Published : 11 Dec 2015 11:26 AM
Last Updated : 11 Dec 2015 11:26 AM

எப்படி? இப்படி! 31 - ரத்தத்தில் செய்த சபதம்!

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்று - திருநெல்வேலி கலெக் டராக இருந்த ஆங்கிலேயர் ஆஷ் வாஞ்சிநாதனால் சுடப்பட்டது.

104 வருடங்களுக்கு முன்பு 1911-ல் நிகழ்ந்தது இந்தக் கொலை. நிகழ்ந்த இடம் மணியாச்சி ரயில் நிலையம். திருமணமான 25 வயது இளைஞரான வாஞ்சிநாதன் வனத்துறையில் பணி புரிந்தபடி வாய்ப்பு கிடைத்தால் நம் நாட்டில் ஊடுருவிய வெள்ளையர்களை கொலை செய்ய வேண்டும் என்கிற வெறியுடன் இயங்கிய ஓர் அமைப்பில் இருந்தவர்.

17.06.1911 அன்று ஆஷ் தன் மனைவி மேரியுடன் கொடைக்கானலில் படித்த தனது பிள்ளைகளைப் பார்க்க திருநெல்வேலியில் இருந்து ரயிலில் புறப்பட்டான். மணியாச்சியில் அவன் வந்த ரயில் பெட்டி வேறு ரயிலில் கோக்கப்படக் காத்திருந்தது. ஆஷின் பாதுகாவலர் தண்ணீர் பிடிக்கப் போன இடைவெளியில் வாஞ்சிநாதன் அந்தப் பெட்டியில் நுழைந்தார். ஆஷின் மார்புக்கு நேராக பெல்ஜியம் நாட்டின் தயாரிப்பான பிரவுனிங் வகை துப்பாக்கியை நிமிர்த்தினார். மூன்று முறை சுட்டார்.

ஆஷின் மனைவி மேரி அலற, ஓடிவந்த பாதுகாவலர் வாஞ்சிநாதனைத் துரத்த, வாஞ்சிநாதன் பிளாட்பார கழிவறைக்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டார். காவலர்கள் கழிவறையின் கதவைத் திறந்து பார்த்த போது அங்கே வாஞ்சிநாதன் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதை உணர்ந்தார்கள்.

அவருடைய சட்டைப் பாக்கெட் டில் இருந்த இரண்டு காகிதங்களில் ஒன்று - பிரான்சில் இருந்து வெளிவந்த ‘வந்தே மாதரம்’ பத்திரிகையின் தலையங்கப் பகுதி. அதில் ‘வெள்ளையர்களைக் கொன்று பாரத மாதாவுக்கு ரத்த அபிஷேகம் செய்ய வேண்டும்’ என்று எழுதப்பட்டிருந்தது. மற்றொன்று, காவல்துறைக்கு வாஞ்சிநாதன் எழுதி வைத்திருந்த கடிதம். அதில் ‘ராமனும், கிருஷ்ணனும் வாழ்ந்த புண்ணிய பூமியை ஆங்கிலேயர்கள் அரசாள்வதா? ஒவ்வோர் ஆங்கிலேயனுக்கும் நமது பாரதத்தின் புத்திரர்கள் நான் செய்ததைப் போலவே செய்வதுதான் கடமை’ என்று எழுதப்பட்டிருந்தது.

காவல்துறை வாஞ்சிநாதனின் இல்லத்தில் சோதனை போட்டபோது நடந்த கொலை தனி மனித செயல் அல்ல என்பதும், இந்தச் சதியில் பலர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதும் தெரிந்தது. கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் ஆறுமுகப் பிள்ளை, சோமசுந்தரம் என்கிற இருவர் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் இரு வரும் அரசுத் தரப்பின் சாட்சிகளாக மாறுவதாகச் சொல்லி அப்ரூவர் ஆனார் கள். நடந்த கொலையை யாரெல்லாம் சேர்ந்து, எப்படி எல்லாம் திட்டம் தீட்டினோம் என்று விரிவாகச் சொன் னார்கள். அவர்கள் கொடுத்தத் தகவல்களை வைத்து மொத்தம் 16 பேரைக் கைது செய்ய காவல்துறை பட்டியல் போட்டது. காவல்துறை கெடுபிடிகளுக்கு பயந்து 16 பேர்களில் இருவர் தற்கொலை செய்துகொள்ள, மீதி 14 பேர்களும் கைது செய்யப்பட்டர்கள்.

