Published : 16 Feb 2016 11:18 AM
Last Updated : 16 Feb 2016 11:18 AM

எம்ஜிஆர் 100 | 1 - அண்ணா குறிப்பிட்ட கவிதை!

M.G.R. தமிழர்களைப் பொறுத்த அளவில் தமிழாகி விட்ட ஆங்கில எழுத்துக்கள்.

ஒருவர் ஒரு துறையில் வெற்றி பெறுவதே கடினம். அதிலும் முதலிடம் பெறுவது இன்னும் கடினம். அதைத் தக்க வைத்துக் கொள்வது அதைவிட கடினம். சினிமா, அரசியல் இரண்டு துறைகளிலும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், முதலிடம் பெற்று, அதை கடைசி வரை தக்க வைத்துக் கொண்ட அதிசயமே அசந்து போகும் அதிசயம் எம்.ஜி.ஆர்.

தமிழர்களை மயக்கும் மந்திரச் சொல்லாக அவர் பெயர் ஆனது ஏதோ மாயா ஜாலத்தால் அல்ல. அதற்கு பின்னணியில் இருக்கும் அவரது திட்டமிட்ட கடும் உழைப்பு. அவருக்கே அமைந்த வசீகரம். இந்த இரண்டும் கூட எல்லா நடிகர்களுக்கும் இருந்து விடலாம். ஆனால், மற்றவர்களுக்கு இல்லாத புகழும் பெருமையும் மக்கள் ஆதரவும் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே ஏன்? இவற்றை எல்லாம் தாண்டிய மனிதாபிமானம் என்பதே பதிலாக இருக்கும். இந்த குணத்தால் மக்களை அவர் நேசித்தார். அதனால்தான் மக்கள் அவரை நேசித்தனர். அதனால்தான், இதுவரை எந்த தமிழக முதல்வரும் செய்யாத சாதனையாக அடுத்தடுத்து மூன்று முறை ஆட்சியைக் கைப்பற்றினார்.

1917-ம் ஆண்டு ஜனவரி 17ல் பிறந்த எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கடந்த மாதம் 17-ம் தேதி தொடங்கியுள்ளது. இலங்கையில் கண்டியில் பிறந்து, தந்தையை இழந்து, தாய் மற்றும் தமையனுடன் தமிழகம் வந்து நாடகத்தில் சேர்ந்து சினிமாவில் சிறிய வேடங்களில் தலைகாட்டி, கதாநாயகனாக உயர்ந்து, பொதுவாழ்வில் ஈடுபட்டு, கட்சியின் தலைவராகி, அவர் தமிழக முதல்வரானது எல்லாருக்கும் தெரிந்ததுதான்.

ஆனால், எம்.ஜி.ஆரின் இந்த நெடிய சாதனை வாழ்வில் ஊடாடி இருக்கும் சினிமா, அரசியல், தனிப்பட்ட வாழ்க்கையில் அவரது அருங்குணங்களை, திறமைகளை, சாதுர்யங்களை, மனிதாபிமானத்தை, பண்பு நலன்களை விளக்கும் வகையில், அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர். 100 என்ற பெயரில் 100 முத்துக்களை தொகுத்து வாசகர்களுக்கு அளிக்கிறோம்.

‘‘மரத்திலே பழுத்த கனி தங்கள் மடியிலே விழாதா? என்று பலர் ஆவலாக காத்திருந் தனர். நல்லவேளையாக அது எனது மடியிலேயே வந்து விழுந்தது. அதை எடுத்து எனது இதயத்திலே வைத்துக் கொண்டேன். அந்த இதயக்கனிதான் எம்.ஜி.ஆர்.’’

எம்.ஜி.ஆரைப் பாராட்டி அறிஞர் அண்ணா கூறியதுதான் இது. அண்ணா எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’நாடகத்தில் நடிப்பதற்காக நடிகர் டி.வி.நாராயணசாமியால் அண்ணாவிடம் எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தப்பட்டார். சினிமா வில் துணை வேடங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடிக்க முதலில் ஒப்பந்தமான படம் ‘சாயா'. படத்தின் கதாநாயகி டி.வி. குமுதினி. அப்போதே அவர் புகழ் பெற்ற நடிகை. புதுமுக நடிகரான எம்.ஜி.ஆருடன் நடிப்பதற்கு குமுதினியின் கணவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதுபோன்ற சில காரணங்களால் ‘சாயா' படம் நின்று போனது.

