Last Updated : 10 Oct, 2013 08:11 PM

 

Published : 10 Oct 2013 08:11 PM
Last Updated : 10 Oct 2013 08:11 PM

இந்திய சினிமா 100 - மறக்கப்பட்ட ஆளுமை பால்ராஜ் சஹானி

இந்திய சினிமா தனது நூற்றாண்டை கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்த சினிமாவின் அச்சாணியாக இருந்தவர்கள், இந்திய சினிமாவின் மீது உலகின் பார்வையைக் பதிய வைத்த ஆளுமைகள் என பலரையும் இந்த சினிமா உலகம் மறந்துவிட்டது.

இந்திய சினிமா நூற்றாண்டை கொண்டாடும் இந்த வேளையில், இந்திய சினிமாவின் மாபெரும் நடிகர் ஒருவரின் நூற்றாண்டும் சேர்ந்தே வந்திருக்கிறது. அவர்தான் பால்ராஜ் சஹானி (Balraj Sahni: 1913 – 2013).

மறைக்கப்படுவதும், மறுக்கப்படுவதும் சினிமாவின் அடிப்படை அரசியல் என்றாலும், வரலாறு எப்போதும் தடம் பாதித்தவர்களை தன்னில் இருந்து துண்டித்துக் கொள்வதே இல்லை.

உலக அளவில், அதுவும் சினிமாவின் தாயகமாக இருக்கும் பிரான்சின் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற ஒருவர், வாழும்வரை தன்னுடைய கொள்கையில் இருந்து சிறிதும் பிறழாத, இந்திய சினிமாவின் சமூக அக்கறையை விதைத்த ஒரு மாபெரும் நடிகன்தான், பால்ராஜ் சஹானி.

1913 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த இந்தியாவின் ராவல்பிண்டியில் பிறந்த சஹானி, ஆங்கிலத்தில் பட்டப் படிப்பை முடித்துவிட்டு, காந்தியின் ஆலோசனையின் பேரில் பி.பி.சி. நிறுவனத்தில் வானொலி அறிவிப்பாளராக பணியாற்றி வந்தார். இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் இந்தியா வந்தார். இயல்பாகவே நடிப்பின் மீது ஆர்வத்தோடு இருந்த பால்ராஜ், இப்டா (IFTA - Indian People's Theatre Association) என்கிற அமைப்பை தொடங்கி, நாடகங்கள் நிகழ்த்தி தன்னுடைய நடிப்பு தாகத்தை தணிய வைத்துக் கொண்டார்.

1946இல் வெளியான இன்சாப் என்கிற இந்திப் படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பட பிரவேசத்தை தொடங்கினார். இடதுசாரியாக இருந்தவர், சினிமாவை எப்படி சமூக மாற்றத்திற்காக, நிகழ்கால சமூக பிரச்சினைகளை பதிவு செய்யும் ஊடகமாக மாற்றுவது என்கிற சிந்தனையோடு எப்போதும் இயங்கிக் கொண்டிருந்தார். எப்போதும், நம்முடைய சிந்தனைகளின் அதிர்வுகள், அண்டவெளி எங்கும் சுற்றிக் கொண்டே இருக்கும். நமது ஒத்த சிந்தனை கொண்ட அதிர்வுகளை இந்த அண்டவெளியில் சந்திப்பது அத்தனை பெரிய கஷ்டமான காரியமல்ல. பால்ராஜ் அப்படியான ஒருவரை சந்தித்தார்.

வங்க மொழியில் படங்கள் இயக்கிக் கொண்டிருந்த இந்தியாவின் மிக முக்கியமான திரைப்பட ஆளுமைகளில் ஒருவரான பிமல் ராயின் 'டூ பிக்ஹா ஜாமீன் (1953)' என்கிற இந்திப் படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தியாவில் ஜமீன்தார் என்கிற நிலசுவான்தாரர்களின் அயோக்கியத்தனத்தையும், எளியவர்களை சுரண்டி பிழைப்பு நடத்தும் பணக்கார வர்க்கத்தின் திமிரையும் வெளிச்சம் போட்டுக் காட்டிய படமான இதில் பால்ராஜ், சாம்பு என்கிற கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்திருந்தார்.

இந்திய சமூகத்தை, இந்தியாவில் எளிய மக்களின் உண்மையான வாழ்க்கை தரத்தை, சினிமா மொழியோடு, அழகியலோடு, நேர்மையாக பதிவு செய்த இந்த படத்தின் கதை மிக எளிமையானது.

உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தின் குறைந்த அளவே (ஒரு ஏக்கருக்கும் குறைவான) நிலம் வைத்திருக்கும் ஒரு விவசாயியின் நிலம், எப்படி ஜமீன்தார்கள் எனும் நில அரக்கர்களிடம் சிக்கிக் கொள்கிறது என்பதையும், படிப்பறிவு இல்லாத எளிய மனிதன் எப்படி இந்த சமூகத்தால் புறக்கணிக்கப்படுகிறான் என்பதையும் இந்த படம் பதிவு செய்கிறது.

