Last Updated : 19 Nov, 2015 10:25 AM

 

Published : 19 Nov 2015 10:25 AM
Last Updated : 19 Nov 2015 10:25 AM

இதுதான் நான் 2 - நண்பனே இல்லாதவன்டா!

சென்னையில்தான் பிறந்தேன். ரெண்டு வயசு வரைக்கும் மைசூர் பக்கத்தில் இருந்த தூரா கிராமத்தில்தான் வளர்ந்ததெல்லாம். அது அம்மா வழி பாட்டி வீடு. இந்த உலகம் அங்கிருந்துதான் எனக்கு அறிமுகமானது. தூரா ஓர் அழகான கிராமம். பாட்டிக்கு நான் ரொம்பவும் செல்லம். தாத்தாவுக்கு அண்ணன் ராஜூ செல்லம். ‘சமையல் அறைக்கு பாட்டி எப்போ போவாங்க? நொறுக்குத் தீனி என்ன கிடைக்கும்’னு அவங்களை எப்பவும் சுத்திக்கிட்டே இருப்படா தம்பி’னு அம்மா இப்பவும் சொல்வாங்க.

வயசு கூடியதும் பள்ளிக்கூடத்துக்குப் போயாகணுமே! ரெண்டு வயசானதும் அம்மா சென்னைக்கு அழைச்சுட்டு வந்துட்டாங்க. அப்போ மயிலாப்பூர் கச்சேரி சாலையில்தான் எங்க வீடு இருந்தது. ராமகிருஷ்ணா மடம் இருக்கே, அதுக்கு பக்கத்தில் அப்போ இருந்த கேம்பிரிட்ஜ் பள்ளியில்தான் மூன்றாம் வகுப்பு வரை படிச்சேன். பிரைமரி ஸ்கூல் அது. ஒரு சின்ன வீட்டுலதான் வகுப்பு நடக்கும். வீட்டுக்குப் பக்கத்தில் இருந்ததாலும், அப்பாவுக்கு அந்தப் பள்ளிக்கூடத்தை நடத்துறவர் நண்பர்ங்கிறதாலும் அங்கே என்னைச் சேர்த்துவிட்டாங்க. அப்போ பாடம் சொல்லிக்கொடுக்க ஜூலி மிஸ், ராஜி மிஸ்னு இருந்தாங்க. அவங்க முகமெல்லாம் இப்பவும் எனக்குப் பசுமையா ஞாபகத்த்தில் இருக்கு.

அப்பாவோட நண்பர்களோ, அம்மாவுக்கு தெரிஞ்சவங்களோ வீட்டுக்கு வரும்போது ‘எந்த ஸ்கூல்ல படிக்கிறே’னு கேட்டா காலரைத் தூக்கிவிட்டு கெத்தா ‘கேம்பிரிட்ஜ்’னு சொல்வேன். எல்லோரும் லண்டன்ல இருக்குற கேம்பிரிட்ஜ்ல படிக்கிறதா நினைச்சுக்கிட்டு ஆச்சர்யமா பார்ப்பாங்க. அந்த வயசுல அதில் ஒரு சந்தோஷம். மஞ்சள் கலர் மிலிட்டரி ஸ்கூல் பேக் அப்போ ரொம்ப ஃபேமஸ். நமக்கும் ஒரு மிலிட்டரி பேக் கிடைச்சா எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்னு தோணும். அந்த டைம்ல நான் ஸ்டீல் பெட்டியில் புத்தகங்களை எடுத்துட்டுப் போவேன். மூன்றாம் வகுப்பு வரைக்கும் படிப்பில் நான் சமத்து. வகுப்பில் ரெண்டாவது, மூணாவது ரேங்க் வாங்கிடுவேன். அதுலேயும் நான் கிளாஸ் லீடர் வேற.

இப்படி நல்லா போய்ட்டிருந்த பள்ளிக்கூட வாழ்க்கையில் திடீர் திருப்பம். மூன்றாம் வகுப்புலேர்ந்து, நாலாம் வகுப்புக்கு மாறினேன். வகுப்பு மட்டும் அல்ல; பள்ளிக்கூடமும்தான். எதுவும் சொல்லாமல் கொண்டுபோய் சாந்தோம் மான்ட்போர்ட் பள்ளியில் சேர்த்துவிட்டுட்டாங்க. பள்ளிக்கூடம் மாறினதும் மனசளவில் ரொம்பவே டிஸ்டர்ப் ஆயிட்டேன். வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த பள்ளிக்கூடம் திடீர்னு கொஞ்சம் தூரத்துக்குப் போயிடுச்சேன்னு பெரிய கவலை. பழைய பள்ளிக்கூடத்துத் திண்ணையில் நின்னு குதிச்சி விளையாடினா, தலைக்கு மேல கூரை தட்டும். அதே திண்ணையில்தான் படிப்பதும் விளையாடுவதும். அப்படி திரிஞ்ச மனசுக்குத் திடீர்னு கண்கள் கூசும் அளவுக்கு பெரிய பெரிய கட்டிடங்கள், காம்பவுண்ட் என்று புதுப் பள்ளிக்கூடம் மலைக்க வெச்சுது.