இந்த அமைப்பின் தலைமைப் பொறுப் பில் இருந்து செயல்பட்டவர் நீலகண்ட பிரம்மச்சாரி. அவரும் குழுவினரும் அடிக்கடி கூடி சதித் திட்டங்களைப் பேசி வடிவமைப்பார்கள். ஆஷ் கொலை யைப் பற்றி முடிவெடுத்ததும் அதை செயல்படுத்துவது யார் என்று கேள்வி வந்தது. அனைவருமே அதைச் செய்து முடிக்க முன்வந்ததால், அனைவரின் பெயர்களும் எழுதிப் போடப்பட்டு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப் பட்டவர்தான் வாஞ்சிநாதன்.

இந்தச் சதித் திட்டத்தில் பங்கிருந்த தாக மேலும் ஐந்து பேரை ஆங்கில அரசு சந்தேகப்பட்டது. அந்த ஐவரையும் கைது செய்ய உத்தரவும் போட்டது. ஆனால் அவர்களில் மாடசாமிப் பிள்ளை என்கிறவர் தலைமறைவானார். அவர் என்ன ஆனார் என்பது இன்று வரைத் தகவலில்லை. மீதி நான்கு பேரும் பாண்டிச்சேரி சென்று தங்கிவிட்டதால் அங்கு சென்று அவர் களைக் கைது செய்ய இயலவில்லை.

அப்போது பாண்டிச்சேரி பிரெஞ்சுக் காரர்களின் ஆதிக்கத்தில் இருந்ததால் அங்கு சென்று யாரையும் கைது செய்வதானால் அதற்கு பாண்டிச்சேரி அரசின் சம்மதமும் அனுமதியும் தேவை. அதை அத்தனை சுலபமாகப் பெற முடியாது. அங்கே பதுங்கியிருந்த நான்கு பேரையும் ரகசியமாகக் கண்காணித்து அவர்கள் தமிழக எல்லைக்குள் வரும்போது கைது செய்யத் தயாராக ஒற்றர்களையும் காவலர்களையும் நியமித்தது அரசு.

இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப் பட்ட 14 பேர்களையும் குற்றவாளிகள் என்று மூன்று நீதிபதிகளைக் கொண்ட பெஞ்சில் இரண்டு நீதிபதிகளின் கருத்தின் அடிப்படையில் கோர்ட் தீர்மானித்தது. அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. அங்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் நியமிக்கப்பட்டது. அவர்களில் மூன்று பேர் இவர்களைக் குற்றவாளிகள் என்று கருதியதால் அனைவருக்கும் சிறைத் தண்டனை உறுதியானது.

குறிப்பாக ஆஷ் மேல் வாஞ்சிநாத னுக்கு மிகுந்த கோபம் ஏற்படக் காரணம் சுதந்திரப் போராளிகளுக்கு எதிராக ஆஷ் எடுத்த பல நடவடிக்கைகள். குறிப் பாக வ.உ.சி-யை ஆஷ் தன் எதிரியாகவேக் கருதினான். வெள்ளை யர்களுக்கு எதிராக சுதேசிப் பொருட்களைத் தயாரிப்பதும், மக் களைப் பயன்படுத்த வைப்பதும் நோக்கமாகக் கொண்டு சுதேசி இயக்கம் நிகழ்ந்தபோது தூத்துக்குடியில் வ.உ.சி இரண்டு கப்பல்களை விலைக்கு வாங்கி ஆங்கிலக் கப்பல்களுக்குப் போட்டியாக இயக்கினார்.