தன்னுடைய வாழ்வாதாரமான நிலத்தை மீட்க, நிறைய போராட்டங்களுக்குப் பிறகு, தன்னுடைய மகனோடு கல்கத்தா வந்து, ஒரு கூலித் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி, பணம் சம்பாதித்து, அதை சேமித்து வைப்பதில் அக்கறை காட்டுவதாகட்டும், ஒரு நிலையில், இப்படி சம்பாதித்து சேமித்து வைக்கும் தினசரி வாழ்வின் மீது வெறுப்பு ஏற்பட்டு, சைக்கிள் ரிக்சாவில் ஒருவனை வேகமாக பின்தொடரும் வேலையை செய்யும் காட்சியாகட்டும், பால்ராஜ் தொட்ட நடிப்பின் உச்சத்தை இதுவரை வேறெந்த இந்திய நடிகனும் தொட்டதில்லை என்றே சொல்வேன்.

இதற்கு முன்னதாக வரும் காட்சியில், தந்தையின் பணத் தேவையை ஈடுகட்ட, மகன் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு பணம் கொண்டு வருவான். ஒரு தகப்பனாக மகனின் இந்த மனநிலையை எதிர்த்து, நேர்மையை அவனுக்குள் விதைக்கும் விதமாக அவனோடு சாம்பு என்கிற கதாபாத்திரம் உரையாடுவதும், இயலாமையால் அவனை உதைப்பதும், ஒரு தகப்பனாக தன்னுடைய பொறுப்புணர்வை எப்படி வெளிப்படுத்துவது என்கிற தவிப்பில், பால்ராஜ் நடிப்பின் உச்சத்தை தொடும் இடம் அது. பால்ராஜ் எனும் நடிகன், இந்த அற்புத படைப்பை கலையாக மாற செய்த இடம் அது. படம் முழுக்க, ஷூவுக்கு பாலிஷ் போடுபவர், சைக்கிள் ரிக்சா தொழிலாளர்கள் என எளிய மனிதர்கள், எப்படி இன்னமும் தங்களின் வாழ்க்கையை உன்னதமாக, யாருக்கும் கேடு நினைக்காமல் கட்டமைத்துக் கொள்கிறார்கள் என்பதை இந்தப் படம் முழுக்க பல்வேறு கதாபாத்திரங்கள் வழியே இயக்குனர் பதிவு செய்திருப்பார்.

சாம்பு எனும் கதாபாத்திரத்தின் நிலைதான், அன்றைய பல லட்ச இந்தியர்களின் நிலையாக இருந்தது. இந்த நாட்டில், இயற்கை வளத்திற்கோ, பொருளாதாரத்திற்கோ பஞ்சமில்லை. ஆனால் எல்லாமும் ஏதோ ஒரு இடத்தில் தேங்கி நிற்கிறது. அந்த தேக்கத்தை, தனி மனித வாழ்வின் தேவைகளை, இந்த மாதிரியான படைப்புகள்தான் சரிசெய்ய விழைகிறது.

சினிமாவை வெறும் பிம்பங்கள் அசையும் ஒரு நிழற்கூடமாக பார்த்தால் போதும். அதில் இருந்து நாம் பெறுவதற்கும், இழப்பதற்கும் ஒன்றுமில்லை என்பதுதான் நிதர்சனம். ஆனால் மனித மனதின் ஆழ்மனதிற்குள், பிம்பங்கள் அசையும்போது ஏற்படும் மாற்றம், அது மூளைக்குள் செய்யும் ரசாயன மாற்றங்கள் எல்லாம், ஒரு நிலையில் மனித கட்டுப்பாட்டிற்குள் இருந்து விலகிவிடுகிறது. அது அசுரத்தனமான விளைவுகளைக் கோரி நம்முன்னே நிற்கும்போது நாம் அதனை சமூக அக்கறை சார்ந்து, நிகழ்கால பிரச்சினைகள் சார்ந்த விளைவுகளை எற்படுத்த எத்தனிப்பதே அறிவுடைமை சமூகத்தின் வெற்றியாக இருக்க முடியும். அந்தமாதிரியான விளைவுகளை ஏற்படுத்த பால்ராஜ் போன்ற கலைஞர்களால் மட்டுமே முடியும். பால்ராஜ் அதனை நிகழ்த்தியும் காட்டியிருக்கிறார்.

