Last Updated : 25 Jan, 2017 10:02 AM

 

Published : 25 Jan 2017 10:02 AM
Last Updated : 25 Jan 2017 10:02 AM

என்னருமை தோழி..!- 18: அன்றே கொடுத்த ஷீல்டு!

இயக்குனர் சாணக்யா தங்களிடம் ‘ஒளி விளக்கு’ படத்தின் கதையை சொன்ன போது, அந்தப் படத்தில் தங்களை விட நடிகை சௌகார் ஜானகிக்குத்தான் முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரம் என்பதை உணர்ந்தீர்கள். ஆனாலும், எம்.ஜி.ஆரின் 100-வது படம் என்பதற்காகவும் அவரது சொல்லுக்கு மதிப்பளித்தும் அமைதியாக இருந்துவிட்டீர்கள்.

உங்கள் தாய் சந்தியாவுக்கோ கவலை. எம்.ஜி.ஆரின் ‘ஒளிவிளக்கு’ மற்றும் சிவாஜி கணேசனின் ‘கலாட்டா கல்யாணம்’ படங்களின் கால்ஷீட் தேதிகள் மோதிக் கொண்டால் என்ன செய்வது? ‘கலாட்டா கல்யாணம்’ படத்தில் பெரிய நட்சத்திரக் கூட்டம் வேறு. சிவாஜி கணேசன், தங்கவேலு, நாகேஷ், சோ, ஏ.வி.எம். ராஜன், கோபாலகிருஷ்ணன், சுந்தரிபாய், மனோரமா, ஜோதிலட்சுமி, சச்சு மற்றும் நீங்கள் என்று எல்லாருடைய காம்பினேஷனும் தேவை. இந்தப் பக்கம் எம்.ஜி.ஆரின் படம். இடையே, ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் படங் கள். எப்படியோ சமாளித்து எல்லாப் படங் களிலும் நடித்துக் கொடுத்தீர்கள்!

‘கலாட்டா கல்யாணம்’ படத்திற்காக சிவாஜி கணேசனுடன் நீங்கள் நடிக்கும் முதல் காட்சி சாத்தனூர் அணையில் படமாக்கப்பட்டது. தனது வேண்டுகோளுக்கிணங்க, எம்.ஜி.ஆர். அணியிலிருந்து தன்னுடன் நடிக்க வந்த உங்களின் வருகையைக் கொண்டாடும் வகையில் பாட்டு அமைய வேண்டும் என்று கவிஞர் வாலியிடம் சிவாஜி கணேசன் கேட்டு கொண்டார். வாலியும்... ‘‘நல்ல இடம்... நீ வந்த இடம்...’’ என்று பாடல் எழுதித் தர, உங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு பட யூனிட்டால் வழங்கப்பட்டது.

படத்தில் நீங்கள் வரும் பெரும்பகுதி காட்சி களில் ஆங்கிலத்தில் பிளந்து கட்டுவீர்கள். நுனிநாக்கு ஆங்கிலத்தில் உங்கள் நண்பரும் நடிகருமான சோ-வை ‘‘ஸ்டுபிட், இடியட், மங்கீ, கூஸ், டாமிட்’’ என்று தீட்டுவீர்கள். பிறகு காட்சி படமாக்கப்பட்டதும், அவரிடம் சென்று ‘‘ஸாரி... நீங்க தப்பா எடுத்துக்கலியே...?’’ என்று வருத்தத்துடன் கேட்பீர்கள்.

எம்.ஜி.ஆர். படங்களில் பெரும்பாலும் கண்டாங்கி சேலை, ஜிப்சி உடைகளையே அணிந்த நீங்கள், ‘கலாட்டா கல்யாணம்’ படத்தில் நவநாகரீக உடைகளை அணியும் வாய்ப்பு கிடைத்தது. உடைகளை நீங்களே டிசைன் செய்தீர்கள். காட்சிகள் படமாக்கப் படும்போது, பல இடங்களில், ‘சித்ராலயா’ கோபுவின் நகைச்சுவை வெடிகளை தாளாமல் நட்சத்திரங்கள் சிரித்துவிட, அதனாலேயே பல காட்சிகள் ரீ-டேக் எடுக்கப்பட்டன.

