Published : 06 Jan 2017 07:56 AM
Last Updated : 06 Jan 2017 07:56 AM

என்னருமை தோழி..! - 6: உயிர்களை நேசிக்கும் கருணை உள்ளம்!

ங்கள் வீட்டுப் பூஜை அறையினுள் நுழைந்தவன் திகைத்தும், குழம்பி யும் போனேன். ராமன், கண்ணன், அம்பாள் போன்ற கடவுளர்களின் படங்களின் நடுவே, பாட்டனார்கள் ரங்கசாமி, நரசிம்மன், பாட்டி கோமளவல்லி, பெற்றோர் சந்தியா, ஜெயராமன் படங்களின் நடுவே மலர்மாலை, குங்குமப் பொட்டு துலங்க வைக்கப்பட்டிருந்தது, ஒரு போமரெனியன் நாயின் உருவப்படம்.

உங்கள் தாய் சந்தியாவுக்கு நாய்கள் மீது மிகுந்த பிரியம். அவர் மறைவுக்குப் பிறகு, அவர் வளர்த்த நாய்கள் மீது உங்களுக்கு பரிவு தோன்றியது. ஒரு சமயத்தில் பத்துக்கும் மேற்பட்ட நாய்களை நீங்கள் வளர்த்து வந்தீர்கள். இதெல்லாம் மனதில் தோன்றினாலும், அதற்காக....பூஜை அறையில்...? என்று தயக்கத்துடன் திரும்பிய என் பார்வையை புரிந்து கொண்டீர்கள்.

''நாயின் புகைப்படத்தினை பூஜை யறையில் மாட்டியிருக்கிறேனே என்று பார்க்கிறீர்களா..? நீங்கள் அன்று சொன்னீர்கள், இல்லையா..தெருநாய்கள் உணரும் சக்தியால் சுனாமியில் இருந்து மீண்டன என்று. அவைகளை காட்டிலும் என் ராணிக்கு உணர்தல் சக்தி அதிகம். என் உணர்வுகளை மதிக்க தெரிந்த ஒரு ஜீவன். நான் இல்லாத நேரங்களில் பெரும்பாலும் இந்த அறையிலேயே இருக்கும். ஆன்மீக பாடல்களை விருப்பத்துடன் கேட்கும். ராணி இறந்துபோனபோது எனக்கு சாப்பிடக்கூடத் தோன்றவில்லை. அவளுக்கு உரிய இடம் இதுதான் என்று பூஜை அறையில் வைத்திருக்கிறேன்.நாம் மறக்க கூடாத எவரையும் பூஜை அறையில் வைப்போம்தானே...’’ என்று நீங்கள் சொன்னபோது, சாஸ்திர, ஆகம நம்பிக்கைகளை எல்லாம் தாண்டி, வள்ளலார் வாக்குப்படி எல்லா உயிர்களையும் நேசிக்கும் உங்கள் கருணை உள்ளத்தை அறிந்து மகிழ்ந்தேன்.

பூஜை அறையை காட்டியபின், அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டீர்கள். சற்று தள்ளி இருந்த ஒரு சிறு மனைப் பலகையில் நான் அமர்ந்து கொண்டேன். ‘‘பூஜை அறையில்கூட நாற்காலியில்தான் அமர வேண்டி இருக்கிறது. என்னால் தரையில் உட்கார முடிவதில்லை..’’ என்று கூறியதுடன், ‘‘உடல்ரீதியான சின்னச் சின்ன பிரச்சினைகள் எனக்கும் உண்டு. சட்டமன்றத்தில் எனக்கு அடுத்த இருக்கையை காலியாக வைக்கிறேன். மேடைகளிலும், விழாக்களிலும் மற்றவர்கள் சற்று தள்ளியே அமரும்படி நாற்காலி போடச் சொல்வதுகூட ஒரு காரணமாகத்தான். வேலை பளு காரணமாக சரியான உணவுப் பழக்கங்களை பின்பற்ற முடியாததால், ஜீரண சக்தி குறைவு காரணமாக சில நேரங்களில் ஏப்பம் வரும். அது அடுத்தவர்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு. உங்களைப்போன்ற மீடியாக்காரர்கள் இதெல்லாம் தெரியாமல், விமர்சனம் செய்கிறீர்கள். சரி... உங்கள் திருப்திக்கு எதையாவது எழுதிக் கொள்ளுங்கள் என்று விட்டுவிடுகிறேன்’’ என்று நீங்கள் சொன்னபோது நெகிழ்ந்தேன்.

மேலும், ‘‘திருக்கடையூரில் எனக்கு என் தோழி மாலையிட்டதைக் கூட சில மீடியாக்கள் கொச்சைப்படுத்தி எழுதின. பொது விழாக்களில் பெண் விருந்தினருக்கு விழாத் தலைவரா மாலையிடுவார்? கூட்டத்தில் இருந்து யாரேனும் ஒரு பெண்ணை அழைத்துதானே மாலை போடச் சொல்கிறார்கள். கோவிலில் எனக்கு அர்ச்சகர் எப்படி மாலை அணிவிக்க முடியும்? இதெல்லாம் நான் கேட்டால் விமர்ச னங்களை தாங்கும் பக்குவம் இல்லை என்கிறார்கள்’’ என்று மனம் திறந்து மளமள வென்று பொரிந்து தள்ளினீர்கள்.