அஞ்சாம் வகுப்பு வரைக்கும் பள்ளிக்கூடப் பெயர் மான்ட்போர்ட்னு இருந்தது. ஆறாம் வகுப்புக்கு மாறினதும் சாந்தோம் ஸ்கூல்னு இருக்கும். வீட்டுல இருந்து கொஞ்ச தூரம்தான். இருந்தாலும் ரொம்ப தூரம் போய் படிச்சுட்டு வர்ற மாதிரியே ஓர் உணர்வு. பள்ளியில் ஏ,பி,சி,டி,இ…ன்னு ஏகப்பட்ட செக்‌ஷன் இருக்கும். அதெல்லாம் எனக்கு பிரம்மாண்டமா தெரிஞ்சுது. என்னோட பழைய பள்ளிக்கூட நண்பர்கள் எல்லோரையும் மிஸ் பண்ணினேன். ஏதோ என்னை கடலில் தள்ளிவிட்டது மாதிரி ஒரு ஃபீலிங். பதினோறாம் வகுப்பு வரைக்கும் அங்கேதான் படிச்சேன்.

நான் மொத்தம் படிச்சதே அவ்வளவுதான். மூன்றாம் வகுப்பு வரைக்கும் ரெண்டாவது, மூணாவது ரேங்க் வாங்குனவன் பள்ளி மாறிய பிறகு, பெருசா ரேங்க் வாங்கலை. குட்டியா இருந்த என் உலகம் ரொம்ப பெருசா மாறியது. என்னோடு இருந்த ஃபிரெண்ட்ஸ் எல்லோரும் என்னை விட்டுட்டு தூரமா போன மாதிரி இருந்தது. இப்படி ஒரு மனநிலையோட என்னால நல்லா படிக்க முடியலை. பள்ளிக்குப் போவேன், வருவேன், அவ்வளவுதான்.

அந்த நேரத்தில் மனசுக்குப் பிடிச்ச ஒரு நண்பன் கிடைச்சா எப்படி இருக்கும்? எனக்கு தர்மா கிடைத்தான். நாலாம் வகுப்பில் என்னோடு அறிமுகமான தோழன். அந்தப் பள்ளியில் எனக்குக் கிடைத்த முதல் நண்பன். ‘‘யார் டா? நீ’’ என்றான். ‘‘நண்பனே இல்லாத வன்டா’’ னு சொன்னேன். கொஞ்ச நேரம் யோசிச் சவன் ‘‘கவலைப்படாதே, இனி நாம் ஃபிரெண்டா யிடலாம்டா’’னு சொன்னான். முதன்முதலா மனசில் ஒரு துளி சந்தோஷம் துளிர்த்தது.

படிக்கட்டுகளில் ஒண்ணாவே ஏறுவோம் ஒண்ணாவே லஞ்ச் சாப்பிடுவோம். நான் குறும்பு பண்றப்ப, அவன் மிஸ்கிட்டே அடி வாங்குவான். இப்படி ஒரு நண்பன் கிடைச்சா எப்படி இருக்கும் வாழ்க்கை! துளித் துளியா என் சந்தோஷம் அதிகமாச்சு. படிப்பு பெருசா வரவில்லை. ஆனால், நல்ல நண்பன் கிடைச்சான். அப்புறம் வேறென்ன? எப்போதும் விளையாட்டுதான். அஞ்சாம் வகுப்பு படிக்கும்போது நான்தான் பாஸ்ட் பவுலர். ஆறாம் வகுப்புக்குப் போனதும் ஃபுட்பால் பிரியனா மாறிட்டேன். கிரிக்கெட்டை விட ஃபுட்பால்தான் ஆல்டைம் பேவரைட்டா என் உள்ளத்துக்கு நெருக்கமாச்சு.

மான்போர்ட் பள்ளியில் இங்கிலீஷில்தான் பேசணும். தத்தித் தத்தித்தான் கத்துக்க ஆரம்பிச் சேன். பள்ளிக்கு ரெகுலரா போகிற பழக்கம் இருந்தாலும் படிப்பு மட்டும் ஏனோ செட் ஆகவே இல்லை. மூணாம் வகுப்பில் வாங்கிய டாப் ரேங்கை எப்படியாவது எட்டிப் பிடிப்போம்னு நினைப்பேன். பதினோறாம் வகுப்பு வரைக்கும் அதை எட்டவே முடியலை. ‘‘அதிகம் ஏன் பேச மாட்டேங்குறீங்க?’’னு இப்பவும் பல பேர் என்னிடம் கேட்பாங்க. என் சின்ன வயசில் பள்ளிக்கூட மாற்றம் கொடுத்த அமைதி தான்னு நினைச்சிப்பேன். ஆனால் சொல்ல மாட்டேன்!

எங்கள் பள்ளியில் இலங்கை, அமெரிக்கா, கனடானு பல நாட்டுலேர்ந்து வந்து பசங்க படிப்பாங்க. ஒரு தடவை ‘கனடாவுலேர்ந்து யாரெல்லாம் இங்கே வந்து படிக்கிறீங்க?’னு மிஸ் கையைத் தூக்கச் சொன்னாங்க. நானும் கை தூக்கினேன். ‘‘டேய் நீ மயிலாப்பூர்டா’’னு நண்பர்கள் காதில் கிசுகிசுத்தாங்க.

‘‘இல்லடா, எனக்கும் கன்னடம் தெரியும். எங்க அம்மா அங்கேதான் பொறந்தாங்க’’னு சொன்னேன். கனடாவுக்கும், கன்னடத்துக்கும் வித்தியாசம் தெரியாத அந்த நாட்கள் அப்பாவித் தனமாகவே நகர்ந்தன.

பாடங்களை படிக்கிற, மார்க் எடுக்கிற விஷயங்களில் நான் சுமாரா இருந்தாலும், ஆண்டுத் தேர்வுன்னா எனக்கு ரொம்ப உற்சாகம் வந்துடும். அது ஏன்?

- இன்னும் சொல்வேன்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x