடியில் இருந்து மீள எம்.ஜி.ஆரை ஸ்ரீதர் போய் பார்த்தார் என்று செய்திகள் வெளியாகும். நான் போய் ஸ்ரீதரை பார்ப்பதும் சரியாக இருக்காது. அதனால், இருவருக்கும் பொதுவாக நம்பியார் வீட்டில் மதிய உணவுக்கு ஸ்ரீதரை வரச் சொல்லுங்கள். அங்கு சந்தித்து பேசி புதிய படம் பற்றி முடிவு செய்யலாம்’’ என்று பீதாம்பரம் மூலம் சொல்லி அனுப்பினார் எம்.ஜி.ஆர்.

இதைக் கேட்டு சிலிர்த்துப் போனார் ஸ்ரீதர். இருந்தாலும் எம்.ஜி.ஆர். வீட்டில் நான் அவரை சந்திப்பதுதான் முறை என்று கூறி, மறுநாளே ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆரை ஸ்ரீதர் சந்தித்துப் பேசினார்.

வழக்கம் போல எம்.ஜி.ஆரின் உணவு உபசரிப்புக்கு பிறகு தன் நிலைமையை சொல்லி நீங்கள் எனக்கு படம் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று ஸ்ரீதர் கேட்டுக் கொண்டார். அதற்கு சம்மதம் தெரிவித்தார் எம்.ஜி.ஆர்.

ஏற்கனவே கிடைத்த அனுபவத்தால் எம்.ஜி.ஆரிடம் மனம் திறந்து பேசினார் ஸ்ரீதர். ‘‘என் மீது பொறாமை கொண்டவர்கள் நமக்குள் பிளவை ஏற்படுத்துவதற்காக என்னைப் பற்றி உங்களிடம் என்ன சொன்னாலும் நீங்கள் நம்ப வேண்டாம். என்னிடமே நேரடியாக விளக்கம் கேளுங்கள்’’ என்று எம்.ஜி.ஆரிடம் ஸ்ரீதர் கேட்டுக் கொண்டார். அவரது நிலைமையை உணர்ந்து மற்ற படங்களை விட ஸ்ரீதர் படத்துக்கு முன்னுரிமை அளித்து 3 மாதங்களில் நடித்துக் கொடுப்பதாக உறுதியளித்த எம்.ஜி.ஆர்., ஸ்ரீதரே எதிர்பார்க்காத ஒன்றை செய்தார்.

அவ்வாறு, தான் உறுதி அளித்ததை கடிதமாக எழுதிக் கொடுத்து கையெழுத்து போட்டு ஸ்ரீதரிடம் கொடுத்தார். ‘‘இது நீங்கள் பைனான்ஸ் பெறுவதற்கு உதவும்’’ என்றார். எந்தக் கோணங்களில் எல்லாம் சிந்தித்து செயல்படுகிறார் என்று ஸ்ரீதர் வியந்துபோனார். ஸ்ரீதருக்கு எம்.ஜி.ஆர். கடிதம் கொடுத்திருப்பதை அறிந்து, கிரஸென்ட் மூவிஸ் நிறுவனத்தார் அவரை சந்தித்து படத்துக்கு பைனான்ஸ் செய்ததுடன், பல ஏரியாக்களின் விநியோக உரிமையையும் வாங்கிக் கொண்டு அட்வான்ஸ் தொகையை அளித்தனர். இப்படி உருவான படம்தான் எம்.ஜி.ஆர்.-ஸ்ரீதர் கூட்டணியில் உருவாகி வெள்ளி விழா கொண்டாடிய ‘உரிமைக்குரல்’ திரைப்படம்.

அந்தப் படத்தில் நடிப்பதற்காக எம்.ஜி.ஆருக்கு சம்பளமாக குறிப்பிட்ட தொகையை கொடுக்க முன்வந்தார் ஸ்ரீதர். அப்போது ஸ்ரீதருக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி. ஏற்கனவே ‘அன்று சிந்திய ரத்தம்’ படத்தில் நடிப்பதற்காக தனக்கு அட்வான்ஸாக கொடுத்த ரூ.25,000-த்தை எம்.ஜி.ஆர். கழித்துக் கொள்ளச் சொன்னார். ஸ்ரீதரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

அதுதான் எம்.ஜி.ஆர்.

- தொடரும்...

படங்கள் உதவி : ஞானம், செல்வகுமார்

தெலுங்கில் நாகேஸ்வர ராவ் நடித்த ‘தசரா புல்லோடு’ படம்தான் சிறிய மாற்றங்களுடன் எம்.ஜி.ஆர். நடிக்க ‘உரிமைக்குரல்’ ஆனது. படத்தில் ஆந்திர பாணியில் பஞ்சகச்சம் போல எம்.ஜி.ஆர். அணிந்திருந்த வித்தியாசமான வேட்டி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

‘நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு...’ பாடலுக்கு எம்.ஜி.ஆர். அட்டகாசமாக ஸ்டெப் போட்டு ஆடியபோது, தியேட்டரில் ரசிகர்களும் உற்சாகமாக ஆடினர். 12 திரையரங்குகளில் படம் 100 நாட்கள் ஓடியது. மதுரை, நெல்லை ஆகிய ஊர்களில் வெள்ளிவிழா கொண்டாடிய ‘உரிமைக்குரல்’, 1974-ம் ஆண்டின் அதிக வசூல் பெற்ற மகத்தான வெற்றிப்படம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x