Published : 17 Jan 2017 04:15 PM
Last Updated : 17 Jan 2017 04:15 PM

என்னருமை தோழி..! 13: எம்.ஆர்.ராதாவை சமாளிக்க யோசனை!

படப்பிடிப்புக்கு குறித்த நேரத்தில் வரும் எம்.ஜி.ஆர். அன்று ‘தாய்க்குத் தலைமகன்’ படப்பிடிப்புக்கு வர தாமதம் ஆனது. படத்தின் கதாநாயகியான நீங்கள் ஒப்பனையை முடித்துக்கொண்டு, புத்தகம் படித்தவாறு காத்திருந்தீர்கள். அப்போது எம்.ஜி.ஆரின் கார் வர, அதிலிருந்து சற்று கோபத்துடன் இறங்கினார் அவர். ஏற்கனவே சிவந்த நிறம் கொண்ட அவர் முகம் கோபத்தில் இன்னும் செம்மையாக காட்சி தந்தது!

ஒன்றுமே பேசாமல் ஒப்பனை அறைக்கு சென்றவர் மிதமான ஒப்பனையுடன் உடனே வந்துவிட்டார். படப்பிடிப்பு இடைவேளையில் தங்கள் அருகில் வந்து அமர்ந்த எம்.ஜி.ஆர்., சற்று நேரம் அமைதி காத்தார். நீங்கள் தாமதத்திற்கு காரணம் கேட்கவில்லை. அவரிடம் போய் யார் காரணம் கேட்க முடியும்? ஆனால் அவராகவே தாமதத்துக்கான காரணத்தை உங்களிடம் சொன்னார்.

‘‘அம்மு... ‘பெற்றால்தான் பிள்ளையா’ படப்பிடிப்பில் சூழ்நிலை சரியில்லை. ராதா அண்ணனின் நடவடிக்கைகள் எரிச்சலைத் தருகின்றன. படப்பிடிப்புக்கு தாமதமாக வருகிறார். எல்லாவற்றுக்கும் இடக்கு மடக்காக பதில் தருகிறார். அவர் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. அவரால்தான் இன்று தாமதம் ஆகிவிட்டது’’ என்று உங்களிடம் கூறினார் எம்.ஜி.ஆர்.!

‘‘அதனால் என்ன, பரவாயில்லை...’’ என்ற நீங்கள் சிறிது நிறுத்தி, ‘‘அவரிடமே பேசிப் பார்ப்பதுதானே...’’ என்று கூறினீர்கள். பொதுவாகவே அப்போது பேசப்பட்ட ஒரு விஷயம்...

பெரியாரிடம் இருந்து பிரிந்து போன அண்ணாவின் தலைமையிலான தி.மு.க. மீது பெரியாருக்கும் அவர் சீடர்களுக்கும் வருத்தம் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 5, 1967, அன்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரியார் பகிரங்கமாக காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்தார். பெரியாரின் சீடரான எம். ஆர். ராதாவுக்கும் காமராஜ் மீது தனிப்பட்ட மரியாதை இருந்தது. தி.மு.க. வின் முக்கிய புள்ளியான

எம்.ஜி.ஆரை அதனாலேயே படப்பிடிப்பின் போது ராதா சீண்டிப் பார்த்தார் என்று அப்போது கூறப்பட்டது.

கேள்விப்பட்டதைச் சொல்லி, ‘‘இதுதான் பிரச்சினையாக இருக்குமோ..?’’ என்று நீங்கள் கேட்டபோது, எம்.ஜி.ஆர். அதை மறுத்தார். ‘‘ராதா அண்ணன் தொழிலுக்கு மரியாதை தருபவர். அரசியலை தனிப்பட்ட பிரச்சினையாக ஆக்கமாட்டார்’’ என்றார்.

என்னருமை தோழி...!

