Last Updated : 29 Sep, 2016 09:30 AM

 

Published : 29 Sep 2016 09:30 AM
Last Updated : 29 Sep 2016 09:30 AM

இதுதான் நான் 45: ஒரு அழகான அங்கீகாரம்!

ஹிந்தியில நான் இயக்கிய ‘ஆர் ராஜ்குமார்’ ரிலீஸான ரெண்டாவது வாரத்தில் படத் தயாரிப்பாளரிடமிருந்து ஒரு கடிதம் எனக்கு வந்தது. ‘‘உங்க ‘ஆர் ராஜ்குமார்’ பட ஸ்கிரீன் பிளேவை எங்க ஆஸ்கர் லைப்ரரிக்கு எடுத்துக்குறோம்’’னு ஆஸ்கர் குழு அனுப்பிய கடிதம்தான் அது. நானும் என் டீமும் உட்கார்ந்து ஒரு ஸ்கிரிப்ட்டைப் பேச ஆரம்பிச்சு, அதுக்கு அப்பறம் நானும் ரைட்டர் சிராஜ் அகமதும் துபாய்க்குப் போய், நாலே நாட்கள் உட்கார்ந்து ஃபைனல் பண்ணிட்டு வந்த ஸ்கிரீன் பிளே அது. அதுக்கு நல்ல அங்கீகாரம் கிடைச்சிருக் கேன்னு ரொம்ப சந்தோஷமா இருந்தது!

அது வரைக்கும் படம் சரியில் லைன்னு எழுதினவங்கள்லாம் ரிலீஸான மூணாவது, நாலாவது வாரத்தில் படத்தை பத்தி பாசிடிவ்வா எழுத ஆரம்பிச்சாங்க. அப்பவும்கூட படம் ஆஸ்கர் லைப்ரரிக்குப் போயிருக்கிற செய்தியை பெருசா யாரும் குறிப்பிடலை. ஏன்னா, படம் நல்லா கலெக்‌ஷன் ஆகிட் டிருந்த ஆரம்பத்திலேயே பல பேர் திட் டித்தான் எழுதுனாங்க. அப்படியெல்லாம் எழுதிட்டு, எப்படி திடீர்னு இந்த விஷயத்தை எழுதுறதுன்னு நினைச் சாங்களோ, என்னவோ?

நானும் அப்போ அதை பெருசா யாரிடமும் சொல்லிக்கலை. ஏன், சின்ன பிரஸ் மீட் கூட வைக்கலை. எங்க டீம் உழைப்புக்கு அந்த நேரத்தில் ஒரு அழகான அங்கீகாரம் கிடைச்சதை, உங்களிடம் இப்போ பதிவு செய்ய ணும்னு எனக்கு தோணுச்சு.

எல்லாமே இங்கே சரியா நடக்கு தான்னா, அதுதான் இல்லை. ஒரு விஷ யம் செய்யும்போது அதை விமர்சனம் செய்றாங்க. செய்யட்டும். கண்டிப்பா, அதுதான் உழைக்கிறவங்களுக்கு இன்னும் உற்சாகம் தரும். ஆனா, அப்படி விமர்சிக்கிறப்ப, திட்டுறப்ப நல்லவிதமா விமர்சிக்கணும், திட்டணும். ஸ்கூல்ல பரீட்சை எழுதுற ஒரு பையன் ஃபெயிலாயிட் டான்னா, அப்போ அவன் இனிமே படிக்கவே கூடாதா? ரன்னிங் ரேஸ்ல ஓடுற ஒருத்தன் எட்டாவதா வர்றான். அவன் இனி எப்பவுமே விளையாடக் கூடாதா? அப்புறம் ஏன் ‘முயற்சி செய்… முயற்சி செய்’னு ஸ்கூல்ல திரும்பத் திரும்ப சொல்லித் தர்றோம்? பல கட்ட முயற்சிக்குப் பின் ஜெயித்த கஜினி முகமது கதையெல்லாம் பாடத்துல ஏன் வைக்கிறோம்? இதெல்லாம்தான் ‘ஆர் ராஜ்குமார்’படம் ரிலீஸானப்ப நடந்தது. நாம் செய்ற தப்பை சுட்டிக் காட்டுறவங்க, அதை நல்லவிதமா சுட்டிக் காட்டுனா நல்லா இருக்கும்னு தோணுது. திருட்டு வி.சி.டி பிரச்சினையில் கூட இப்படித்தான். ‘நாங்க காசு கொடுத்துத்தானே வாங்கி பார்க்கிறோம்’னு சிலபேர் சொல்றாங்க. இது சரியான பதிலா, என்ன? இப்படி இங்கே நிறைய மாற வேண்டியது இருக்கு.

