Published : 13 Dec 2014 11:08 AM
Last Updated : 13 Dec 2014 11:08 AM

ஆலன் புல்லக்

அரசியல் அறிஞர், வரலாற்று அறிஞர், கல்வியாளர் என்று பன்முகத் திறன் கொண்ட ஆலன் லூயிஸ் சார்லஸ் புல்லக் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

 இங்கிலாந்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். வாசிப்பில் அதிக ஆர்வம் இருந்ததால், கிடைக்கும் பணத்தில் புத்தகம் வாங்க தாராளமாக செலவழித்தனர் பெற்றோர்.

 இவர், அப்பாவின் பிரியமான தோழர். ‘என் அப்பா அசாதாரண மன வலிமை படைத்தவர். அவரை அறிந்தவர்கள் அனைவரிடத்திலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர்’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். பள்ளிப் படிப்பு முடித்த பிறகு, ஆக்ஸ்போர்டு, வட்ஹம் கல்லூரியில் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. வரலாறு பயின்றார்.

 1938-ல் பட்டப்படிப்பு முடித்த பிறகு, இரண்டாம் உலகப் போர் நடந்துவந்த நேரத்தில், ராணுவத்தில் சேர ஆசைப்பட்டார். ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டதால் இது நிராசையானது.

 அப்போது ‘ஹிஸ்ட்ரி ஆஃப் தி இங்கிலீஷ் ஸ்பீக்கிங் பீப்பிள்ஸ்’ என்ற புத்தகத்தை எழுதிக்கொண்டிருந்த வின்ஸ்டன் சர்ச்சிலிடம் துணை ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்தார். 20-ம் நூற்றாண்டின் ஐரோப்பிய வரலாறு குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

 பிபிசி நிறுவனத்திலும் பணிபுரிந்துள்ளார். போர் முடிந்த பிறகு வரலாற்று ஆராய்ச்சிக் கல்விக்காக ஆக்ஸ்போர்டு திரும்பினார். லண்டன் செயின்ட் கேத்தரீன் கல்லூரி நிறுவனர்களில் இவரும் ஒருவர். தனி ஆளாக பல நிறுவனங்களைத் தொடர்புகொண்டு இந்த கல்லூரி வளர்ச்சிக்காக 2 மில்லியன் டாலர் நிதி திரட்டினார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் முதல் முழுநேர துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.

 கட்டுமஸ்தான உடற்கட்டுடன் கம்பீரமாக தோற்றமளித்ததால் சக பேராசிரியர்களும் மாணவர்களும் இவரை ஒரு ஹீரோபோல பார்த்தனர். விதிகளுக்குக் கட்டுப்படாமல் இருந்த பல மாணவர்களை தன் ஆளுமையால் கட்டுப்படுத்தினார்.

 ஹிட்லரின் வாழ்க்கை வரலாற்றை ‘ஹிட்லர்: எ ஸ்டடி இன் டைரனி’ என்ற பெயரில் புத்தகமாக எழுதி 1952-ல் வெளியிட்டார். ‘ஹிட்லர் ஒரு சந்தர்ப்பவாத சாகச விரும்பி, அவநம்பிக்கைவாதி, கொள்கை அற்றவர். வாழ்நாள் முழுவதும் இவரது செயல்பாடுகள் அனைத்தும் அதிகார வேட்கையால் தூண்டப்பட்டே அமைந்திருந்தது’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார். விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் இப்புத்தகம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

 சுமார் 40 ஆண்டுகள் கழித்து ‘ஹிட்லர் அண்ட் ஸ்டாலின்: பேரலல் லைஃப்’ என்ற புத்தகத்தை எழுதினார். ஏராளமான பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். நாஸிசம், சோவியத் கம்யூனிஸம் பற்றி உண்மையான, துல்லியமான தகவல்களுடன் பல நூல்கள் எழுதியுள்ளார்.

 பல்வேறு பல்கலைக்கழகங்களில் உரை நிகழ்த்தியுள்ளார். செவாலியர் விருது, சர் பட்டம் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். சிறந்த அரசியல் அறிஞர், வரலாற்று அறிஞர், கல்வியாளர் என்று பன்முகத் திறன் கொண்ட ஆலன் லூயிஸ் சார்லஸ் புல்லக் 89-வது வயதில் மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x