அன்று இரவு உங்கள் தாயுடன் நீங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, எம்.ஆர். ராதாவைப் பற்றிக் கேட்டீர்கள். ‘‘ராதா அண்ணன் எப்படிப்பட்டவர்?’’ என்று. உங்களின் தாய் மட்டுமின்றி, உங்களுக்கு மூத்த தலைமுறை நடிகையான சந்தியா, ‘‘மிகவும் திறமையுமானவர் அவர். ஆனால், மனதில் பட்டதை பேசிவிடும் குணம் உடையவர். ஒன்றைச் ‘செய்யாதே’ என்று யாராவது அவரிடம் கூறினால், அதைச் செய்துவிட்டுதான் மறு காரியம் பார்ப்பார். ‘செய்யாதே’ என்று சொன்னவரிடமே போய், ‘செய்து முடித்து விட்டேன்’ என்று கூறுவார்’’ என்று எம்.ஆர்.ராதாவின் அதிரடியான குணத்தைப் பற்றிக் கூறினார்.

மறுநாள் சின்னவரிடம், புதிய உத்தியைக் கையாளும்படி ஒரு யோசனை சொன்னீர்கள். ‘‘ராதா அண்ணன் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புவதை அவரிடம், ‘செய்யாதே’ என்று சொல்லிப் பாருங்களேன்’’ என்றீர்கள்! எம்.ஜி.ஆரும், ‘பெற்றால்தான் பிள்ளையா’ தயாரிப்பாளர் வாசுவிடம், ‘‘நாளை படப்பிடிப் புக்கு மதியத்திற்கு மேல்தான் வரமுடியும்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். ராதாவுடன் இணைந்து நடிக்க வேண்டிய காட்சிகள் இருந்ததால், ‘‘ராதாவையும் மதியத்திற்கு மேல் வரச்சொல்லுங்கள்’’ என்று சொல்லி வைத்தார்.

ஆனால் மறுநாள் காலையிலேயே படப்பிடிப்பு அரங்கில் எம்.ஜி.ஆர். ஆஜர்! அரங்கிற்கு சென்று ஒப்பனை செய்து கொள்ளத் துவங்கினார். திடீரென்று அங்கு வந்த ராதா, தயாரிப்பாளரான வாசுவிடம் தன்னால் அன்று மதியம் வர முடியாது என்றும், இப்போதே படப்பிடிப்பை வைத்து கொள்ள வேண்டும் என்றும் சொல்ல...

எம்.ஜி.ஆரும் மனதுக்குள் சிரித்தபடி, ‘‘நான் ரெடி’’ என்றபடி ஒப்பனை முடிந்து வெளியே வந்தார். ராதா, இதனை எதிர்பார்க்கவில்லை!

அன்று படப்பிடிப்பு நடைபெற்றாலும், இருவரிடையே இணக்கமில்லை. தயாரிப் பாளர் வாசு, எம்.ஜி.ஆரின் கால்ஷீட்டை சிரமப்பட்டு வாங்கியிருந்தார். எம்.ஆர். ராதாவிடம் கடன் வாங்கித்தான் படம் எடுத்தார். ராதாவையும் விட்டு கொடுக்க முடியவில்லை. இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்தார் வாசு.

ஒரு வாரம் ‘ஷூட்டிங்’ சரியாக நடந்தது. பின்பு மீண்டும் பிரச்சினை. ஸ்கிரிப்டில் இடம்

பெறாத வசனங்களைப் பேசுவதும், தனது உடல் மொழியால் சக நடிகர்களை நையாண்டி

செய்வதுமாக இருந்தாராம் எம்.ஆர்.ராதா!

இதனால் ‘மூட் அவுட்’ ஆன எம்.ஜி.ஆர். பலமுறை அதன் எதிரொலியாக ‘தாய்க்குத் தலைமகன்’ படப்பிடிப்பை ஒத்தி வைத்தார்.

இறுதியில் ஒருநாள் எம்.ஜி.ஆர், ‘‘ராதா வுடன் பிரச்னையை சுமுகமாகத் தீர்க்கலாம்’’ என்று வாசுவிடம் சொன்னார். படங்களில் ‘பிஸி’யாக நடித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில், சட்டப்பேரவைத் தேர்தலில் பரங்கிமலைத் தொகுதியில் (தொகுதி மறுசீரமைப்பில் இப்போது அந்தத் தொகுதி இல்லை) வேறு எம்.ஜி.ஆர். போட்டியிட்டார்!