அப்போது தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்குச் செல்ல ஆங்கிலக் கப்பல்கள் வசூலித்த பயணக் கட்டணம் 16 அணா. (அதாவது ஒரு ரூபாய்) வ.உ.சி தனது கப்பல்களில் எட்டணா மட்டுமே வசூலித்தார். மக்கள் ஆர்வத்துடன் சுதேசிக் கப்பல் களில் பயணம் செய்யத் தொடங்கினார்கள்.

அப்போது தூத்துக்குடியில் உதவிக் கலெக்டராக இருந்தவன் ஆஷ். வ.உ.சியின் கப்பல் வணிகத்தை நசுக்குவது என்று முடிவெடுத்த ஆஷ் ஆங்கிலக் கப்பல்களை கட்டணமே, இல்லாமல் இலவசமாக இயக்க உத்தரவிட்டான். அது தவிர பயணம் செய்யும் பயணிகளுக்கு இலவசமாக ஒரு குடையும் கொடுத்தான். (ஆக, மக்களுக்கு இலவசம் தரும் கவர்ச்சித் திட்டத்தையும் நமக்குக் கற்றுக் கொடுத்தவன் ஆங்கிலேயனே) அத னால் சுதேசிக் கப்பல்கள் பயணிக்க ஆளின்றி முடங்கின. மிகப் பெரிய நஷ்டத்தைச் சந்தித்தார் வ.உ.சி. வேறு வழியே இல்லாமல் தனது இரண்டு கப்பல்களையும் ஏலத்தில் விட்டார். அவற்றை ஏலத்தில் எடுத்ததும் ஆங்கிலேய அரசே.

ஆஷ் திருநெல்வேலி மாவட்டத்தின் கலெக்டராக இருந்தபோது நிகழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட ஊர்வலத்தில் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டான். அதில் நான்கு பேர் இறந்தார்கள். அந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திய வ.உ.சியை ஆஷ் கைது செய்து அவருக்கு கோர்ட்டில் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை வாங்கிக் கொடுத்து சிறையில் செக்கிழுக்க வைத்தான்.

வ.உ.சியின் மீது அபரிமிதமான பக்தி கொண்ட வாஞ்சிநாதன் இந்த சம்பவங்களால் ஆஷ் மீது மாறாத கோபமும் கொலை வெறியும் கொண்டிருந்தார். குலுக்கலில் தன் பெயர் வந்ததும் மிகவும் மகிழ்ந்த வாஞ்சிநாதன் பாண்டிச்சேரி சென்று ஆயுதப் பயிற்சி எடுத்துக்கொண்டு திட்டமிட்டபடி செயல்பட்டார்.

சுதந்திரப் போராட்டத்தின் தமிழக தியாகியான வாஞ்சிநாதனின் பெய ரைத் தாங்கி வாஞ்சி மணியாச்சி சந்திப்பு என்று ரயில் நிலையத்தில் பெயர் பலகை மட்டுமே இருக்கிறது. தவிர வாஞ்சிநாதனுக்கு எங்கும் சிலைகள் கிடையாது. ஆனால் ஆஷின் இந்திய விசுவாசிகள் 32 பேர் பணம் போட்டு தூத்துக்குடியில் ஆஷுக்கு ஒரு மணி மண்டபமும், பாளையங்கோட்டையில் ஒரு சிலையும் வைத்தார்கள்.

2011-ம் வருடம் ஆஷ் சுடப்பட்டு நூறாண்டு ஆன சமயத்தில் ஆஷின் வாரிசுகள் வாஞ்சிநாதனின் குடும்பத் தாருக்கு ‘நடந்ததை மறந்து சமாதான மாக இருப்போம்’ என்று கடிதம் எழுதி அனுப்பினார்கள். வாஞ்சிநாதனின் குடும்பத்தினர் அதற்கு ‘ஆஷின் வாரிசு கள் இந்தியா வந்தால் வரவேற்போம்’ என்று மனிதநேயத்துடன் பதில் சொன்னார்கள்.

- வழக்குகள் தொடரும்..

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: pkpchennai@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x