இத்தனை நட்சத்திரங்களையும் அவர்களது திறமைகளை சரியாகப் பயன்படுத்தி வேலை வாங்கினார் இயக்குநர் சி.வி.ராஜேந்திரன். ‘எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்...’ பாடல் காட்சி, அந்த சமயம் உலகத் தமிழ் மாநாட்டுக்காக அமைக்கப்பட்ட பொருட்காட்சி வளாகத்தில் நடைபெற்றது. படம் சூப்பர் ஹிட் ஆனது. படம் வெளியான திரை அரங்குகள் சிரிப்பலைகளால் அதிர்ந்தன.

படம் நூறு நாட்களைக் கடந்து ஓட, படத்தின் வெற்றி விழாவை சென்னை நியூ உட்லேண்ட்ஸ் ஹோட்டலில் சிவாஜி கணேசன் கொண்டாடினார்.

என்னருமை தோழி...!

அப்போது எனக்கு ஏழு வயது இருக்கும். என் தந்தை கோபு வேறு ஏதோ பட வேலையாக சென்று விட்டதால், என் மூத்த சகோதரன்தான் அவருக்கான ஷீல்டை வாங்குவதாக இருந்தான். சிவாஜி கணேசன் குடும்பத்தினர் ஒருபுறம் அமர்ந்திருக்க, நீங்களும், உங்கள் தாய் சந்தியாவும் எனது தாயார் பக்கத்தில் உட்கார்ந்திருந்தீர்கள்.

படத்தின் தயாரிப்பு நிர்வாகி ஜம்பு (நடிகை இளவரசியின் தந்தை) உங்களை என் தாய்க்கு அறிமுகப்படுத்தினார். நீங்கள் பிஸ்தா நிறத்தில் மைசூர் சில்க் சேலை அணிந் திருந்தீர்கள். நீங்கள் பேசிக்கொண்டிருக்க, என் தாய் சிறுவனாக இருந்த என்னையும், என் சகோதரர்களையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

அதுதான், நான் உங்களை முதன் முதலாக சந்தித்தது. நீங்கள்தான் என் சகோதரனிடம் வெற்றி விழா ஷீல்டை அளித்தீர்கள். பின்பு மேடையை விட்டு இருக்கைக்கு நீங்கள் வந்தீர்கள். அப்போது, நான் என் தாயிடம் அழுது தகராறு செய்வதைப் பார்த்தீர்கள். ‘என்ன விஷயம்?’ என்று என் தாயிடம் கேட்டீர்கள்.

‘‘அண்ணனுக்கு மட்டும் ஷீல்டு கொடுத் தீர்கள்... எனக்கும் வேண்டும் என்று அழு கிறான்!’’ என்று என் தாய் சொன்னதும், ‘‘அவ் வளவுதானே...” என்று சிரித்துக் கொண்டே... உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த ஷீல்டை எடுத்து ‘‘இதை நீ வைத்துக் கொள்!’’ என்று என் கையில் கொடுத்தீர்கள். விழா முடியும்வரை நான் உங்கள் ஷீல்டை வைத்திருந்தேன். ஒருவேளை... உங்கள் வாழ்க்கைத் தொடரை இங்கே நான் எழுதப் போவதற்கு பாராட்டாக, 1968-ம் வருடத்திலேயே எனக்கு ஷீல்டு கொடுத்து விட்டீர்களோ என்று இப்போது தோன்றுகிறது தோழி!

இந்த விழாவைப் பற்றி, 2008 ஜனவரி யில் உங்களைச் சந்தித்தபோது நினைவு படுத்தினேன். தங்களது சேலை நிறத்தைக்கூட குறிப்பிட்டு நான் சொன்னதும், வியப்பில் ஆழ்ந்து போனீர்கள்! அந்த பிஸ்தா நிற மைசூர் சில்க் சேலை உங்களது தாயாருடையது என்றும் நெகிழ்வுடன் கூறினீர்கள். வழக்க மாக, விழாக்களுக்கு சல்வார் மட்டுமே அணிந்த நீங்கள், ‘கலாட்டா கல்யாணம்’ விழாவிற்குத்தான் முதன் முதலாக சேலை அணிந்ததாகவும் கூறினீர்கள்.

பிறகு... ஜூலை 27, 1968 அன்று சிவாஜிகணேசனின் மற்றொரு படம் வெளியானது. அந்த படத்தினைப் பார்த்த நீங்கள், சிவாஜியுடன் நடிப்பதே ஒரு பாக்கியம் என்று கூறினீர்கள். அந்த படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர்., ‘‘சிவாஜின்னா சிவாஜிதான்’’ என்று பாராட்டினார்!

- தொடர்வேன்... | தொடர்புக்கு: narasimhan.ta@thehindu.co.in

படம் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x