ராதாவுக்கும் தனக்கும் பிரச்சினை என்பது தேர்தல் நேரத்தில் பத்திரிகைகளுக்குத் தெரிந்து,

அதனால் பரபரப்பு ஏற்பட வேண்டாம் என்றும், அவருடன் சமரசமாக போவதே நல்லது என்றும்

எம்.ஜி.ஆர். நினைத்தார் போலும். ஜனவரி 12. மாலை நான்கரை மணிக்கு

எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட் டத்து வீட்டுக்கு ராதாவுடன் வாசு சென்றார். அப்போதுதான், எம்.ஜி.ஆரை சுட்டுவிட்டு தானும் சுட்டு கொண்டார் ராதா. அவர் கையில் ஒரு துணிப்பையை உடன் கொண்டு வந்ததாக, வாசு பின்னர் சாட்சியம் கூறி யிருந்தார். அதில்தான் ரிவால்வரை ராதா வைத்திருந்தார் என்று கூறப்பட்டது.

எம்.ஜி.ஆர். பிழைத்துக் கொண்டாலும் ‘இனி அவரால் பேச முடியாது, நடிக்க முடியாது’ என்கிற தகவல்கள் காட்டுத் தீ போல கோடம்பாக்கத்தில் பரவியது. தேர்தல்

முடிவுகள் வந்தன. காங்கிரஸ் கட்சி படு

தோல்வி அடைய, அண்ணாவின் ஆட்சி

அமைந்தது. சுமார் 28,000 வாக்குகள் வித்தியாசத்தில் பரங்கிமலைத் தொகுதி

யில் எம்.ஜி.ஆர். ஜெயித்தார். எம்.எல்.ஏ. ஆகிவிட்டதால் அவர் சினிமாவுக்கு முழுக்கு போடப்போவதாகவும் தகவல் பரவியது.

என்னருமை தோழி...!

‘அரச கட்டளை’ மற்றும் ‘காவல்

காரன்’ படங்களில் அப்போது உங்களை

எம்.ஜி.ஆர். ஒப்பந்தம் செய்திருந்தார். அதுவரை எம்.ஜி.ஆர். படங்களில்தான் நீங்கள் அதிகம் நடித்துக் கொண்டிருந்

தீர்கள். ‘இனி அவர் நடிக்கப்போவதில்லை’ என்று வெளியான தகவல்களால், இந்த படங்கள் எடுக்கப்படும் என்கிற நம்பிக்கை உங்கள் தாய்க்கு இல்லை.

‘‘இனிமேல் சின்னவர் (எம்.ஜி.ஆர்.) நடிக்கப் போவதில்லை என்கிறார்கள். என் நண்பரான சிவாஜி கணேசன்கிட்டே நான் பேசறேன். நீ அவரோடு இனி நடிக்கலாம் அம்மு...’’ என்று உங்கள் தாய் சொல்ல, ‘‘சின்னவரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம். அம்மா’’ என்று நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.

இதுபற்றி எம்.ஜி.ஆர். என்ன நினைப்பாரோ என்கிற கவலையுடன்தான் நீங்களும், உங்கள் தாயும் அவரைச் சந்தித்தீர்கள். பரங்கிமலைத் தொகுதியில் வெற்றி பெற்ற

தற்காக எம்.ஜி.ஆருக்கு வாழ்த்து சொன்ன தும், ‘‘நீ சொன்னபடியே நடந்து விட்டது அம்மு’’ என்றார் எம்.ஜி.ஆர்.!

தொடர்ந்து, ‘‘அம்மு... சரோஜாதேவியின் அம்மா ருத்ரம்மா வந்து பெரிய குண்டை தூக்கி போட்டுட்டாங்க. என்ன செய்யறதுன்னு தெரியலை...’’ என்று எம்.ஜி.ஆர். சொல்ல, நீங்களும், உங்கள் தாய் சந்தியாவும் என்னவென்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டீர்கள்!

- தொடர்வேன்

தொடர்புக்கு: narasimhan.ta@thehindu.co.in

படம் உதவி: ஞானம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x