பின்னர், தீவிர முயற்சிக்குப் பிறகு வாராது வந்த மாமணிபோல, ஜூபிடர் நிறுவனத்தின் ‘ராஜகுமாரி’ படத்தில் கதாநாயகனாக நடிக்க எம்.ஜி.ஆருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் நடிக்க வேண்டி இருந்ததால் நாடகத்தில் நடிக்க நேரம் ஒதுக்க முடியவில்லை. அதனால், அந்த நாடகத்தில் எம்.ஜி.ஆரால் நடிக்க முடியாமல் போனது. என்றாலும் அண்ணாவோடு எம்.ஜி.ஆருக்கு பழக்கம் தொடர்ந்தது. அவரது பணத்தோட்டம், சந்திரோதயம் புத்தகங்களைப் படித்து அண்ணாவாலும் அவரது கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டு திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.

திமுக கொடியை முதன்முதலாக திரையில் காட்டியவர் எம்.ஜி.ஆர்.தான். அவரே தயாரித்து இயக்கி நடித்த ‘நாடோடி மன்னன்' படத்தில் ஆணும் பெண்ணும் இருவண்ணக் கொடியை ஏந்தியபடி திரும்புவது போன்ற எம்.ஜி.ஆர். பிக்சர்ஸின் இலச்சினை (லோகோ) படத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் காட்டப் பட்டது. எம்.ஜி.ஆரின் படங்களில் அண்ணாவைப் பற்றியும் திமுக கொள்கைகளைப் பற்றிய வசனங் களும் பாடல்களும் கட்டாயம் இடம்பெற்றன.

அண்ணா தமிழக முதல்வரானதும் சென்னையில் 1968-ம் ஆண்டு தொடக்கத்தில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. அப்போது, சென்னையில் மையப் பகுதியான அண்ணா சாலையில் (அப்போது மவுண்ட் ரோடு) ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் அலுவலகம் எதிரே கையை உயர்த்தியபடி கம்பீரமாக நிற்கும் அண்ணாவின் சிலையை தனது சொந்த செலவில் எம்.ஜி.ஆர். நிறுவினார். சர்.ஏ.ராமசாமி முதலியார் சிலையை திறந்து வைத்தார்.

உலகத் தமிழ் மாநாட்டில் கருத்தரங்கு ஒன்றில் எம்.ஜி.ஆர். பேசினார். கவிதையைப் பற்றிய நயமான விளக்கம் அளித்தார். ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை ’ என்று கூறினார். கூடியிருந்த மக்கள் கரகோஷம் எழுப்பினர்.

பின்னர், அண்ணா பேச வந்தார். எம்.ஜி.ஆருக்கே குருவாயிற்றே? கேட்க வேண்டுமா? கவிதை பற்றி அவர் கூறும்போது,

‘அறிந்ததனை அறிந்தோர்க்கு

அறிவிக்கும் போதினிலே

அறிந்ததுதான் என்றாலும்

எத்துணை அழகம்மா? என்று

அறிந்தோரையும் வியக்க வைக்கும்

அருங்கலையே கவிதையாகும்’

... என்று கவிதையாலேயே கவிதைக்கு விளக்கம் அளித்தார் அறிஞர் அண்ணா. மக்களின் கரகோஷம் அடங்க வெகுநேர மாயிற்று.

தொடர்ந்து அண்ணா பேசும்போது, ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை என்று எம்.ஜி.ஆர். கூறினார். நீங்கள் கைதட்டினீர்கள். எதற்கு என்று யோசித்தேன். பிறகுதான் தெரிந்தது. அவர் தன்னைப் பற்றியே சொல்லியிருக்கிறார். ஆம். அழகும் உணர்ச்சியும் சேர்ந்த எம்.ஜி.ஆரே ஒரு கவிதைதானே...’ என்றார் அண்ணா.

மக்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது. இதயக்கனியின் ஈர்ப்பு ரகசியம் அறிந்தவர் அண்ணா!

தொடரும்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x