என்னருமை தோழி...!

அடுத்த கணமே, அதை எல்லாம் மறந்தவராக, இனிய குரலில், கடவுள் துதி ஒன்றை பாடினீர்கள். என்ன நினைத்து என்னை அன்று வரவழைத்தீர்கள்... எதற்காக என்னிடம் இதை எல்லாம் சொல்கிறீர்கள் என்று நான் பிரமித்தபடியே அமர்ந்திருந்தேன். உங்கள் டைனிங் ஹாலில் அமர்ந்து, சர்க்கரை சேர்க்காத காபி (‘உங்களுக்கும் ஷுகர் இருக்கா?’ என்று சிரித்தீர்கள்!) குடித்தபடி, உங்களை பற்றி அபூர்வமான சில தகவல்களைத் தயக்கமின்றி பகிர்ந்து கொண்டீர்கள்.

ந்த நேரத்தில்தான் நானும் தங்களை பற்றிய சரிதை ஒன்றை எழுதுவதற்கு அனுமதி கேட்டேன். நீங்கள் யோசித்துவிட்டு.. ‘‘அதற்கான நேரம் இன்னும் வரவில்லை... நேரம் வரும் போது நீங்கள்தான் எழுது வீர்கள்..’’ என்றீர்கள். அதை மனதில் கொண்டோ என்னவோ... அடுத்தடுத்த சந்திப்பு களின்போது நான் தங்களைப் பற்றிப் படித்தறிந்த... என் தந்தையார் மூலம் கேட்ட றிந்த தகவல்கள் குறித்து மேலும் விளக்கமான விவரங்களை தயங்காமல் வெளிப் படுத்தினீர்கள். சினிமா, அரசியல்,இலக்கியம், உங்கள் குடும்பம், நண்பர்கள், ஏமாற்றங் கள், வெற்றிகள், வைராக்கியங்கள், விரக்தி என்று பலவற்றையும் கூறினீர்கள்.

‘‘விமானத்தில் பறந்தால் ஜெயலலிதாவுக்கு ஆபத்து என்று உங்கள் பத்திரிக்கையில் போட்டு, உங்களுக்கு நீங்களே விளம்பரம் தேடியிருந்தால் இந்நேரம் உங்களிடம் நான் பேசிக் கொண்டிருந்திருக்க மாட்டேன். சந்திப்புகளின்போது என்னுடன் ஒரு படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் நீங்கள் கேட்டதில்லை. முதல் தடவை நீங்கள் இங்கே வந்த சமயம் சொன்ன வார்த்தைகளும் உங்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது’’ என்று நீங்கள் சொன்னீர்கள்.

நானும் அப்படி என்ன சொன்னேன் என்று நினைவுபடுத்திப் பார்த்தேன்... ஆங்கிலத்தில் நான் கூறிய வார்த்தைகள்... Madam, I am not a godman, I am not an astrologer, I am only a courier boy from the Almighty, If you feel you cannot digest my message, please do not shoot the messenger என்று சொன்னது நினைவுக்கு வந்தது. அதை அப்படியே மறுபடியும் சொன்னேன்.

‘‘ஆமாம்... உங்களை ஒரு ஜோசியர் என்று நீங்கள் கூறியிருந்தால், நான் அப்போதே உங்களை தவிர்த்திருப்பேன்..’’ என்று கூறி களங்கமில்லாமல் கலகலவென சிரித்தபடி, ‘‘எனக்கும் அதுபோன்ற உணர்தல் சக்தி இருந் திருக்க வேண்டும், நரசிம்மன். பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்து, சுயமாக எதையும் யோசித்து புரிந்துகொள்ளும் அளவுக்கு வளர்ந்த பிறகு... பிடிக்கிறதோ இல்லையோ... என் எதிர்காலத்துக்குத் தேவையானபடி நான் தயாராக வேண்டும் என்று உள்ளுணர்வு சொன்னது. நானும் அதற்காக தயாராகி விட்டேன். அப்போது நான் முதலில் தேடியது என்ன தெரியுமா? make a guess..’’ என்று கேட்டீர்கள்.

‘‘நூலகம்தானே...?’’ - என் பதிலை தலையசைத்து மறுத்தீர்கள்.

‘‘இல்லை! நீச்சல் பயிற்சிக்காக ஒரு நீச்சல் குளத்தைத் தேடினேன். காலை வேளை களில் ஜிம்கானாவும், மாலை வேளைகளில் மெரினாவும் என்று நீச்சல் குளத்தில் பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். என்னுடன் வரும் என் தாய் சந்தியா, அந்த நேரம் கடற்கரையில் வாக்கிங் செல்வார்...’’ என்றீர்கள்.

உங்கள் முதல் தமிழ் படமான ‘வெண்ணிற ஆடை’யில் நீங்கள் நடிக்கக் காரணமாக இருந்தது அந்த மெரினா நீச்சல் குளம்தான் என்று என் தந்தை சித்ராலயா கோபு சொல்லி இருந்த சம்பவம் நினைவுக்கு வந்தது... அது...!

- தொடர்வேன்...
தொடர்புக்கு: narasimhan.ta@thehindu.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x