Published : 29 Apr 2017 10:13 AM
Last Updated : 29 Apr 2017 10:13 AM

அப்துற் றஹீம் 10

தமிழில் சுயமுன்னேற்ற நூல் முன்னோடி

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த படைப்பாளிகளுள் ஒருவரும் தமிழில் முதன்முதலாகச் சுய முன்னேற்ற நூல்களைப் படைத்தவருமான அப்துற் றஹீம் (Abdul-Rahim) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் பிறந்தார் (1922). தொண்டி அரபி மதரஸாவில் அரபு மொழியில் தேர்ச்சி பெற்றார். பின்னர் தொண்டியிலும் காரைக்குடியிலும் ஆரம்பக் கல்வி கற்றார். புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் இன்டர்மீடியட்டும் சென்னை முகம்மதன் கல்லூரியில் பி.ஏ. பட்டமும் பெற்றார்.

* சிறிது காலம் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தார். அப்போது அந்த ஊரில் இலவச நூலகம் திறக்கப்பட்டது. புத்தகங்களை விஷயவாரியாகப் பிரித்து அட்டவணை தயாரிக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது.

* அப்போது அங்கே ‘லார்ட் ஆஃப் அரேபியா’ என்ற நூலைப் பார்த்தவுடன், இதை நாம் மொழிபெயர்த்தால் என்ன என இவருக்குத் தோன்றியது. இது இவரது வாழ்வையேப் புரட்டிப் போட்டது. அதை ‘அரேபியாவின் அதிபதி’ என்ற நூலாகப் படைத்தார். தமிழறிஞர் சாமிநாத சர்மா இதற்கு அணிந்துரை எழுதி சிறப்பு செய்தார். சக்தி காரியாலயம் இந்நூலை வெளியிட்டது. இது வெளிவந்தபோது இவருக்கு வயது 22.

* ‘சுதந்திர நாடு’ என்ற பத்திரிகையின் ஆசிரியராக அப்போது பணி யாற்றினார். யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் என்ற பதிப்பகத்தைத் தொடங்கினார். 1948-ல் ‘வாழ்க்கையில் வெற்றி’ என்ற இவரது நூல் வெளிவந்தது. தமிழின் முதல் வாழ்வியல் நூலான இது வாசகர்களின் ஆதரவு பெற்று விற்பனையில் சாதனை படைத்தது.

* தொடர்ந்து சுய முன்னேற்ற நூல்கள், சிறுவர் இலக்கியம், மொழிபெயர்ப்பு நூல்கள், சமய இலக்கியம் என எழுதிக் குவித்தார். 35 சுயமுன்னேற்ற நூல்கள் தவிர 9 வரலாற்று நூல்கள், 8 மொழிபெயர்ப்பு நூல்கள், மற்றும் 5 புதினங்களையும் படைத்துள்ளார்.

* லியோ டால்ஸ்டாய், ஆபிரஹாம் லிங்கன் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய இவரைக் கவுரவிக்க வேண்டும் என அன்றைய அமெரிக்க அதிபர் அழைப்பு விடுத்தபோது, அங்கு வந்து போகும் சமயத்தில் நான் இரண்டு நூல்களை எழுதி விடுவேன் என்று கூறிவிட்டாராம். பிறகு சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.

* மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். பட்டம், பாராட்டு களைத் தவிர்த்தார். தன் புகைப்படங்களைக்கூட வெளியிட விரும்பாத அளவுக்குத் தன்னடக்கம் மிக்கவர். மேடைகளில் தன்னைப் பற்றியோ தன் எழுத்துகளைப் பற்றியோ பேசியதில்லை.

* முகம்மது நபியின் வாழ்க்கை வரலாற்றை ‘நபிகள் நாயகம்’ என்ற தலைப்பில் உரைநடையில் எழுதினார். 800 பக்கங்கள் கொண்ட ‘மொஹம்மட் தி புரொஃபட்’ என்ற ஆங்கில நூலையும் எழுதினார். ‘நபிகள் நாயகக் காவியம்’ என்று காப்பிய வடிவிலும் எழுதியுள்ளார்.

* இஸ்லாம் பற்றி மக்களுக்குச் சரியான புரிதல் வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு கடுமையாக உழைத்து, 2,700 பக்கங்கள் கொண்ட ‘இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். மேலும் ‘இஸ்லாமிய தமிழ்ப் புலவர்கள்’ என்ற நூலையும் எழுதினார்.

* ‘பன்னூல் அறிஞர்’ எனப் போற்றப்பட்டார். தமிழ் இலக்கிய உலகில் தனித்துவம் வாய்ந்த ஒரு இடத்தைப் பிடித்தவரும் வாசிப்பையும் எழுத்தையும் இறுதிவரை உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவருமான அப்துற் றஹீம் 1993-ம் ஆண்டு 71-வது வயதில் மறைந்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x