Last Updated : 11 Feb, 2017 09:55 AM

 

Published : 11 Feb 2017 09:55 AM
Last Updated : 11 Feb 2017 09:55 AM

என்னருமை தோழி...!- 31: கிரகப்பிரவேசம்!

ஆபரேஷன் தியேட்டருக்குள் உங்கள் தாய் சந்தியாவுக்கு அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. இருபத்தி மூன்றே வயதை கடந்து கொண்டிருந்த உங்களுக்கு, ஒரு அறுவை சிகிச்சையை நேரில் காண்பதற்கு எவ்வளவு நெஞ்சுரம் இருந்திருக்க வேண்டும்! உங்களுக்கு தெரிந்த மந்திரங்களை ஜெபித்துக் கொண்டு, சந்தியாவை காப்பாற்றுவதற்காக, டாக்டர் ஜெகதீசன் தலைமையில் மருத்துவர்கள் போராடிக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்தீர்கள்.

அப்போது, இறைவனிடம் நீங்கள் வைத்த கோரிக்கை ஒன்றுதான். ‘பணம் வேண்டாம். புகழ் வேண்டாம். எதுவுமே வேண்டாம். எனது தாயை பத்திரமாக திருப்பித் தந்துவிடு. அவ ருடன் ஏதாவது ஒரு மூலையில் நிம்மதியாக வாழ்ந்து கொள்கிறேன்’ என்பது மட்டுமே உங்கள் பிரார்த்தனையாக இருந்தது.

ஆனால், பிற்காலத்தில் மிகப்பெரிய சோத னைக்கு ஆளாக நேரிடும். முதல் சோதனைக்கே துவண்டு விட்டால் எப்படி என்பதுபோல, உங்களைப் பக்குவப்படுத்துவதற்காக மிகப்பெரிய இழப்பை கொடுப்ப தாகவே இறைவனின் பதில் அமைந்திருந்தது.

டாக்டர்கள் தீவிர முயற்சி செய்தும் உங் கள் தாய் சந்தியாவின் உடல்நிலை மோச மடைந்து கொண்டே சென்றது. நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே தாயின் உடல்நிலை மெதுவாக அடங்கி வருவதை உணர்ந்தீர்கள். டாக்டர்கள் சற்றே பதற்றம் அடைந்து, உங்களை அப்பால் போகச் சொல்லியும், நீங்கள் பிடிவாதமாக தாயின் அருகிலேயே இருந்தீர்கள்.

இரண்டு முறை பந்தாக துள்ளிய அவரது உடல் அதன்பிறகு அடங்கிவிட்டது. நீங்கள் எது நடக்கக்கூடாது என்று பயந்தீர்களோ, அது நடந்து விட்டது. ‘சந்தியா காலம்’ முடிவடைந்து விட்டது. உங்கள் வாழ்வில் தற்காலிகமாக இருள் சூழ்ந்து விட்டது. ‘ஐ ஆம் ஸாரி...’ என்ற டாக்டரின் மூன்றே சொற்களின் மூலம் உங்களது எதிர்காலம் சூன்யமாகிவிட்டது என்பதை உணர்ந்து துக்கம் தொண்டையை அடைக்க நின்றீர்கள்.

உங்களது எதிர்கால நம்பிக்கைகள் தவிடு பொடியாகிவிட, இறந்த தாயின் முகத்தையே உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். ‘‘கிரகப்பிரவேசம் செய்து புதிய வீட்டில் உன்னை மகாராணியை போல வைத்துக் கொள்ள வேண் டும் என்று கூறிக்கொண்டிருந்தேனே. அதற் குள் உனக்கு என்னம்மா அவசரம்..?’’ என்று மனதுக்குள் கேட்டபடி சித்தப் பிரமை பிடித்தது போல அழக்கூட திராணியின்றி, சிலையாக நின்ற உங்களை எம்.ஜி.ஆர். தேற்றினார்.

உங்கள் நிலைமையை உணர்ந்து சந்தியாவின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை எம்.ஜி.ஆர். செய்தார். சந்தியாவுக்கு இறுதி மரியாதை செலுத்த தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகமே திரண்டு வந்தது. நீங்களோ சோகப் பதுமையாய் இடிந்து போய் அமர்ந்திருந்தீர்கள். இறுதிச் சடங்கின்போது, தாயின் வாய்க்கு அரிசி போடும்போது அணை உடைந்த வெள்ளமாக மவுனம் உடைத்து கதறினீர்கள்.

உங்கள் தாயின் சிதை எரியும்போது, அத னுடன் உங்களது கனவுகள், எதிர்பார்ப்புகள், அபிலாஷைகள், எதிர்காலத் திட்டங்கள் எல்லா மும் சேர்ந்து சிதையில் எரிவதாகவே உணர்ந்தீர்கள். நீங்கள் மிக நெருக்கத்தில் கண்ட முதல் மரணம், தங்கள் தாயுடையதுதான். தந்தை ஜெயராமன் இறந்தபோது உங்களுக்கு இரண்டு வயது. மரணத்தின் சோகத்தினை உணர முடியாத வயது.

