Published : 10 Feb 2017 10:02 AM
Last Updated : 10 Feb 2017 10:02 AM

என்னருமை தோழி...!- 30: கரையேற முடியாத காட்டாறு!

உங்கள் தாய் சந்தியா வைத்த கோரிக் கையை கேட்டதும் திகைத்து போய் அமர்ந்திருந்தீர்கள். அவருக்கு என்ன பதில் கூறுவது என்று உங்களுக்குத் தவிப்பு. உங்களது குடும்பத்தின் சிரமமான காலகட்டத் தின்போது, விருப்பம் இல்லாமல்தான், நீங்கள் திரைப்படத்துறையில் நுழைந்தீர்கள்!

இப்போது, தன் கரத்தினை உங்கள் முன் நீட்டி, ‘‘என் கரம் பற்றி கரையேறு மகளே..! உனக்கு மணவாழ்வு காத்திருக்கிறது’’ என்று உங்கள் தாய் கூற, நீங்களோ விரக்தியுடன் அவரைப் பார்த்தீர்கள். அப்படி கரையேற முடி யாது என்கிற உண்மையை உங்கள் தாயிடம் அப்போதே கூறி விட வேண்டும் என்று தோன்றி னாலும், அவர் உடல் நிலை பலவீனமாக இருக்கும் நிலையில் தாங்கி கொள்ள முடி யுமா என்கிற பதைபதைப்பும் உங்களுக்கு இருந்தது. ஆனாலும் அப்போதைய சூழ்நிலை யில், எதார்த்தத்தை அவருக்கு புரிய வைக்க வேண்டும் என்று முடிவு செய்தீர்கள்.

திரைப்படத்துறை என்பது ஒரு காட்டாறு. அதில் இறங்கிய பெண்களால் எளிதில் கரையேற முடியாது என்பதை, உங்கள் தாயிடம் நிதானமாக, மிக அழகாக உங்கள் நிலையை விளக்கினீர்கள். ‘‘திரைப்படத்துறை யில் எதிர் நீச்சல் போட்டு முன்னேறும் வேளையில், ஒருவித சுழலில் சிக்கிவிட் டேன். இனி திசைமாறி நீந்துவது கடினம். ஆற் றின் பாதையிலேயே பயணிக்க வேண்டியது தான்’’ என்று நீங்கள் கூறியபோதுதான், உங்கள் தாய் உங்களது நிலைமையை உணர்ந்தார்.

மேற்படிப்பைத் தொடர விரும்பிய உங் களை நடிப்புத் தொழிலில் தள்ளியது, தான் செய்த மிகப்பெரிய தவறு என்பதை உணர்ந்து, அன்று அதை நினைத்து குமுறி அழுதார். அவரை சமாதானப்படுத்தினீர்கள். பலமான சுழலில் சிக்கிக்கொண்ட உங் களால் கரையேற முடியாது என்பதை நீங்களே உணர்ந்துகொண்ட பிறகு, யாரால் உங்களை கரையேற்றியிருக்க முடியும்? ஆற்றின் போக்கிலேயே சென்று கரடு முரடான பாதைகளில் இடிபட்டு பயணிப்பதை தவிர்க்க முடியாது என்பதை நீங்கள் அப்போதே புரிந்துகொண்டு விட்டீர்கள்.

‘‘அந்தக் காட்டாற்றின் போக்கிலேயே போய் அரசியல் என்னும் அதல பாதாளத்தை நோக்கிச் செல்லும் நீர்வீழ்ச்சியில் விழுவேன் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. நதி என்பது ஓடிக்கொண்டே இருக்க வேண்டியது. காடு, மேடு, சமவெளி, என்று பாராமல் ஓடுவதுதான் அதன் இயல்பு. சிலருக்கு அது புனிதமானது. சிலருக்கு அது வெறும் இயற்கை சூழலின் ஒரு அங்கம். சிலர் அந்த ஆற்றிலேயே மூழ்கி பாவங்களைக் கரைத்து, தாங்கள் புனிதமாகி விடுகின்றனர். குடகு தேசத்தில் பொன்னியாக பிறந்து, தமிழ் நாட்டில் காவிரியாக ஓடும் ஆற்றை போலவே, எனது வாழ்க்கையும் குடகு தேசத்தில் பிறந்து இங்கே ஓடிக்கொண்டிருக்கிறது. இதுதான் என் தலைவிதி போலும்...’’

என்னருமை தோழி...!

மிகவும் சோகத்துடன் நீங்கள் இந்த வார்த்தைகளை கூறிய நாள் 2008-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி. இதனைக் கேட்ட போது, நான் கலங்கிப் போனேன். ‘‘என் தந்தை இருந்திருந்தால் சினிமாவில் நுழைந் திருக்கமாட்டேன். என் தாய் இருந்திருந்தால் அரசியலில் நுழைந்திருக்கமாட்டேன்...’’ என்று அடிக்கடி கூறி வந்த நீங்கள், அன்று ஒரு படி மேலேபோய், ‘‘இறைவன் இருந்திருந்தால் இந்த துன்பமிக்க உலகில் நான் பிறந்திருக்க மாட்டேன்...’’என்று விரக்தியுடன் கூறுமளவுக்கு 1971-ம் வருடத்தின் நிகழ்வுகள் உங்கள் வாழ்க்கையில் அரங்கேறின.