‘வான்டட்’ படத்தை எடுக்கிறதுக்காக ஒரு டைரக்டரா முதன்முறையா ஹிந்திக்குள்ள போறேன். அப்போ அங்கே என்ன ஸ்டைல் இருக்குன்னு எனக்குத் தெரியாது. என்னோட ஸ்டைல் பிடிச்சுப் போய்தான் அங்கே என்னைக் கூப்பிட்டாங்க. படத்தோட டிஸ்கஷனை ஹைதராபாத்துல ஆரம்பிச்சோம். அப்போ என்னை சந்திக்க ரைட்டர் சிராஜ் அகமது வந்தார். வரும்போது 350 பக்க திரைக்கதை, வசனத்தோட வந்தார். ‘‘என்ன இது?’’ன்னு கேட்டேன். அவர் ‘‘தயாரிப்பாளர் போனி கபூர் சார், ஒரு மாததுக்கு முன்னால ‘போக்கிரி’ படத்தை கொடுத்து வசனமும், திரைக்கதையும் எழுத சொன்னார். அதுதான் இது’’ன்னு சொன்னார். ‘‘ஒரு ஸீனை படிங்க’’ன்னு சொன்னேன். அந்த ஸீனை நாலு பக்கங்களில் எழுதியிருந்தார். படிச்சு முடிச்சதும், ‘‘நல்லா இருக்கு’’ன்னு சொல்லிட்டு, ‘‘இந்த நாலு பக்கத்தில் இருக்கிற விஷயத்தை ரெண்டு பக்கத்தில் கொண்டு வர முடியுமா?’’ன்னு கேட்டேன். அவர், ‘‘எப்படி சார் அது?’’ன்னார். முயற்சி பண்ணுங்கன்னு சொன்னேன்.

அதில் சில இடங்கள்ல ரிப்பிட்டேஷன் இருந்துச்சு. அதையெல்லாம் சரி செஞ்சதும் ரெண்டு பக்கத்துக்குள்ளே வந்தது. அதை ஒரு பக்கமா மாற்றச் சொன்னேன். ‘‘சார் அது முடியவே முடியாது. ஸீன்ல ஒரு பிகினிங், எண்ட் வேணுமே?’ன்னார். ‘‘பிகினிங், எண்ட் விஷுவலா நான் பார்த்துக்கிறேன். விஷயத்தை டயலாக்குக்குள்ளே கொண்டு வாங்க’ன்னு சொன்னேன். கொண்டு வந்தார். ஒரு பக்கமாச்சு. அந்த ஒரு பக்கத்தையும், ஆறு வரிகள்ல கொண்டு வரச் சொன்னேன். என்னை பார்த்தார். சிரிச்சிட்டே சைகையிலயே பண்ணுங்கன்னு சொன்னேன். இந்த ஆள் நம்மை விட மாட்டார்னு அவருக்கு தெரிஞ்சுபோய், அரை மணி நேரம் டைம் கேட்டு வாங்கிட்டுப்போய் ஆறு வரிகளுக்குள்ளே கொண்டு வந்தார்.