என்னருமை தோழி...!

பொதுவாக குடும்பத்தின் தூணாக இருந்த ஒருவர் மரணம் அடைந்துவிட்டால் அந்த வீட்டில் ‘இனி என்ன?’ என்று கேட்கப்படுவது வழக்கம். ஆனால் உங்கள் தாயின் மறைவுக் குப் பிறகு, ‘இனி ஒன்றுமே இல்லை’ என்பது மட்டுமே உங்களது தீர்மானமாக இருந்தது. ‘‘அம்மாதான் என்னை திரைப்பட உலகில் சேர்த்துவிட்டார். அவரே மறைந்துவிட்ட பிறகு, இனி நடிக்கத் தேவையில்லை என்ற தீர்மானத்துக்கு வந்துவிட்டேன்’’ என்று பிறகு கூறினீர்கள்.

ஆனால், அம்மாவின் மேற்பார்வையில் ஆசைக் கனவுகளோடு மிக அழகாக உருவாக் கப்பட்டு, பலவித அலங்கார பொருட்களையும், திரைச் சீலைகள், தரை விரிப்புகள் உட்பட எல்லாமே தயாராக வாங்கி வைக்கப்பட்டு, கிரகப் பிரவேசம் செய்யப்படுவதற்காக நாளும் குறிக்கப்பட்ட, போயஸ் கார்டன் வீட்டை என்ன செய்வது?

அந்த வீட்டுக்கு மைசூரில் தாங்கள் வசித்த வீடான ‘ஜெயா விலாஸ்’ என்ற பெயரையே சூட்ட சந்தியாவால் ஏற்கெனவே முடிவு செய்யப்பட் டிருந்தது. உறவினர்களும், நண்பர்களும், உங் களுக்கு ஆறுதல் சொன்னார்கள். ‘‘கவலைப் படாதே. நாங்கள் இருக்கிறோம்’’ என்று. பின் னாளில் ‘நாங்கள் இருக்கிறோம்’ என்கிற சொற் களே உங்களுக்கு ‘அலர்ஜி’யாக போய்விட்டது என்றீர்கள். எதிர்பார்ப்புகள் தந்த ஏமாற்றத்தின் விளைவு அது!

‘‘எனக்கு யாரும் வேண்டாம். என்னை நானே பார்த்து கொள்கிறேன்’’ என்று நீங்கள் கூறவேண் டிய காலகட்டமும் பின்னர் வந்தது. ஆனால் அன்று... 23 வயது மட்டுமே நிரம்பி, உங்களது வங்கிக் கணக்குகளின் இருப்புத்தொகை எவ்வளவு உள்ளது என்பதுகூட தெரியாமல், வீட்டின் அன்றாட செலவுகளுக்கு எவ்வளவு தேவை என்பது தெரியாமல் திணறி நின்றீர்கள். ஆறுதல் கூறியவர்களை எல்லாம் ஆத்மார்த்த உறவினர்களாக ஏற்றுக் கொண்டீர்கள்.

முதல் கட்டமாக, போயஸ் தோட்டத்து இல்லத்தின் கிரகப்பிரவேசத்தை நடத்தி முடிக்கத் தீர்மானித்தீர்கள். உங்கள் தாய் சந்தியா என்ற வேதவல்லியின் நினைவாக, வீட்டுக்கு ‘வேதா நிலையம்’ என்று பெயர் சூட்டும் முடிவை எடுத்தது நீங்கள்தான்!

1972-ம் ஆண்டு மே 15-ம் நாள் மிக எளிமை யாகவும் சாஸ்திர முறைப்படியும்,போயஸ் கார் டன் வீட்டுக்கு கிரகப்பிரவேசம் நடந்தேறியது. நெருங்கிய உறவினர்கள், தாயின் நண்பர்கள், ஆகியோர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். விழா நடந்த அன்று மாலை, ஏழு மணிக்கு வீணை சிட்டிபாபுவின் இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கிரகப்பிரவேசம் அன்று காலை சாஸ்திர முறைப்படி பசுமாடு ஒன்றை வீட்டினுள் கொண்டு சென்றால், வீடு புனிதமடையும் என்று கூறிய மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த தங்களது குடும்ப புரோகிதர் ஒருவர், அதற்கான ஏற்பாட்டினையும் செய்திருந்தார். உறவினர்கள் அனைவரும் கைகளில் மங்கல பொருட்களை தட்டுகளில் ஏந்தியபடி, அந்த பசுமாட்டினை தொடர்ந்து வந்து அதன் இருபுறமும் நின்றார்கள்.

அப்போது நிகழ்ந்த ஒரு சம்பவம், தாயின் மரணத்தினால் தீராத சோகத்தில் ஆழ்ந்திருந்த உங்களை மெய்மறந்து சிரிக்க வைத்து விட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் தாமரை முகம் மலர்ந்தது. கலகலவென்று சிரித்துக்கொண்டே இருந்தீர்கள்.

‘என் அண்ணன்’ படத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா.

- தொடர்வேன்...
தொடர்புக்கு: narasimhan.ta@thehindu.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x