பால்ராஜ் எனும் நடிகனின் இன்னுமொரு ஆக சிறந்த படம் எம்.எஸ்.சத்யூ இயக்கிய 'கரம் ஹவா' (1973). இந்தியாவில் இலக்கியத்தில் இருந்து சினிமாவை உருவாக்கும் முயற்சிகளில் முன்னோடி முயற்சி இந்த திரைப்படம். கைஃபி அஜ்மியின், 'இஸ்மாத் சக்டாய்' என்கிற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் பால்ராஜ் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

ஆக்ரா நகரில் மிகப் பெரிய, பாரம்பரியத்தன்மையுடன் கூடிய ஒரு வீட்டில் வசிக்கும் இஸ்லாமியக் குடும்பம் எப்படி இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு பிரச்சினைக்குள்ளாகிறது என்பதை அத்தனை இயல்பாக சொல்லியிருக்கும் இந்த படத்தில், பால்ராஜ் குடும்பப் பொறுப்பை சுமக்கும் மூத்த சகோதரன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பிரிவினையின் போது 'நாம் பாகிஸ்தான் சென்றுவிடலாம், இந்தியா முஸ்லிம்கள் வாழ நல்ல இடமல்ல' என்று சொல்லும் தன்னுடைய தம்பியிடம் எதிர் வாதம் செய்து, இந்தியாவிலேயே தங்கிவிடப் போகிறேன் என்கிற முடிவை அறிவிப்பார் சலீம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பால்ராஜ். அதன்பிறகு குடும்பம், பிளவுபட்ட இந்தியா, அரசு என்கிற பல்வேறு பரிமாணங்கள் எப்படி ஒரு குடும்ப வாழ்வை சிதைக்கிறது என்பதை படம் அப்பட்டமாக பதிவு செய்கிறது.

இந்த மாதிரி சென்சிடிவான பிரச்சினைகளை மையமாகக் கொண்டு வெளிவரும் எல்லாப் படங்களும், அரசின் கோரப்பார்வையை மீறி வெளிவந்தாலும், சில மண்ணின் மைந்தர்களின் பார்வையில் இருந்து தப்ப முடியாது. இந்தப் படத்தை தனக்கு தனியாக திரையிட்டு காட்டாமல் வெளியிடக்கூடாது என்று சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே நிர்பந்தித்தபோது, அதை புறக்கணித்தார் படத்தின் இயக்குனர், எம்.எஸ்.சத்யூ. ஆனால் சிவசேனையின் மிரட்டலுக்கு பணிந்து திரையரங்கின் உரிமையாளர் அவருக்கு திரையிட்டுக் காட்ட முற்பட்டபோது, இயக்குனரும் என்னோடு திரையரங்கில் இருக்க வேண்டும் என்று பால்தாக்கரே சொன்னார். முடியாது என்று மறுத்து கடைசிவரை இயக்குனர் பால்தாக்கரேவுடன் படம் பார்க்க செல்லவில்லை.

பால்ராஜ் சஹானியின் வாழ்க்கை சினிமா / பொருளாதார வெற்றி என்பதை தாண்டி, நிறைய பிரச்சினைகளுக்கு மத்தியில் அவரை பயணிக்க வைத்தது. பால்ராஜ் தன்னுடன் ஜோடியாக நடித்த தமயந்தியை திருமண செய்து கொண்டார். ஆனால் தமயந்தி இளம் வயதில் இறந்துவிடவே, எழுத்தாளரான சந்தோஷ் சந்தக்கை மணந்துக் கொண்டார்.

ஆரம்ப காலக் கட்டங்களில் ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்தவர் பஞ்சாபிற்கு சென்றதும், பஞ்சாப் இலக்கியத்திற்கு தன்னுடய பங்களிப்பை நல்கினார். தொடர் பயணத்தை விரும்பும் பால்ராஜ், நிறைய பயண இலக்கியங்களை எழுதியுள்ளார். குறிப்பாக பாகிஸ்தான் பயணம் சென்று வந்ததும், 'மேரா பாகிஸ்தானி சபர்' என்கிற நூலை எழுதினார். பிறகு ஒருங்கிணைந்த சோவியத்திற்கு சென்று வந்ததும், அதுபற்றி ஒரு புத்தகம் எழுதினார். இந்த நூலுக்கு 'சோவியத்லேண்ட் நேரு' என்கிற விருது கிடைத்தது. பஞ்சாப் இதழ்களில் நிறைய சிறுகதைகளும், கவிதைகளும் பால்ராஜ் எழுதியுள்ளார். ஒரு நடிகனாக மட்டுமின்றி, இலக்கிய ஆளுமையாகவும் ஜொலித்த வெகு சில உலக ஆளுமைகளில் பால்ராஜ் சஹானி முக்கியமானவர்.

