Last Updated : 27 Jan, 2017 10:02 AM

 

Published : 27 Jan 2017 10:02 AM
Last Updated : 27 Jan 2017 10:02 AM

என்னருமை தோழி..! 20: எம்.ஜி.ஆருக்கு ஆலோசனை!

இயக்குநர் சங்கரை இடைமறித்த நீங்கள், ‘‘இந்த பாட்டு, ஒரு ‘கல்ட் சாங்’ மாதிரி புகழ் பெறப் போகிறது. இதுவரை, பாங்க்ரா பாணி பாடல்கள் தமிழ் படங்களில் வந்ததே இல்லை. இந்த பாடல் நிச்சயம் உங்களுக்கு நல்ல பெயரைத் தரும். மேலும், பாங்க்ரா பாணி ஆடைகள் உங்களுக்கு பொருத்தமாக நன்றாக இருக்கும். பயிற்சி எடுத்துக் கொண்டால் உங்களால் சிறப்பாக ஆடமுடியும்’’ என்று எம்.ஜி.ஆரிடம் நீங்கள் வலியுறுத்தினீர்கள்.

அந்த யோசனையை அவரும் புன்முறுவ லுடன் ஏற்றுக் கொண்டார். ‘ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் சுகம்.. சுகம்.. சுகம்..’ என்கிற பாடலுக்காக எம்.ஜி.ஆர் பாங்க்ரா நடனப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். அவ்வப் போது நீங்களும் வந்து, அவரது நடனத்தை பார்த்து தங்கள் கருத்தை கூறினீர்கள்.

ஒரு மாத கடுமையான பயிற்சிக்கு பிறகு எல்.விஜயலட்சுமியுடன் எம்.ஜி.ஆர். ஒத்திகை யும் பார்த்தார். தன்னுடன் போட்டி போட்டுக் கொண்டு எம்.ஜி.ஆர். ஆடுவதைக் கண்டதும் விஜயலட்சுமிக்கு ஒரே வியப்பு. படத்தில் அந்தப் பாடல் வந்தபோது ரசிகர்களிடையே ஒரே ஆரவாரம். ‘‘நம்ம வாத்தியார் பாங்க்ரா நட னத்தில் பட்டையை கிளப்பிட்டார்’’ என்று பூரித் தனர். பல வருடங்களுக்குப் பிறகு எங்கள் வீட் டுக்கு உணவருந்த வந்திருந்த நடிகை எல்.விஜய லட்சுமியும், எம்.ஜி.ஆர். அந்தப் பாடலுக்காக எடுத்துக் கொண்ட பயிற்சிகள் பற்றி சிலாகித்து பேசினார். அதன் பிறகு எத்தனையோ தமிழ் படங்களில் பாங்க்ரா நடனம் இடம்பெற்றாலும் ‘குடியிருந்த கோயில்’ படத்தில் எம்.ஜி.ஆரும் விஜயலட்சுமியும் ஆடிய நடனம் போல அமையவில்லை!

படம் மாபெரும் வெற்றியை அடைந்தது. ஆனால், 1968 வருடம் தமிழகத்தில் பெரும் போட்டி ஒன்று உருவானது. அதனால், சர்ச்சைகளும் எழுந்தன. ‘குடியிருந்த கோயில்’ பெரும் வெற்றியை பெற்று நூறு நாட்களை கடந்து ஓடியது. எம்.ஜி.ஆரின் இரட்டை வேட நடிப்பும், உங்களின் துடிப்பான பங்களிப்பும் இனிமையான பாடல்களும் படத்தை சூப்பர் ஹிட் ஆக்கின.

இந்நிலையில், சிவாஜி கணேசன்-பத்மினி நடித்த, ஏ.பி. நாகராஜன் தயாரித்து, இயக்கி வெளியிட்ட, ‘தில்லானா மோகனாம்பாள்’ படம் தமிழகத்தை கடந்து இந்திய அளவில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது. அந்த படத்தில் சிக்கல் சண்முகசுந்தரமாக சிவாஜி கணேசனும், தில்லானா மோகனாம்பாளாக பத்மினியும், தவில் வித்வான் முத்துராக்கு பாத் திரத்தில் பாலையாவும், ஜில் ஜில் ரமாமணியாக மனோரமாவும் வெளுத்துக் கட்டினார்கள்.

‘தில்லானா மோகனாம்பாள்’ படம் தமிழகத் தின் பொக்கிஷ கலைகளை, மிக அழகாக வெளியுலகிற்கு சித்தரித்துக் காட்டியது. ‘நலந்தானா?’ என்று பத்மினி பாடியபடியே கண்களால் வினவ... முகத்தின் தசைகள் துடிக்க, நாதஸ்வரம் வாசித்தபடியே கேள்விக்கு பதில் தந்த சிவாஜி கணேசனின் நடிப்பை கண்டு நெகிழ்ந்து போயினர் ரசிகர்கள். சவடால் வைத்தி பாத்திரத்தோடு நாகேஷ் ஒன்றியிருந்தார். தவில் வித்வானாக நடிக்க வேண்டும் என்பதற்காக பாலையா தவிலே கற்றுக் கொண்டார்!