‘‘அண்ணன் ஜெயகுமாருக்கு திருமணம் செய்து வையுங்கள். புது வீடு கட்டி கிரகப் பிரவேசத்தை விமரிசையாக செய்வோம். அனைவரும் புது வீட்டில் சந்தோஷமாக வசிப் போம்...’’ என்று உறுதியுடன் நீங்கள் கூற, உங்கள் தாய் சந்தியா அன்று முழுவதும் அழுதுகொண்டே இருந்தார். கிரகப்பிரவேசத் துக்கு நாளும் குறித்தாகி விட்டது.

ஒரு

நாள் படப்பிடிப்பில் இருந்த உங் களுக்கு ஒரு அவசரத் தகவல். ‘உங்கள் தாய் சந்தியாவின் உடல் நிலை மோசமடைந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.ஜே. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்’ என்பதுதான் அந்த தகவல். நேராக மருத்துவமனைக்கு விரைந்தீர்கள்.

நடிகை சச்சுவும் உடன் வந்தார். மருத்துவமனைக்கு நீங்கள் சென்றபோது, சந்தியாவின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. டாக்டர் ஜெகதீசன் உங்களை அழைத்து, சந்தியாவுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், கருப்பையில் புற்று நோய் முற்றிய நிலையில் இருப்பதாக தெரிவிக்க, நீங்களும் ‘‘உடனே அறுவை சிகிச்சை செய்து என் தாயைக் காப்பாற்றுங்கள்’’ என்று கலங்கினீர்கள்.

அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டன. அப்போது டாக்டரிடம் நீங்கள் ஒரு கோரிக்கையை முன்வைக்க, அவர் அதிர்ந்து போனார். ‘‘அறுவை சிகிச்சை நடை பெறும்போது பக்கத்திலேயே நானும் உடன் இருப்பேன்’’ என்ற தங்களது கோரிக்கைதான் டாக்டர் ஜெகதீசனை அதிர வைத்தது. ‘‘ஸாரி மேடம்! இட் இஸ் அகைன்ஸ்ட் அவர் ரூல்ஸ்..’’ (Sorry Madam! It’s against our rules) என்று அவர் மறுக்க, நீங்கள் தொடர்ந்து வற்புறுத்தினீர்கள்.

‘‘டாக்டர்! எனக்கு எல்லாம் என் அம்மாதான். நான் உடன் இருப்பதைத்தான் அவர் விரும்புவார். அவருக்கு ஒரு மனோரீதியான பலத்தை என்னால்தான் தர முடியும். ப்ளீஸ்...என்னை ஆபரேஷன் தியேட்டருக்குள் அனுமதியுங்கள்...’’ என்று கண்களில் நீர்மல்க நீங்கள் மன்றாடினீர்கள் .

உடன் இருந்த நடிகை சச்சு உங்களை சமாதானப்படுத்தினார். ‘‘ஒண்ணும் ஆகாது அம்மு! அம்மா நல்லபடியா வந்துடுவாங்க. ஆபரேஷன் தியேட்டர் உள்ளே எல்லாம் போகக் கூடாது’’ என்று அவர் கூற, நீங்கள் பிடிவாதமாக இருந்தீர்கள்.

அந்தச் சமயத்தில் எம்.ஜி.ஆரும், சின்னப்பா தேவரும் கே.ஜே மருத்துவமனைக்கு வந்தார் கள். டாக்டர் ஜெகதீசனுக்கும், உங்களுக்கும் வாக்குவாதம் நடைபெறுவதைக் கண்டதும் எம்.ஜி.ஆர். ‘‘என்ன விஷயம்?’’ என்று கேட்டார். ‘‘அம்மாவுக்கு ஆபரேஷன் நடக்கும்போது, நான் உள்ளே இருக்க வேண்டும் என்று கேட்டால், டாக்டர் அனுமதி தர மறுக்கிறார்’’ என நீங்கள் கண்ணீருடன் கூறியதைக் கேட்ட எம்.ஜி.ஆர். உங்களைப் பார்த்து பரிதாபப் பட்டார்.

இருந்தாலும் நிலைமையை விளக்கி அவரும் உங்களை சமாதானம் செய்ய முயன்றார். ஆனால், நீங்கள் உங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தீர்கள். கடைசியில் டாக்டர் ஜெகதீசனிடம் எம்.ஜி.ஆர். ஒரு வேண்டுகோள் விடுத்தார். ‘‘டாக்டர்! அம்மு தைரியமான பெண்தான். தான் உள்ளே இருப்பதால், சந்தியாவுக்கு நல்லது நடக்கும் என்று அவர் நம்புகிறார். தயவுசெய்து, ஒரு ‘ஸ்பெஷல் கேஸ்’ என நினைத்து, அம்முவை ஆபரேஷன் தியேட்டருக்குள் அனுமதிக்க வேண்டும்...’’ என்று கேட்க, நீண்ட யோசனைக்கு பிறகு டாக்டர் ஜெகதீசனும் சம்மதித்தார்.

சந்தியாவை ஐ.சி.யூ. விலிருந்து ஆபரேஷன் தியேட்டருக்கு ஸ்ட்ரெச்சரில் தள்ளிச் செல்ல, பின்னால், அந்த அறைக்குள் செல்வோருக்கு உரிய உடைகளுடன் கண்கள் கலங்க, உங்கள் தாயை பின்தொடர்ந்து சென்றீர்கள். எம்.ஜி.ஆர், தேவர் மற்றும் நடிகை சச்சு ஆகியோர் ஆபரேஷன் தியேட்டர் வாயில்வரை வந்தனர்.

நீங்கள் உள்ளே சென்றதும், கதவுகள் மூடப்பட்டன.

- தொடர்வேன்...

தொடர்புக்கு: narasimhan.ta@thehindu.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x