இடதுசாரி சிந்தனைகள் கொண்டவர் என்பதால், அவர் மீது நிறைய வழக்குகள் பாய்ந்து, ஒரு கட்டத்தில் நடிக்க முடியாமல் போகவே, தயாரிப்பாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, அவரை நடிக்க அழைத்து வந்தார்கள். நீதிமன்றம் அப்போது சில நிபந்தனைகளோடு அனுமதி அளித்தது. காலை எட்டு மணிக்கு தனியாக ஒரு வேனில் சென்றுவிட்டு, மீண்டும் மாலை ஐந்து மணிக்கு சிறைக்கு வந்துவிட வேண்டும் என்ற அந்த நிபந்தனைக்குட்பட்டு, ஒப்புக்கொண்ட எல்லாப் படங்களிலும் நடித்து முடித்தார்.

எல்லாவற்றையும் விட, பால்ராஜ் கடைசியாக நடித்த, கரம் ஹவா திரைப்படத்தை அவர் இறுதி வரை பார்க்கவில்லை. கரம் ஹவா படத்தின் டப்பிங் வேலைகள் முடித்த அடுத்த நாள், பால்ராஜ் சஹானி மரணமடைந்தார் (1973). ஒரு கலைஞனாக இறுதிவரை, சினிமாவுக்கு அவர் நேர்மையான ஒரு நடிகராகவே இருந்து வந்தார். கரம் ஹவா படத்தின் கடைசியாக அவர் பேசிய வசனம், “எத்தனை ஆண்டு காலம் ஒரு மனிதன் தனியாக வாழ்வது?”

இப்படி ஒரு வாழ்க்கை எத்தனை பேருக்கு வாய்க்கும்? தான் நேசித்த சினிமாவின் வாயிலாகவே தன்னுடைய மரணத்தை அறிவித்து சென்றது போல், இயற்கை அவரை அரவணைத்துக் கொண்டது. உலகத்தின் பார்வையை, இந்திய சினிமாவின் மீது திருப்பியதில், பால்ராஜ் சஹானிக்கு பெரும்பங்கு உண்டு. சினிமாவை, அதன் உச்சபட்ச விளைவை சமூகத்திற்காக பயன்படுத்தியவர் பால்ராஜ். அதுவும் ஒரு நடிகனாக இருந்துக் கொண்ட இந்த மாற்றங்களை நிகழ்த்துவது அத்தனை எளிதான காரியமல்ல. இந்தியாவின் மாபெரும் கலைஞனாக, நடிப்பில் இன்றைக்கும் சக்கரவர்த்தியாக இருக்கும் பால்ராஜுக்கு இதுவரை இந்தியாவில் ஒரு விருது கூட கொடுக்கவில்லை என்பது எத்தனை பெரிய சோகம்.

இடதுசாரி சிந்தனை கொண்டவர் என்கிற ஒரே காரணத்திற்காகத்தான் அவரை இந்திய சினிமா புறக்கணித்தது என்றால், இந்திய சினிமாவிற்கு என்றுமே விமோச்சனம் கிடையாது.

உலக அளவில் இந்திய சினிமாவிற்கு கிடைத்த முதல் விருது, கேன்ஸ் திரைப்பட விழாவில், பால்ராஜ் சஹானி நடித்த டூ பிக்ஹா ஜாமீன் (1953)-க்குதான் கிடைத்தது. தன்னுடைய வாழ்வையே, சினிமா எனும் கலை வழியே சமூக மாற்றத்திற்கும், எளிய மக்களின் வாழ்க்கை தரத்தின் மேம்பாட்டிற்கும் அர்ப்பணித்த ஒரு கலைஞனை எப்போது இந்திய சினிமா கண்டுக் கொள்ளப்போகிறது?

பால்ராஜ் சஹானி போன்ற, எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், சினிமா ஒரு கட்புலன் ஊடகம், அது நிகழ்த்தக் கூடிய மாற்றங்கள் அசாத்தியமானது என்பதை புரிந்துக் கொண்ட பல கலைஞர்கள்தான் இந்திய சினிமாவின் இந்த நூற்றாண்டுப் பயணத்தின் பிரதான முன்னோடிகள். அவர்களை மறந்து, இருட்டடிப்பு செய்து நாம் கொண்டாடும் இந்த நூற்றாண்டு யாருக்காக? எதற்காக?

பால்ராஜ் சஹானி நடித்து, கேன்ஸ் திரைப்பட விழாவில் பரிசுப் பெற்ற அவரது டூ பிக்ஹா ஜாமீன் படத்தைப் பார்க்க: >http://www.youtube.com/watch?v=3oo41oae-B0

நன்றி: காஷ்யபன், (பால்ராஜ் பற்றி நண்பர் காஷ்யபன்தான் எனக்கு நினைவுப்படுத்தினார்).

Meri Filmi Aatmakatha (பால்ராஜ் அவர்களின் சுயசரிதை)

அருண்.மோ, கட்டுரையாளர் - தொடர்புக்கு thamizhstudio@gmail.com

வலைத்தளம் >www.thamizhstudio.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x