சிரிச்சிகிட்டே, ‘‘நீங்க எழுதின 4 பக்கமும் இந்த ஆறு வரியில வந்துடுச்சா?’’ன்னு கேட்டேன். ‘‘பிரபு சார், நான் நிறைய எழுதியிருக்கேன். இப்படி 4 பக்கத்தை 6 வரிகளுக்குள்ளே கொண்டு வந்தது லைஃப்ல முதல் அனுபவம். உங்க மூலமா புது ஸ்டைலை கத்துகிட்டேன்’ன்னு சொன்னார். திரும் பவும் நான், ‘‘நீங்க எழுதின 350 பக்க டயலாக் போர்ஷனை படமா எடுத்தா எவ்வளவு நேரமாகும்னு கேட்டேன். ‘‘நாலு மணி நேரம் ஆகும்’’னு சொன் னார். ‘‘இப்போ?’’ன்னு நான் கேட்டேன். அதுக்கு, ‘‘ரெண்டரை மணி நேரத்துக் குள்ள வந்துடும்’’னு சொன்னார். அந்த ஒரு மணி நேர படத்துக்கு வேஸ்ட் ஆகிற உழைப்பு, பணத்தை அப்பவே மிச்சம் செய்தாச்சு. ‘வான்டட்’ வெற்றிக் குப் பிறகு ‘ரவுடி ரத்தோர்’, ‘ஆர் ராஜ்குமார்’, ‘ராமையா வஸ்தாவையா’, ‘ஆக்‌ஷன் ஜாக்‌சன்’ன்னு நானும், அவரும் தொடர்ச்சியா வேலை பார்க்க ஆரம்பிச்சோம். இப்போ எல்லாம் நானே எங்கேயாவது எக்ஸ்ட்ராவா ஐடியாவோ, எழுதவோ சொன்னா, ‘‘வேணாம் பிரபு பாய்’’னு அவரே கட் பண்ணிடுறார்.

சாதாரணமா எல்லாரும் பேசுறப்ப, ‘‘உங்களுக்கு ஹிந்தி சரியா தெரியாதே. எப்படி படம் பண்றீங்க? டயலாக் எல்லாம் ஷார்ப்பா, பன்ச்சோட எப்படி வைக்க முடியுது?’’ன்னு கேட்கிறாங்க. இதுக்கு முன்னால சொன்னதுதான் உதாரணம். அதனாலதான், எங்க படத்தில் வந்த டயலாக்ஸை போன் ரிங் டோனா பல பேர் வெச்சிருக்காங்க.

‘வான்டட்’ஹிந்தியில முதல் படம்கிற தால ஸ்கிரீன் பிளேவை முடிக்க எவ்வளவு நாட்கள் எடுத்துக்கிட்டோம்னு சரியா ஞாபகத்தில் இல்லை. ஆனா, கொஞ்ச நாட்கள்லயே முடிச்சிட்டோம். ‘ரவுடி ரத்தோர்’ படத்தோட ஸ்கிரீன் பிளேவை கோவாவுல உட்கார்ந்து ஏழு, எட்டு நாட்கள்ல எழுதி முடிச்சோம். முன்னாலயே சொன்ன மாதிரி ‘ஆர் ராஜ்குமார்’ படத்தை துபாய்ல உட் கார்ந்து நாலு நாட்கள்ல முடிச்சோம். ‘ராமையா வஸ்தாவையா’வும் அப்படித் தான். அதுலயும் ‘வான்டட்’, ‘ரவுடி ரத்தோர்’, ‘ஆர் ராஜ்குமார்’ பண்ணும் போது தமிழ்ப் பட டைரக்‌ஷன் வேலைல யும் இருந்தேன், பர்சனலாவும் சில வேலைகள் இருந்தன. டான்ஸ் ஷோவுலேயும் கவனம் செலுத்திட்டிருந் தேன். அந்தப் படங்களெல்லாம் நல்லாப் போச்சு. ஆனா, ‘ஆக்‌ஷன் ஜாக்‌சன்’ படம் நினைச்ச மாதிரி போகலை. அது ஏன்னு அடுத்த வாரம் சொல்றேனே.

- இன்னும் சொல்வேன்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x