Published : 02 Jan 2017 08:53 AM
Last Updated : 02 Jan 2017 08:53 AM

என்னருமை தோழி..!- 2

உங்களது திரைப்பட வாழ்க்கை வெண்ணிற ஆடையில் துவங்கிய போதே, நமது நட்புக்கு கட்டியம் கூறப்பட்டு விட்டது போலும். நீங்கள் மிகவும் விரும்பி நடித்த நகைச்சுவை படங்களுக்கு வசனங்களை எழுதிய ‘சித்ராலயா’ கோபுவின் ஏழு வயது மகன் நரசிம்மனாக உங்களை முதலில் சந்தித்தேன்.

உங்கள் அரசியல் ஆசான் கொணர்ந்த சத்துணவுத் திட்டத்தை பற்றி ஆராய்ச்சி புத்தகம் எழுதுவதற்காக, அப்போது அத்திட்டத்தின் செயல்பாட்டுத் தலைவராக இருந்த உங்களை பேட்டி காண குருநானக் கல்லூரி மாணவனாக வந்து சந்திக்கையில் உங்கள் அறிமுகம் கிடைத்தது. அதன்பின் உமது அறுபதாவது பிறந்த நாளில் மீண்டும் நமது நட்பு துளிர்விட்டது. இறுதிவரையில் அந்த நட்பு தொடர்ந்தது அல்லவா!

எனது எழுத்துகளாலோ, பத்திரிகை தொழிலாலோ நான் திரைப்படக் குடும் பத்தை சேர்ந்தவன் என்பதாலோ, நீங்கள் எனக்கு இந்த அங்கீகாரத்தினை தரவில்லை. ஆன்மீகம் அல்லவோ நம்மை ஒன்று சேர்த் தது! தாங்கள் எந்த நட்பையும் தொடர்ந்தது கிடையாது, என்பதையும் நான் அறிவேன்.

தங்களிடம் உள்ள நெருக்கத்தை ஒரு எழுத்தாளர் சுய விளம்பரம் செய்து, ‘நான் ஜெயலலிதாவின் மனசாட்சி’ என்று கூறிய தால், அந்த நட்பையே முறித்து கொண்டதை நான் அறிவேன்!

ஆனால், என்னிடம் கொண்ட நட்பை மட்டும் கடைசிவரை நீடிக்க செய்தீர்கள். அது நான் செய்த பெரும் பாக்கியம்தான்!

என்னை தங்களின் நிழல் நண்பன் என்று தாங்கள் பெருமையுடன் கூறியது என் செவிகளில் இன்னும் ரீங்கரிக்கின்றது. ‘நரசிம்மன்’ என்ற என் பெயர் தங்களது குலக்கடவுளை நினைக்கச் செய்வதுபோல் உள்ளது என்று புன்னகையுடன் கூறுவீர்களே!

ஆணின் விலா எலும்பை உடைத்து முதல் பெண்ணை உருவாக்கினான் இறைவன் என்பது ஒரு நம்பிக்கை. ஆனால் நாங்கள் கண்கூடாக கண்டது, தன்னை எதிர்த்த அத்தனை ஆண்களின் விலா எலும்பு களையும் உடைத்து நொறுக்கி, அவற்றை நூலில் கோர்த்து, பட்டாபிஷேக மாலையாக அணிந்து, தமிழக சிம்மாசனத்தில் இறுதிவரை கோலோச்சியது உமது கம்பீரத் தலைமை அல்லவா..!

தங்களது விலா எலும்புகளை காத்து கொள்வதற்காகவே உங்கள் முன்பாகப் பல ஆண்கள் குனிந்து கும்பிடு போட்டு நின்றனர். உங்களுக்கெதிராக வேட்டிகள் மட்டுமா வரிந்து கட்டின..? வடநாட்டு பைஜாமா குர்தாக்களும், ஆடம்பர கோட் சூட்களும், கூலிப்படை லுங்கிகளும் கூடத்தான் அணி திரண்டன.

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

டெல்லி மேல் சபையில் நீங்கள் ஆற்றிய உரைகளை திரட்டி புத்தகமாக செய்து அதனை மேற்பார்வையிடும் பணியினை எனக்கு தந்தீர்களே. அந்த பணி நிறை வடைந்து, நீங்கள் அதற்குரிய சன்மானத்தை எனக்கு தர முற்பட்டபோது, உம்மை பற்றி ஒரு புத்தகம் எழுத அனுமதி தந்தால் அதுவே எனக்கு பெரும் சன்மானம் என்று நான் கேட்டேன். அப்போது நீங்கள் சிரித்தபடியே வாக்கு தந்தீர்கள் - ‘உரிய நேரம் வரும்... அப்போது வாய்ப்பு உனக்குத்தான்’ என்றீர்களே. அந்த உரிமையை இப்போது, இப்படி எடுத்து கொள்ளும் நிலை வரும் என்று கனவிலும் நான் நினைத்ததில்லை.

ஒரு நாள் நான் தங்களை பற்றி எழுத வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் என் னுடன் அடிக்கடி சந்திப்பினை ஏற்படுத்திக் கொண்டீர்களோ என்று இப்போது யோசிக்கிறேன்.