‘தில்லானா மோகனாம்பாள்’ படத்துக்காக சிவாஜி கணேசனுக்குத்தான் 1968-ம் ஆண் டின் சிறந்த நடிகருக்கான தமிழக அரசு விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அந்த வருடத்திய தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது அறிவிப்பும் வெளியானது. சிறந்த நடிகையாக, ‘தில்லானா மோகனாம்பாள்’ பத்மினியும், சிறந்த துணை நடிகையாக ‘ஜில் ஜில் ரமாமணி’ மனோரமாவும், சிறந்த துணை நடிகராக தவில் வித்வான் ‘முத்துராக்கு’ பாலையாவும் அறிவிக்கப் பட்டனர்.

சிறந்த நடிகராக அறிவிக்கப்பட்டவர்... ‘குடியிருந்த கோவில்’ படத்தில் இரட்டை வேடம் ஏற்று நடித்த எம்.ஜி.ஆர்! இந்த அறிவிப்பு பரபரப்பினை ஏற்படுத்தியது. சிவாஜி கணேசன் காங்கிரஸுசுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த தால் அவருக்கு விருது வழங்கப்படவில்லை என்றெல்லாம் குற்றச்சாட்டு கிளம்பியது. தனக்கு சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருது கிடைக்கும் என்று எம்.ஜி.ஆரே எதிர் பார்க்கவில்லை. சிறந்த நடிகர் பட்டம் கிடைத் ததை எண்ணி பேரானந்தத்தில் எம்.ஜி.ஆர். திளைத்திருந்தார். ‘ஆடலுடன் பாடலை கேட்டு’ பாட்டுக்கு அவர் ஆடிய அமர்களமான நடனம் தான் விருதுக்கு முக்கிய காரணம் என்று பேசப்பட்டது. உடனே, அந்தப் பாட்டுக்கு ஆடுமாறு ஆலோசனை சொன்ன உங்களை அழைத்து நன்றி தெரிவித்தார் எம்.ஜி.ஆர்.!

இங்கே, பின்னாளில் நடந்த ஒரு சுவையான சம்பவம். தமிழகத்தின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் விளக்கும் ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் நடித்த சிவாஜி கணேசனுக்கு அந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது கிடைக்கவில்லை. எம்.ஜி.ஆருக்குதான் விருது கிடைத்தது.

இது நடந்து 9 ஆண்டுகளுக்கு பின் மாறிவிட்ட காலச்சூழலில் எம்.ஜி.ஆர். தமிழகத்தின் முதல்வராக ஆகிவிட்டார். அவர் முதல்வராக இருந்த நேரத்தில் ஒருமுறை ரஷ்யாவில் இருந்து கலாசாரக் குழுவினர் தமிழகம் வந்தனர். அவர்களுக்கு தமிழ் திரைப்படத்தைக் காட்ட முடிவு செய்யப்பட்டது. முதல்வர் எம்.ஜி.ஆரை திருப்திப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் நினைத்தார்களோ என்னவோ?...

எம்.ஜி.ஆர். நடித்த ‘நாடோடி மன்னன்,’ ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘குடியிருந்த கோயில்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ போன்ற படங்களை ரஷ்யக் குழுவினருக்கு காட்டலாம் என்று அவரிடமே யோசனை தெரிவித்தனர். அதை சிரித்தபடியே மறுத்த எம்.ஜி.ஆர்., தமிழகத்தின் கலை மரபை விளக்கும் ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தை அவர்களுக்கு திரையிட்டு காட்டுமாறு பெருந்தன்மையுடன் கூறினார். அதிகாரிகள் வியப்பில் ஆழ்ந்தனர்!

மறுபடியும் 1968-க்கு திரும்புவோம். எம்.ஜி.ஆர். மற்றும் நீங்கள் இணைந்து நடித்தாலே படம் வெற்றிதான் என்கிற பேச்சையும் ஏற்படுத்தியது ‘குடியிருந்த கோயில்’! ஆனால், நீங்களும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ‘காதல் வாகனம்’ மற்றும் ‘தேர்திருவிழா’ படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சிவாஜி கணேச னுடன் நீங்கள் நடித்த ‘எங்க ஊர் ராஜா’ படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

அந்தச் சமயத்தில்தான்… குடியிருந்த கோயில் படத்தின் பெரும் வெற்றி தந்த மகிழ்ச்சியில் இருந்த எம்.ஜி.ஆர், தங்களின் அனைத்து திறமைகளையும் வெளிக்கொண்டு வரும் விதத்தில் ஒரு பிரம்மாண்ட படத்தை அறிவித்தார்….!

- தொடர்வேன்... | தொடர்புக்கு: narasimhan.ta@thehindu.co.in

படம் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x