சரி... அதில் எந்த சந்திப்பில் இருந்து துவக்குவது? தமிழகத்தையும் அதன் மக்களையும் நீங்கள் பரிதவிக்க வைத்த அந்த 75 நாட்களில் இருந்தே துவங்குகிறேன்.

உங்களது போராட்ட குணமும் சிங்க முகத்தானின் கருணையும் உங்களை மீண்டும் எங்களிடம் சேர்த்து விடும் என்று உறுதியுடன் நம்பினேன். உடல்நலம் குன்றி அப்போலோவில் அனுமதிக்கப்பட்டீர்கள் என்ற செய்தி வந்ததும், சாதாரண காய்ச்சல் தானே என கவலையை விட்டொழித்தேன். ஆனால் நவராத்திரி கொலு துவங்கும் நாள் சிவராத்திரியாக மாறியது எனக்கு.

தாங்கள் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வந்ததும் பதைபதைத்து போய் காந்தி ஜெயந்தியன்று அப்பல்லோ மருத்துவ மனைக்கு ஓடி வந்தேன். உங்களது நெருங்கிய நண்பன் என்று நீங்கள் அளித் திருந்த உரிமை அங்கே எனக்கு வழிவிட்டது. மற்றவர்களைப்பற்றி நான் அறியேன்! எனக்கு எவ்வித தடைகளும் இல்லை.

கலங்கிய கண்களுடன் இருந்த உங்கள் தோழி சசிகலா அவர்கள் என்னை வரவேற்று நிலைமையை விவரித்தார். கிருமி ஒன்று உமது சுவாசப்பையில் ஆட்டம் போட்டு, அங்கங்களை செயலிழக்க வைக்க முயல் வதாக கண்களில் நீருடன் சொன்னார். ‘‘அக்காவின் ஆன்மீக நண்பர் நீங்கள்... உங்கள் பிரார்த்தனையின் மீது எப்போதுமே அவருக்கு நம்பிக்கை உண்டு. சீரிய சிங்கம் என்று அவர் வழிபடும் நரசிம்மரிடம், என் அக்காவை மீட்டுத் தரும்படி பிரார்த்தனை செய்யுங்கள்’’ என்றார்.

மகாராணியாக ஒய்யார நடை நடக்கும் தாங்கள் கிழிந்த நாராக கிடக்கிறீர்கள் என்பதை அறிந்தபோது துயரத்தில் கண்கள் குளமாயின. தாங்கள் குணமாகி வீடு திரும்புவது திண்ணம் என்று நான்கூற, சசிகலா அவர்கள் நம்பிக்கையுடன் கேட்டுக் கொண்டார். அதன் பிறகு அவ்வப்போது அப்பல்லோ வந்து நீங்கள் பக்தியுடன் உச்சரிக்கும் நரசிம்ம துதியை கூறி வந்தேன். அக்டோபர் 15 பூரண நிலவன்று உமக்காக ஆலயங்களில் தீபங்கள் ஏற்றப்பட்டன. உங்களுக்காக எனது வேண்டுதலும் தொடர்ந்தது.

நவம்பர் நான்கு, வெள்ளிக்கிழமை அலுவலக பணியில் இருந்தேன். இரவு மணி எட்டு நல்ல செய்தியை நல்கினார், உமது உதவியாளர் பூங்குன்றன். ‘அம்மா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்’ என்றார். அம்மா உணவகங்கள் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு உணவளித்த நீங்கள் சிறிது சிறிதாக தயிர் அன்னத்தை சிரமத்துடன் உட்கொண்டதாக அறிந்தபோது எனக்கு பெரும் நம்பிக்கை ஏற்பட்டது.

மருத்துவமனை வந்து சசிகலா அவர் களிடம் எனது மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். உங்கள் சிகிச்சை தொடரவிருந்த இரண்டாம் மாடியறை எண் 2035-ல் மருத்துவ ஏற்பாடுகள் நடைபெறுவதையும் கண்டேன். எனதருமை தோழி மீண்டு விட்டார் என்கிற மனநிறை வுடன் இல்லம் திரும்பினேன். அதன்பிறகு, மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த தாங்கள், நவம்பர் 12 சனியன்று தனியறைக்கு மாறியதாக பூங்குன்றன் வாயிலாகத் தெரிந்து கொண்டேன். நீங்கள் போயஸ் தோட்டத்திற்கு திரும்பும் நாளுக்காக காத்திருந்தேன்.

என்னருமை தோழி..!

அந்த

நம்பிக்கை எல்லாம் பொய்த்துப் போய், அந்தக் கொடுஞ்செய்தி வந்தபோது, இனி உங்களை நேரில் பார்த்துப் பேச வழியில்லை என்று உணர்ந்தபோது... என் நினைவில் வந்தது உங்கள் அறுபதாம் பிறந்த நாளையொட்டி நான் உங்களுக்கு விடுத்த முன்னெச்சரிக்கையும் அதைத்தொடர்ந்து நடந்த அதிர்ச்சிகரமான நிகழ்வுகளும்தான்.

அதிலும் மரணம் குறித்து நீங்கள் தெரிவித்த அந்தக் கருத்து...!

- தொடர்வேன்...

தொடர்புக்கு: narasimhan.ta@thehindu.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x